உள்ளிருந்தும் வெளியிருந்தும் நாடு கடந்த தமிழீழ அரசை வேரோடு பிடுங்க நினைக்கும் சக்திகள் :இரா.துரைரத்தினம் (கட்டுரை)

Read Time:15 Minute, 4 Second

நாடு கடந்த தமிழீழ அரசின் நடவடிக்கைகளுக்கு உதவி வழங்க வேண்டாம் என ஐரோப்பிய ஒன்றியத்தை  இலங்கை அரசாங்கம் கோரியிருப்பதை பார்க்கின்ற போது மேற்குலக நாடுகளில் வாழும் தமிழர்களின் நடவடிக்கைகள் பற்றி சிறிலங்கா அரசாங்கம் அச்சம் அடைந்திருக்கிறது என்பதை உணரமுடிகிறது. ஆனால் இலங்கை  அரசாங்கம் அச்சம் அடைகின்ற- சிங்கள தேசம் வேரோடு அழிக்க நினைக்கின்ற நாடு கடந்த தமிழீழ அரசை வேரிலேயே அழிப்பதற்கு உள்ளிருந்தே சிலர் திட்டமிட்டு வருவதாகவும் நாடு கடந்த அரசுக்கான தேர்தல் முடிந்த கையோடு செய்திகள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. எனவே நாடு கடந்த தமிழீழ அரசை வேரோடு அழிப்பதற்கு இலங்கை அரசாங்கம் முயச்சிக்க வேண்டிய அவசியமே இல்லாத அளவிற்கு உள்ளிருக்கும் சக்திகளே அதை அழித்து விடுவார்கள் என்ற அச்சமும் இப்போது மேற்குலக நாடுகளில் உள்ள தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
நாடு கடந்த தமிழீழ அரசு என்ற எண்ணக்கருவை உருவாக்கியவர்கள் ஓரங்கட்டப்பட்டு நாடு கடந்த தமிழீழ அரசுக்கான கட்டமைப்பை கையகப்படுத்துவதற்கான தேர்தலே நடைபெற்றிருப்பதாகவும் அதை கையகப்படுத்தக்கூடியவர்களே பிரதிநிதிகளாக வரக்கூடிய வகையில் வியூகங்கள் அமைக்கப்பட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்ற விவாதமும் தற்போது முன்வைக்கப்பட்டு வருகிறது.

நடந்து முடிந்த நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் மோசடிகள் குழப்பங்கள் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு லண்டன்இ பிரான்ஸ் போன்ற இடங்களில் மீள்வாக்களிப்புக்கான அறிவிப்பு வந்திருக்கும் நிலையில் தெரிவு செய்யப்பட்டவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசின் மதியுரைக்குழுவின் எண்ணக்கருவிற்கு செயல்வடிவம் கொடுக்க கூடியவர்களா என்ற சந்தேகங்களும் எழுப்பபட்டு வருகிறது.
ஆரம்பத்தில் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான அறிவித்தல் வெளிவந்த போது ஒருசாரார் அதை எதிர்த்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். தமிழீழ மக்கள் அவை மூலமே தமிழீழ இலக்கை அடைய முடியும் என்றும் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான மதியுரைக்குழு தமது செயற்திட்டத்தை அறிவித்து அதற்கான தேர்தலை நடத்துவதற்கு முன்வந்த போது நாடு கடந்த தமிழீழ அரசையும் அதன் இணைப்பாளர் உருத்திரகுமாரையும் மிக மோசமாக விமர்சித்தவர்கள் சகல நாடுகளிலும் தமது அணி ஒன்றை நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல் களத்தில் நிறுத்தினர்.

நாடு கடந்த தமிழீழ அரசை தங்கள் வசம் கொண்டு வந்து விட்டால் அதன் செயற்பாடுகளை முடக்கிவிடலாம் என்ற நோக்கத்தில் செயற்பட்ட தரப்பினர் வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்ற செய்திகளும் இப்போது வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.

பிரித்தானியாவில் தென்மேற்கு லண்டன் பகுதியிலும் லண்டனுக்கு வெளியிலும் ஒரு குழுவினர் வாக்கு மோசடியில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திட்டமிட்டவகையில் வாக்கு மோசடி செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல் ஆணையகத்திற்கு பொறுப்பாக இருந்த ஜெயசிங்கம் தெரிவித்திருக்கிறார்.
வாக்கு மோசடி நடைபெற்றது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால் தென்மேற்கு லண்டன்இ மற்றும் லண்டனுக்கு வெளியே உள்ள பகுதிகளில் நடைபெற்ற தேர்தல்கள் செல்லுபடியற்ற தாக்கியிருக்கிறார்கள். லண்டனில் உள்ள தமிழர் குழு ஒன்றுதான் இதை திட்டமிட்டு செய்துள்ளதாகவும் ஏனைய இடங்களில் வெற்றி பெற்றவர்களும் அந்த குழுக்களால் தேர்தலில் நிறுத்தப்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.
தங்களால் நிறுத்தப்பட்டவர்கள் வெற்றிபெற வேண்டும் என்பதில் அக்குழு கங்கணம் கட்டி செயற்பட்டிருக்கிறது என்பதற்கு இந்த வாக்கு மோசடியே ஒரு உதாரணம் என பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

மகிந்த ராசபக்ச எவ்வாறு தன்னுடைய அதிகாரத்தை பாவித்து நாடாளுமன்ற அதிகாரத்தையும் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றிருக்கிறாரோ அதேபோன்றுதான் இங்கும் சிலர் அதிகார பலத்தை பாவித்து வாக்கு மோசடிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது. பிரான்சிலும் இரு தொகுதிகளில் நடைபெற்ற தேர்தல் செல்லுபடியற்றது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பிரித்தானியாவில் மட்டுமல்ல கனடாஇ பிரான்ஸ்இ சுவிசர்லாந்து உட்பட பல நாடுகளில் இந்த குழுவின் திட்டத்திற்கு ஏற்ப செயற்பட கூடியவர்களே வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றும் நாடு கடந்த தமிழீழ அரசின் உருவாக்கத்திற்காக உழைத்த உருத்திரகுமார் போன்றவர்கள் ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்றும் தமிழீழ ஆதரவு இணையத்தளங்கள் என சொல்லிக்கொள்ளும் இணையத்தளங்கள் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன.

எது எப்படி இருப்பினும் மக்கள் குறைந்தளவே வாக்களித்தாலும் நாடு கடந்த தமிழீழ அரசிற்கு மேற்குலக நாடுகளில் உள்ள தமிழ் மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டவர்கள்தான் குறிப்பிட்ட காலத்திற்கு அந்த அமைப்பை வழிநடத்தப் போகிறார்கள். இந்த குழப்பங்களின் மத்தியிலேயே நாடு கடந்த தமிழீழ அரசுக்கான அவை விரைவில் கூட இருக்கிறது.

இன்று இரு தளங்களில் தமிழர்களுக்கான அரசியல் தளங்களை தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்திருக்கிறார்கள். ஓன்று இலங்கையின் தமிழ் மக்களின் தாயகம் என்று சொல்லப்படுகின்ற வடக்கு கிழக்கில் உள்ள தமிழ்மக்களின் பெரும்பான்மையான மக்கள் தங்களுக்கான அரசியல் தலைமை என தமிழ் தேசியக் கூட்டமைப்பை தெரிவு செய்திருக்கிறார்கள்.

இரண்டாவது தாயகத்தில் உள்ள தமிழ் மக்கள் முன்னெடுக்க முடியாத அரசியல் செயற்பாடுகளை செய்வதற்காக மேற்குலக நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் தமக்கான அரசியல் தலைமையாக நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்திருக்கிறார்கள்.

இந்த இரண்டு தளங்களும் தற்போது ஒன்றோடு ஒன்று இணைந்து பயணிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையிலேயே உள்ளன. வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களோஇ அல்லது அவர்களது பிரதிநிதிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்போ மேற்கு நாடுகளில் செயற்படப்போகும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான ஆதரவை வெளிப்படையாக தெரிவிக்க முடியாதவர்களாகவே உள்ளனர். அவ்வாறு அவர்கள் வெளிப்படையான ஆதரவை தெரிவிப்பார்களானால் வடகிழக்கில் அவர்களால் செயற்பட முடியாமல் போகும். அவ்வாறு அவர்கள் வெளிப்படையான ஆதரவை தெரிவிப்பார்கள் என்றால் மகிந்த ராசபக்ச அரச மிக இலகுவாக அவர்களை அந்த தளத்திலிருந்து அகற்றிவிடும். அந்நியப்படுத்தி விடும். அதற்கான அதிகாரமும் சட்டவலுவும் மகிந்தவின் கைகளில் இருக்கிறது. எனவே தமிழ் தேசியக்கூட்டமைப்போ அல்லது அங்குள்ள மக்களோ நாடு கடந்த அரசின் செயற்பாட்டிருக்கு ஆதரவு வழங்கவில்லை என குற்றம் சாட்டமுடியாது. அவ்வாறு எதிர்பார்ப்பதும் தவறு.

எனவே இந்த இரு அரசியல் தளங்களும் இணைந்து பயணிக்க முடியாது என்பதுதான் யதார்த்தம் என்றாலும் நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகள் எந்த மக்களின் அரசியல் உரிமைகளுக்கானதோ அந்த மக்களையும் அவர்களின் அரசியல் தலைமைகளையும் பலப்படுத்தும் வகையில் அமைய வேண்டும்.

ஆனால் இப்பொழுது நாடு கடந்த தமிழீழ அரசுக்கு என தெரிவு செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளுக்கு முற்றிலும் எதிரானவர்களே. எனவே இவர்கள் எவ்வளவு தூரம் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் தலைமையை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் அல்லது அந்த மக்களின் அழிந்து போன வாழ்வியலையும் இழந்த உரிமைகளையும் மீட்பதற்கும் அவர்களின் வாழ்வியலை மீளக்கட்டி எழுப்புவதற்கும் உதவுவார்கள் என்ற சந்தேகம் எழுவது நியாயமானதே.

நாடு கடந்த அரசிற்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் மேற்குலக நாடுகளில் அந்த அமைப்புக்கான சட்ட அங்கீகாரத்தை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். அவ்வாறான ஒரு சட்ட அங்கீகாரம் நாடு கடந்த தமிழீழ அரசுக்கு கிடைக்கும் பட்சத்திலேயே அதன் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். ஆனால் ஆரம்பத்திலேயே சட்டவாளர் உருத்திரகுமாரன் போன்றவர்களை ஒரங்கட்டுவதற்கு எடுத்திருக்கும் நடவடிக்கைகளை பார்க்கும் போது நாடு கடந்த தமிழீழ அரசை கையகப்படுத்தி அதை முடக்குவதற்காகத்தான் சிலர் முயற்சிக்கிறார்களா என்ற சந்தேகம் வலுவடைந்து வருகிறது.

வடகிழக்கில் உள்ள அரசியல் தலைமையான தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று மிகவும் இக்கட்டான ஒரு நிலையிலேயே உள்ளது. மேற்குலக நாடுகளில் உள்ள சிலர் குற்றம் சாட்டுவது போல இந்தியாவின் ஆதரவு அவர்களுக்கு இல்லை என்றே சொல்லவேண்டும். இந்தியா மகிந்த ராசபக்சவையும் மகிந்தவின் ஆதரவு பெற்ற சக்திகளான பிள்ளையான் போன்றவர்களை தனது நண்பனாக வைத்திருப்பது போல தமிழ் தேசியக் கூட்டமைப்பை தனது நட்பு சக்தியாக வைத்திருக்கவில்லை என்பதுதான் உண்மை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பால் ஒரு எல்லைக்கப்பால் எதையும் பேசவோ செயற்படவோ முடியாது. ஒரு நாட்டிற்குள் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமை என்பதற்கு அப்பால் அவர்கள் செல்லக்கூடிய சூழல் அங்கு இல்லை. இலங்கை அரசினால் மட்டுமல்ல இந்தியா உட்பட சில சக்திகளால் நெருக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கும் இலங்கையில் உள்ள தமிழரின் அரசியல் தலைமைக்கு பலம் சேர்க்கும் வகையில் செயற்பட வேண்டிய நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகள் எதிர்காலத்தில் எவ்வாறு இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பே தமிழ் மக்களின் மனங்களில் மேலோங்கி இருக்கிறது.

எனவே இப்போது நாடு கடந்த தமிழீழ அரசுக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கும் பிரதிநிதிகள் மகிந்த அரசுக்கு பெரும் சிரமம் இல்லாத வகையில் நாடு கடந்த தமிழீழ அரசை முடக்கி வேரோடு பிடுங்கி எறியப்போகிறார்களா?

அல்லது நாடு கடந்த தமிழீழ அரசின் மதியுரைக்குழு ஆரம்பத்திலிருந்து எதிர்பார்த்தது போல உலக நாடுகளில் அந்த அமைப்புக்கு ஒரு சட்ட அங்கீகாரத்தை பெற்று பலம் மிக்க அரசியல் தலைமையாகவும்இ இலங்கையில் உள்ள தமிழர் அரசியல் தலைமைக்கு பலம் சேர்க்கும் வகையிலும் செயற்பட போகிறார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.
இரா.துரைரத்தினம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாய் வீட்டுக்குப் போக விரும்பிய மனைவியின் பெண்ணுறுப்பை இரும்புக் கம்பியால் தைத்த கொடூரக் கணவன்
Next post ஜி15 நாடுகளின் தலைமைத்துவம் இலங்கை ஜனாதிபதி வசம்..!