‘சிறையில் மலர்ந்த காதல் போதைப்பொருளுடன் சிக்கியது’
சிறைச்சாலைக்குள் காதலர்களாகி சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்றதன் பின்னர் கணவன் மனைவியாக வாழ்ந்த ஒரு ஜோடியினர் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
800 கிராம் ஹெரோயின் பக்கற்றுகளுடனேயே இவ்விருவரும் மாதிவலவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவ்விருவரும் வழங்கிய தகவல்களின் பிரகாரம் மஹரகமவில் வைத்து மற்றுமொருவர் 400 கிராம் ஹெரோயின் பக்கற்றுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். மிரிஹான விசேட குற்ற விசாரணை பிரிவினரே இவர்களை கைது செய்துள்ளனர்.
மஹரகமவில் வைத்து கைது செய்யப்பட்ட நபரும் சிறைச்சாலையிலிருந்து விடுதலைப்பெற்றவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் சிறையிலிருந்து விடுதலையான மற்றுமொரு பெண்ணான ‘சுது அக்கா’ இந்த போதைப்பொருள் விற்பனையின் பிரதான நபர் என்று தெரிவித்த பொலிஸார் அவரை தேடி வலைவிரித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி ஆறு இலட்சம் ரூபாவாகும் என்று தெரிவித்த பொலிஸார் மாதிவலவில் வைத்து கைதான பெண் இரண்டு மாதங்கள் கர்ப்பிணி என்றும் தெரிவித்தனர்.