ஒரே ஆண்டில் விதர்பாவில் 228 விவசாயிகள் தற்கொலை
மத்திய வேளாண் துறை இணையமைச்சர் தாரிக் அன்வர் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:விவசாயத்தில் ஏற்படும் நஷ்டம் காரணமாக விதர்பா பிராந்தியத்தில் உள்ள 6 மாவட்டங்களில் விவசாயிகள் அடிக்கடி தற்கொலை செய்கின்றனர்.
2013 ஜனவரி 31ம் வரையிலான கடந்த 10 மாதங்களில் இந்த பிராந்தியத்தில் தற்கொலை செய்த விவசாயிகளின் எண்ணிக்கை 228. மகாராஷ்டிரா அரசு கொடுத்துள்ள தகவல்களின்படி கடந்த 2006ம் ஆண்டு இந்த பிராந்தியத்தில் 565 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். 2011ல் இந்த எண்ணிக்கை 346 ஆக குறைந்து இருக்கிறது.
மாநிலம் முழுவதையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் 2006ம் ஆண்டு தற்கொலை செய்த விவசாயிகளின் எண்ணிக்கை 1,035. இந்த எண்ணிக்கை 2011ம் ஆண்டில் 485 ஆக குறைந்துள்ளது. வேளாண் துறைக்கு புத்துயிரூட்டவும், நிரந்தர அடிப்படையில் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.இவ்வாறு அன்வர் கூறினார்.