கங்கா படம் என்னை டாப் ரேஞ்ச் நடிகையாக்கும்! டாப்ஸி நம்பிக்கை!!
ஆடுகளம் டாப்ஸிக்கு அதையடுத்து நடித்த எந்த படமும் கைகொடுக்கவில்லை. ஏதோ மார்க்கெட்டில் இருந்தாலும் பேசப்படும் இடத்தில் இல்லை. இருப்பினும் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்காமல் விடமாட்டேன் என்று தொடர்ந்து போராடி வருகிறார்.
அதனால்தான், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள வலை படத்திற்கான அழைப்பு வந்ததும் உடனே ஓ.கே சொன்னார். அதே படததில் நயன்தாரா இருந்தபோதும் தான் ஓரங்கட்டப்படுவோம் என்பது தெரிந்தும் ஏற்று நடித்தார்.
ஆனால் இப்போதோ புலம்பிக்கொண்டு திரிகிறார் டாப்ஸி. காரணம், அப்படத்தில் இரண்டு ஹீரோயினிகளில் ஒருத்தி என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவருக்கான கேரக்டர் இல்லையாம். ஏதோ ஒரு கேரக்டரில்தான் வருகிறாராம்.
அதனால், அடுத்து தனது முழு நம்பிக்கையையும் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ள முனி மூன்றாம் பாகமான கங்கா படத்தின் மீது திருப்பியிருக்கிறார் அவர்.
காஞ்சனாவை விட இப்படத்தின் நாயகிக்கு கதையில் கூடுதல் பங்கு உள்ளது என்று சொன்ன லாரன்ஸ், சில முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை ரிகர்சல் பார்க்க வேண்டும் என்றும் அழைத்தாராம்.
அப்படி நடித்தபோதுதான் தனக்கு கதையில் பெரிய அளவில் முக்கியத்துவம் உள்ளது என்பதை உணர்ந்து கொண்டாராம் டாப்ஸி. அதனால், ஆடுகளத்துக்கு பிறகு நான் நடித்த படங்கள் என்னை ஏமாற்றியபோதும் இந்த கங்கா படம் என்னை டாப் ரேஞ்ச் நடிகையாக்கும என்று நம்பிக்கையுடன் கூறி வருகிறார்.