ஆனையிறவில் விபத்து படைவீரர் பலி; 7பேர் காயம்..!!
ஏ9 பிரதான வீதியில் ஆனையிறவு உப்பளத்திற்கு அண்மையில் இரவு இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததுடன் 7பொது மக்கள் காயமடைந்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து தனியார் பேருந்து மற்றும் இராணுவத்தின் உழவியந்திரம் என்பன மோதிக்கொண்டதாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இச் சம்பவத்தில் கண்டியைச் சேர்ந்த எஸ்.எம்.மிகின்றாஜ் (வயது39) என்ற இராணுவ வீரரே பலியானவராவார்.
இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து ஒன்று பருத்தித்துறை சாலையிலிருந்து 58பயணிகளுடன் கொழும்புக்குச் சென்றுகொண்டிருந்தது
வவுனியாவிலிருந்து 35பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்தது இராணுவ உழவியந்திரம் உமையாழ்புரத்திலிருந்து தண்ணீர் பவுஸருடன் ஆனையிறவு நோக்கி சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில் இரவு 8.50மணியளவில் தனியார் பேருந்து இராணுத்தின் உழவியந்திரத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது தண்ணீர் பவுஸருடன் மோதியதால் அதனைச் செலுத்திச் சென்ற சாரதியும் நிலை தடுமாறியவேளை நேரெதிரே வந்துகொண்டிருந்த இ.போ.ச பேருந்து உழவியந்திரத்தை மோதித் தள்ளியதுடன் அருகிலேயிருந்த தரவைப் பகுதியில் தடம்புரண்டது.
இந்த விபத்தில் உழவியந்திரச் சாரதியான இராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இ.போ.ச. பேருந்தில் சென்ற நான்கு பயணிகளும் தனியார் பேருந்தில் சென்ற மூன்று பயணிகளும் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் உடனடியாகவே கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதேவேளை குறித்த இ.போ.ச பேருந்து சாரதி சம்பவ இடத்திலிருந்து தலைமறைவாகியுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.