தேர்தல் நீதியாக நடக்க வேண்டும் அவுஸ்திரேலிய விருப்பம் -யாழ்.ஆயர்
வடக்கு மாகாண சபைத் தேர்தல் நீதியானதாகவும் சுதந்திரமாகவும் நடைபெற வேண்டும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் விரும்புகின்றது என யாழ்.ஆயர் அதி.வண தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் றொபின் மூடி அம்மையார் நேற்று மாலை யாழ்.ஆயர் இல்லத்தில் ஆயரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பின் பின்னரே யாழ்.ஆயர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் தொடர்பாகவும் தேர்தலில் மக்கள் எந்தளவு ஆர்வமாக உள்ளனர் என்பது தொடர்பாகவும் அறிந்து கொள்வதற்காகவே இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் யாழ்.வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
நீண்ட இடைவெளியின் பின்னர் வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெறுகின்ற நிலையில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றையே உலக நாடுகளைப் போல அவுஸ்திரேலிய அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
தமிழ் மக்களுக்கு இந்த மாகாண சபைத் தேர்தல் ஏன் முக்கியமானது? என்பது தொடர்பாகவும் தூதுவர் கேள்வி எழுப்பினார். இதன்போது தமிழ் மக்கள் தமக்கு விருப்பமான பிரதிநிதிகளை ஜனநாயக ரீதியாக தெரிவு செய்வதற்கு இந்த தேர்தல் முக்கியமானது என சுட்டிக் காட்டப்பட்டது.
மேலும் இந்த தேர்தலின் சாதக பாதகங்கள் தொடர்பாகவும் மக்கள் தேர்தலில் கொண்டுள்ள ஆர்வம் தொடர்பாகவும் அவர் கேட்டறிந்து கொண்டார் எனவும் ஆயர் மேலும் தெரிவித்துள்ளார்.