கள்ளத்தொடர்பால் குடும்பஸ்தர் கொலை: இளைஞர் கைது
கள்ளத்தொடர்பு காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவரைக் கொலை செய்தமை தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவத்தில் பத்துளுஓயா பிரதேசத்தை சேர்ந்த காளிதாசன் உதயச்சந்திரன் (வயது 32) எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையே படுகொலை செய்யப்பட்டவராவார்.
உயிரிழந்தவரின் சடலம் கடந்த சனிக்கிழமை அதிகாலை பத்துளு ஓயா பாலத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவரின் சடலத்திற்கு அருகில் மீட்கப்பட்ட கையடக்கத் தொலைபேசியை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை மேற்கொண்ட முந்தல் பொலிஸார் அப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது கொலை தொடர்பான விபரங்களைப் பெற முடிந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரின் மனைவியுடன் கள்ளத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்ததன் காரணமாகவே இக்கொலையைச் செய்ததாகவும் முதலில் பொல்லால் தாக்கியதாகவும் பின்னர் கத்தியால் கழுத்தை வெட்டியதாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் முந்தல் பொலிஸார் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.