போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு சந்தர்ப்பம்
மூன்று தசாப்தங்களாக போரினால் பாதிக்கப்பட்டிருந்த வடக்கு மக்களுக்கு முதற்தடவையாக ஜனநாயக முறையில் தமது பிரதிநிதியை தெரிவு செய்யும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதையிட்டு மிக மகிழ்ச்சியடைவார்கள் என தாம் நம்புவதாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்
அரச தகவல் திணைக்கள உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எவ்வித அழுத்தங்களுமின்றி மக்கள் சுதந்திரமாகவும் ஒற்றுமையாகவும் வாக்களிப்பதற்கான சூழல் காணப்பட்டது என்றும் 72 வீதத்திற்கும் அதிகமானவர்கள் ஆர்வத்துடன் வாக்களித்திருந்தனர்.
தேர்தல் சேவைக்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து அழைக்கப்பட்ட அதிகாரிகள் உட்பட 1749 பேர் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பணியாற்றியிருந்தனர்.
பதிவு செய்யப்பட்ட 68,800 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு 95 மத்திய நிலையங்கள் நிறுவப்பட்டிருந்ததன. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் 9 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலை நீதியும் நேர்மையுமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு நல்கிய கீரிமலை பொலிஸார் வழங்கிய ஒத்துழைப்புக்கு மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளார்.