மன்னாரில் தமிழ்க் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மீது தாக்குதல்
வட மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ. குணசீலனின் ஆதரவாளர்கள் மீது மன்னார் தாராபுரம் பகுதியில் வைத்து நேற்று முன்தினம் மாலை ஆளுந்தரப்பினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் ஜீ. குணசீலன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை எனது தெரிவு அறிவிக்கப்பட்ட நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஆதரவாளர்கள் ஆங்காங்கே வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.
பின் அன்றுமாலை 5 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று ஆசிபெற்ற பின் நானும் எனது ஆதரவாளர்கள் பெருந்திரளானவர்கள் ஒன்றிணைந்து எனக்கு வாக்களித்த தாழ்வுபாட்டு கிராம மக்களுக்கு நன்றிகளை தெரிவிக்கச் சென்று அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து விட்டு எனது கிராமமான தோட்டவெளி கிராமத்திற்குச் செல்வதற்காக தாழ்வுபாடு தாராபுரம் உள்வீதியூடாக சென்று பிரதான வீதியை கடக்க முயன்றேன்.
இதன்போது தாராபுரம் கிராமத்தினுள் வைத்து என்னுடன் வந்து கொண்டிருந்த ஆதரவாளர்கள் மீது அங்கிருந்து ஓடிவந்தவர்களினால் தாராபுரம் பகுதியில் வைத்துத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் இரு தரப்பினர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்று பின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.