பாடகி “மாயா” அருள்பிரகாஷத்திடம் (M.I.A ) 20 கோடி ரூபா கோரி வழக்கு..!!
இலங்கையிலிருந்து பிரிட்டனுக்கு புலம்பெயர்ந்து உலகப் புகழ்பெற்ற பாடகியாக விளங்கும் மாதங்கி மாயா அருள்பிரகாஷம் 15 இலட்சம் அமெரிக்க டொலர்கள் (சுமார் 20 கோடி இலங்கை ரூபா ) கோரி அமெரிக்க சுப்பர்போல் கால்பந் பந்தாட்ட விளையாட்டு ஏற்பாட்டாளர்கள் வழக்குத் தொடுத்துள்ளனர்.
M.I.A என்ற பெயரில் பிரபல பாடகியாக விளங்கும் மாதங்கி மாயா அருள்பிரகாஷம், கடந்த வருடம் முற்பகுதியில் அமெரிக்காவின் தேசிய கால்பந்தாட்ட லீக் இறுதிப்போட்டியின் இடைவேளையில் இசை நிகழச்சியொன்றை நடத்துவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
இந்நிகழ்ச்சியின்போது பாடி ஆடிக் கொண்டிருந்த M.I.A நடுவிரலை உயர்த்திக் காண்பித்தார். அவமதிப்பான சைகையாக இது கருதப்படும் நிலையில் பாடகி எம்.ஐ.ஏ.வின் இச்செயற்பாடு சர்ச்சையை ஏற்படுத்தியது.
தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த இந்நிகழ்ச்சியில் அவர் இப்படி செய்தமையால் அவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன. ஏராளமான ஊடகங்களில் இது இவ்விடயம் தலைப்புச் செய்தியாகியது.
18 மாதங்களுக்குமுன் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக எம்.ஐ.ஏ.விடம் 15 இலட்சம் டொலர்களைக் கோரி சுப்பர்போல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வழக்குத் தொடுத்துள்ளனர்.
அமெரிக்காவில் மிகப் பிரபலமான விளையாட்டுக்களில் ஒன்றாக அமெரிக்கப் பாணி கால்பந்தாட்ட விளையாட்டு விளங்குகிறது.
தலைக்கவசம் உட்பட பாதுகாப்புக் கவசங்களை அணிந்து றக்பி பாணியில் விளையாடப்படும் விளையாட்டு இது.
ஒவ்வொரு வருடமும் இறுதிப்போட்டியின் இடைவேளையில் இசை நிகழ்ச்சியொன்று நடத்தப்படும்.
சுப்பர்போல் என அழைக்கப்படும் இந்த இறுதிப்போட்டியின் இசைநிகழ்ச்சியை நடத்துவதற்கு மைக்கல் ஜக்ஸன், மடோனா போன்ற மிகப் பிரபலமான பாடகர்கள், பாடகிகள் அழைக்கப்படுவர்.
கடந்த வருடம் பெப்ரவரி மாதம் இன்டியானா பொலிஸ் நகரில் நடைபெற்ற சுப்பர்போல் போட்டியின் இடைவேளையில் மடோனா, எம்.ஐ.ஏ. நிக்கி மினாஜ் முதலானோர் இசை நிகழ்ச்சி நடத்தினர்.
இதன்போது பாடிக் கொண்டிருந்த வேளையிலேயே திடீரென நடுவிரலை உயர்த்திக் காண்பித்தார் எம்.ஐ.ஏ.
இந்நிகழ்ச்சியை என்.பி.சி. தொலைக்காட்சியில் நேரடியாக பார்த்துக் கொண்டிருந்த மில்லியன் கணக்கானோர் மாதங்கியின் செயலை பார்த்து திகைப்படைந்தனர்.
இதற்காக அமெரிக்கா தேசிய கால்பந்தாட்ட லீக்கும் (என்.எவ்.எல்) என்.பி.சி. தொலைக்காட்சி அலைவரிசையும் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரின.
பாடகி எம்.ஐ.ஏவுடன் மேடையில் இருந்த சிரேஷ்ட பாடகி மடோனாவும் இச்செயற்பாட்டினால் மகிழ்ச்சியடையவில்லை எனத் தெரிவித்தார்.
ஆனால், இவ்விடயத்தை பெரிதுபடுத்த மடோனா விரும்பவில்லை.
இந்நிலையில், பாடகி எம்.ஐ.ஏவிடம் 15 இலட்சம் டொலர்களைக் கோரி அமெரிக்க தேசிய கால்பந்தாட்ட லீக் (என்.எவ்.எல்.) வழக்குத் தொடுத்துள்ளது.
உலகளாவிய கவனத்தை ஈர்ப்பதற்காக கெமராவை நோக்கி அவர் இந்த சைகையை காட்டியுள்ளதாக பாடகி எம்.ஐ.ஏ.மீது என்.எவ்.எல். குற்றம் சுமத்தியுள்ளது.
இதற்காக அவருக்கு 15 இலட்சம் டொலர் அபராதம் விதிப்பதற்கு அந்நிறுவனம் தீர்மானித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் ஒன்றரை வருடங்களாக நடைபெறும் இந்த சட்ட மோதல் குறித்த விடயங்களை இப்போதுதான் பகிரப்படுத்தியுள்ளார் எம்.ஐ.ஏ.
இது குறித்து பாடகி எம்.ஐ.வின் சட்டத்தரணியான ஹோவார்ட் கிங் கூறுகையில், தேசிய கால்பந்தாட்ட லீக்கும் அதன் ரசிகர்களும் மேற்படி சம்பவம் குறித்து இந்தளவு ஆவேசத்தை வெளிப்படுத்துவது அபத்தமானது என்றார். இந்த அபராதத்துக்கு எதிராக எம்.ஐ.ஏ. போராடுவார் எனவும் சட்டத்தரணி ஹோவார்ட் கிங் கூறியுள்ளார்.
சுப்பர்போல் இசை நிகழ்ச்சியில் இத்தகைய சர்ச்சை ஏற்படுவது இது முதல் தடவையல்ல. 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, ஜெனட் ஜக்ஸனும் ஜஸ்டின் டிம்பர்லாக்கும் மேடையில் பாடி ஆடிக் கொண்டிருந்த போது, ஜெனட் ஜக்ஸனின் மேலங்கியை டிம்பர்லாக் பிடித்திழுத்தார்.
அப்போது பாடகி ஜெனட் ஜக்ஸனின் ஆடை கிழிந்து அவரின் மார்பகம் வெளிப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
M.I.A….
இலங்கையை சேர்ந்த பொறியியலாளரும் “ஈரோஷ்” அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவருமான அருள்பிரகாஷத்தின் (அருளர்) மகளாக 1975 ஆம் ஆண்டு லண்டனில் பிறந்தவர் மாதாங்கி மாயா.
அவர் 6 மாத குழந்தையாக இருந்தபோது அவரின் குடும்பத்தினர் யாழ்ப்பாணத்துக்கு திரும்பினர்.
1986 இல் மாயா தனது தாயார் மற்றும் சகோதரருடன் மீண்டும் லண்டனுக்குச் சென்றார்.
இசைத்துறையில் ஆர்வம் காட்டிய அவர், 2000 ஆம் ஆண்டு எம்.ஐ.ஏ. என்ற பெயரில் இசைத்துறை வாழ்க்கையை அவர் ஆரம்பித்தார்.
பாடகி, பாடலாசிரியர், புகைப்படக்கலைஞர், மொடல், என பலதுறைகளில் ஈடுபடுபவர் இவர்.
எம்.ஐ.ஏ. என்பது அவரின் பெயரிலுள்ள எழுத்துக்களாகும். அதேவேளை மிஸ்ஸிங் இன் அக்ஷன் என்பதன் சுருக்கமே எம்.ஐ.ஏ. இதுவெனவும் கூறப்படுகிறது.
2005 இல் வெளியான முதலாவது பாடல் அல்பத்துக்கு தந்தையின் பெயரான அருளர் என பெயரிட்ட எம்.ஐ.ஏ. 2007 இல் வெளியிட்ட அல்பத்துக்கு “கலா” என தனது தாயின் பெயரை சூட்டினார்.
அவரின் “பேப்பர் பிளேன்” என்ற பாடல் அவருக்கு உலகளாவிய புகழை பெற்றுக் கொடுத்தது.
பாடகர் பெஞ்சமின் புரொவ்மனை காதலித்த பாடகி எம்.ஐ.ஏ. 2009 ஆம் ஆண்டு ஆண் குழந்தையொன்றுக்கு தயானார்.
கடந்த வருடம் இத்தம்பதியினர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.