By 3 December 2013 0 Comments

ஐயோ ஐங்கரநேசா… அரசியலுக்குப் புது நேசா… – வடபுலத்தான்

tna.aingaranesan-04ஐயோ ஐங்கரநேசா, உங்களை நினைச்சா எனக்குச் சிரிப்புச் சிரிப்பா வருது ராசா, வருது….

என்ன கூத்து, என்ன கூத்து…. ராசா? இது அதிரடிக் கூத்தோ…. ஆச்சரியக் கூத்தோ??

உண்மையைச் சொல்லுங்கோ அப்பு, நீங்கள் நாடகத்துறையில இல்லாட்டி நடிப்புத்துறையில படிச்சனிங்களோ இல்லை தாவரவியல்துறையிலதான் படிச்சனிங்களோ எண்டு.

நடிப்புத்துறையில நீங்கள் படிக்காட்டியும் அதில நல்லாய்ப் பிச்சு உதறுகிறீங்களப்பு…

உங்களுக்கு முந்தியோ பிந்தியோ அரசியலுக்கு வந்த மற்றவையெல்லாம் உங்களுக்குக் கிட்டவும் வர மாட்டினம். அப்பிடி அதிரடி வேலைகளில இறங்கிக் கலக்கிறீங்கள்

சிறிதரன், கஜேந்திரன் எல்லாம் உங்கட கால் தூசுக்கும் வரமாட்டினம்.

அமைச்சுப் பதவி கிடைச்சவுடன் நெடுந்தீவுக்குப் பறந்தீங்கள்.

பிறகு பார்த்தால் திருக்கேதீஸ்வரத்தில் நிக்கிறீங்கள்.

அதுக்கிடையில் வலி வடக்கில உண்ணாவிரதம் இருக்கிறீங்கள்.

கிளிநொச்சிக்குப் போய் ஜனாதிபதியின் பிறந்த நாள் நினைவுக்கு மரம் நட்டீங்கள்.

ஜனாதிபதிக்கு மரம் நட்டதை நாலு பேர் சொல்லிப் பிரச்சினையைக் கிளப்பிப் போட்டாங்கள் எண்டதால்;, மாவீரர் நினைவாகவும் மரம் நடவேணும் எண்டு சொல்லி முதலமைச்சரைக் கொண்டு அதையும் செய்தீங்கள்.

என்ன மாதிரியான ஒரு ஐடியா உங்களுக்கு? உங்களுக்கு எதிராக வந்த அலையை அப்பிடியே அமத்திப் போட்டீங்கள்.

‘மக்களின் விடுதலைக்காய் மண்ணில் புதைந்த மாவீரரின் நினைவுக்காலம்’ எண்டு சொல்லிக்கொண்டு, அதுக்கு மாறாக அதே காலத்தில் ‘கலேர்ஸ் நைற்’ கொண்டாடினீங்கள்.

இதுக்குள் மாவீரர் நாளையொட்டி யாழ்ப்பாணத்தில ஒரு பத்திரிகைக் காரியாலயத்துக்குள் புகுந்து இரத்ததானம் வேறப்பா!

பிறகு பாத்தால் நிலாவரைப் பகுதியில பார்த்தீனியம் செடியை அழிப்பு. அதுக்கும் முதல்வருக்கு அழைப்பு.

இதெல்லாம் நல்ல காரியங்கள்தான்.

ஆனால், இதுகளை அமைச்சராக முன்னரும் செய்திருக்கலாம். சேவைக்குக் கால நேரம் எண்டு எதுவும் தேவையில்லை. பதவி பவிசு கூடத் தேவைப்படாது.

போராட்டம் நடந்தபோதுதான் காயப்படும் போராளிகளுக்கு அதிகளவில் இரத்த தானம் தேவைப்பட்டது. அதைச் செய்யிறதுக்கு அப்ப உங்களைக் காணவில்லை.

அமைச்சர் எண்டவுடனதான் எல்லாத்துக்கும் ஞானம் பிறக்குதாக்கும்.

போற போக்கைப் பார்த்தால் அடுத்த முதலமைச்சருக்கு அடுக்குப் போலதான் இருக்கு.

இப்ப இருக்கிற முதலமைச்சர் ஒரு பொம்மை.

அவரவர் தங்கட தங்கட தேவைக்குத் தூக்கிக் குத்திற றப்பர் முத்திரை மாதிரித்தான் அவர் இருக்கிறார்.

இது உங்களுக்கு நல்லா வாய்ச்சுப் போச்சு.

உங்களுக்கு மட்டுமல்ல உங்கட சகபாடிகளுக்கும் நல்லாய்த்தான் வாய்ச்சிருக்கு.

ஆனால், சனங்களுக்குத்தான் கேடு.

அவர் கொழும்புக்குப் போனால் அங்க ஒரு கதை. யாழ்ப்பாணத்துக்கு வந்தால் பிறகொரு கதை. மன்னாருக்குப்போனால் அங்க இன்னொரு கதை.

இப்பிடியே இடத்துக்குத் தோதாகவும் சந்தர்ப்பத்துக்கு ஏத்தமாதிரி இப்ப சிங்கன் கதைக்கலாம்.

ஆனால், இந்தச் சுத்து மாத்துக்கு கனகாலத்துக்குத் தாக்குப்பிடிக்காது.

ஆராவது அவருக்குக் கொஞ்சம் கூடுதலாக நெருக்கடி குடுத்தால் அவர் பேசாமல் சாமியிட்டயோ சநநியாசியிட்டயோ பாரத்தைப் போட்டிட்டு ‘எல்லாம் அவன் செயல்’ எண்டு இருக்கிறார்.

இதுவும் உங்களுக்கெல்லாம் நல்லா வாய்ச்சுப் போட்டுது.

அடிக்கிற காத்தில பிறந்திருக்கிற நல்ல யோகம் இப்ப உங்களுக்கு எண்டது உண்மைதான்.

ஆனால் ராசா, உங்கள விட பென்னாம் பெரிய கொடி, குடை, ஆலவட்டம், படை பலம், ஆளணி, அம்பு சேனை எண்டு எல்லா வளத்தோடயும் இருந்த ஆக்களின்ர சரித்திரமெல்லாம் எப்பிடி முடிஞ்சதெண்டு கொஞ்சம் நினைக்கோணும்.

இல்லாட்டி நாளைக்கு உங்களைப் பத்தி ஆரும் கவலைப்பட மாட்டினம்.

கனக்கத் துள்ளிற மாடு பால் கறக்காதாம்.

நீங்கள் நல்லாத் துள்ளிறியள்.

சும்மா படங்காட்டாமல் எதையாவது கொஞ்சம் உருப்படியாச் செய்யுங்கோ தம்பி.

அதைத் தான் சனங்கள் எதிர்பாக்குதுகள்.

அமைச்சர் எண்டால் ஆரும்கட்டின கட்டிடங்களைத் திறக்கிறதும் ஆரோ வெட்டின வாய்க்கால்களில் தண்ணி விடுறதும் இல்லை.

நீங்களும் ஏதாவது செய்ய வேணும். அதைச் செய்யுங்கோ.

உங்களுக்குப் புகழ் வேண்டுமெண்டால் அப்படி நாலு காரியம் செய்யுங்கோ அப்பு.

புகழ்க்கொடி தானாய் வளரும். செழிக்கும்…!!Post a Comment

Protected by WP Anti Spam