இந்தியில் வெளியான ‘டி டே’ படம் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட ஸ்ருதி ஹாசன் எதிர்ப்பு
கடந்த ஆண்டு இந்தியில் வெளியாகி பரபரப்பை கிளப்பிய படம் ‘டி டே’. இதில் பாலியல் தொழிலாளியாக ஸ்ருதிஹாசன் துணிச்சலுடன் நடித்திருந்தார். ப
டத்தில் அவர் நடித்த காட்சிகள் மும்பை ரசிகர்களை அதிர வைத்தது. இப்படத்தை நிகில் அத்வானி டைரக்ட் செய்திருந்தார். சங்கர் இஷான் லாய் இசை அமைத்திருந்தார்.
தற்பொழுது இப்படத்தை தமிழில் ‘தாவூத்’ என்ற பெயரில் டப் செய்து வெளியிட இருப்பதாக தகவல் வெளியானது. பிரண்ட்ஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனம் இதனை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் வருகிற பிப்ரவரி 7ந் தேதி 150 தியேட்டர்களில் இப்படம் ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. சர்வதேச பயங்கரவாதி ஒருவனை இந்தியாவின் முக்கியமான ‘ரா’ அதிகாரி தனது டீமுடன் சென்று கைது செய்யும் ஆக்ஷன் கதையில் பாலியல் தொழிலாளியாக சவாலான வேடத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார்.
ஆனால் இப்படம் தமிழில் வெளியாவதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தன்னுடைய அனுமதி இல்லாமல் இப்படம் வெளியாகிறது என்றும், அது தன்னுடன் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு எதிரானது என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து சட்ட பூர்வ நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்த விவரங்கள் தயாரானவுடன் அது ஊடகங்களில் வெளியிடப்படும் என அவர் கூறினார்.