செக்ஸ் தொல்லை: அக்கா கணவரை கழுத்தை அறுத்துக் கொன்ற கல்லூரி மாணவி
மாதவரத்தை அடுத்த டெலிபோன் காலனி முதல் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் மேத்யூ விண்ணோராஜ் (வயது34). ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்தார். இவரது மனைவி ஹேமா. இவர்களுக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகிறது. பிர்லியன்ட் ஜோசப் (8) என்ற மகன் உள்ளார்.
ஹேமா பால் பண்ணை அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவரது தங்கை ஹரிப்பிரியா (23). பெற்றோர்கள் இல்லாததால் அக்கா ஹேமா வீட்டில் தங்கி பெரம்பூரில் உள்ள கல்லூரியில் பி.காம் 3–ம் ஆண்டு படித்து வருகிறார்.
மேத்யூவுக்கு குடிப்பழக்கம் உண்டு. மனைவி ஹேமா இரவு பணிக்கு செல்லும் போதெல்லாம் வீட்டில் தனியாக இருக்கும் ஹரிப்பிரியாவிடம் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதுபற்றி ஹரிப்பிரியா அக்காளிடம் முறையிட்டாள். அவர் கணவரை கண்டித்தும் மேத்யூ தனது செயலை கைவிடவில்லை.
நேற்று இரவு மனைவி, குழந்தை அனைவரும் வீட்டில் இருந்தனர். அப்போது போதையில் வந்த மேத்யூ நள்ளிரவு 3 மணி அளவில் மனைவிக்கு குளிர்பானத்தில் பிராந்தியை கலந்து கொடுத்தார். மயக்கம் அடைந்த அவரை வீட்டு வராண்டாவில் தள்ளிவிட்டு கதவை பூட்டினார்.
பின்னர் படுக்கை அறையில் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த ஹரிப்பிரியாவிடம் செக்ஸ் தொல்லையில் ஈடுபட்டார். அவர் கூச்சல் போட்டும் பலன் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் மேத்யூ மூர்க்கத்தனமாக நடந்து கொண்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஹரிப்பிரியா காய்கறி வெட்டும் கத்தியால் மேத்யூவின் கழுத்தை அறுத்தார். அவர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
பின்னர் ஹரிப்பிரியா கதவை திறந்து மயங்கி கிடந்த அக்கா ஹேமாவை எழுப்பி நடந்ததை கூறி கதறி அழுதாள்.
கொலை செய்யப்பட்ட மேத்யூவின் தந்தை சோபன் ராஜ் எருக்கஞ்சேரியில் உள்ளார். அவர் மனைவி லில்லி டெலிபோன் காலனி வந்து மகன் பிணத்தை பார்த்து கதறி அழுதார்.
மாதவரம் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கொலை தொடர்பாக மாணவி ஹரிப்பிரியாவை போலீசார் கைது செய்தனர்.
மேத்யூவின் தந்தை சோபன்ராஜ் கூறும்போது, ”தனது மகனின் நடத்தையால் இந்த துயர முடிவை தேடி கொண்டான்” என்று தெரிவித்தார்.