“ஸ்டாலினுக்கு விடுதலைப் புலிகளால் உயிர் ஆபத்தா? எந்த ஊரில்? எந்த நாட்டில்? எந்த லோகத்தில்?”
மேலே டைட்டிலில் உள்ள கேள்வியை ஆச்சரியத்துடன் கேட்டிருக்கிறார், முதல்வர் ஜெயலலிதா!
சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, “ஸ்டாலினுக்கு பாதுகாப்பு கேட்டு கருணாநிதி, பிரதமருக்கு எழுதி உள்ள கடிதம், விடுதலைப் புலிகள், மதவாத சக்திகள் ஆகியவற்றினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறிக்கவில்லை. மு.க.அழகிரி மூலம் ஸ்டாலினுக்கு ஆபத்து என்றே மறைமுகமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது” என்றார்.
சட்டசபையில் முதல்வர் பேசுகையில், “தன் இளைய மகன் ஸ்டாலின் வாழ்வு குறித்து, லோக்சபா எம்.பி., அழகிரி கூறியதை, பத்திரிகையாளர்களிடம் கருணாநிதி தெரிவித்து உள்ளார். அதோடு நின்று விடாமல், பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதில், ‘விடுதலைப் புலிகள், மத அடிப்படைவாதிகள் மற்றும் அரசியல் விரோதிகளால், ஸ்டாலினுக்கு ஆபத்து உள்ளது’ எனக் குறிப்பிட்டு, இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.
இதில், விடுதலை புலிகள் அமைப்பிடம் இருந்து ஆபத்து என்பது, இல்லாத ஒன்று. எந்த ஒரு பெயரும் குறிப்பிடாமல், மத அடிப்படைவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்பட்டு உள்ளது; இதுவும் கற்பனையான ஒன்று. கடைசியாக, பல தரப்பட்ட அரசியல் விரோதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
அந்த அரசியல் விரோதிகள் யார் என்பது குறிப்பிடவில்லை.
கடிதம் எழுதியுள்ள தருணத்தையும், கருணாநிதி குடும்பத்தில் நடக்கும் குழப்பத்தையும் ஒப்பிடுகையில், ‘மு.க.அழகிரி மூலம் ஸ்டாலினுக்கு ஆபத்து’ என்பது, மறைமுகமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இளைய மகனுக்கு, மூத்த மகனால் ஆபத்து என்றதும் பிரதமருக்கு கடிதம் எழுதும் கருணாநிதி, பத்திரிகை எரிப்பு சம்பவம், தா.கிருட்டிணன் கொலை வழக்கில் என்ன நிலைப்பாடை எடுத்தார்? தனக்கு ஒரு நீதி; தன் குடும்பத்திற்கு ஒரு நீதி; மற்றவருக்கு ஒரு நீதி என செயல்படும், கருணாநிதியை தலைவராகக் கொண்டு செயல்படும், தி.மு.க.வினர், சட்டம் – ஒழுங்கு குறித்து பேசுவது, நகைப்புக்குரியது” என்றார்.
ஆமா.. விடுதலை புலிகளால் ஆபத்தா? இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே, ஜாலியாக யாழ்ப்பாணத்தில் சுற்றிக்கொண்டு இருக்கிறார்! (மேலேயுள்ள போட்டோவில், யாழ்ப்பாணம், நல்லூர் கோவிலில் ராஜபக்ஷே)