வீட்டில் இறந்து கிடந்த பெண் எட்டு ஆண்டுகளுக்கு பின் கண்டெடுப்பு
சிட்னியில் உள்ள இன்னர் சிட்டி பகுதியில் வசித்து வந்த வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் தனது வீட்டிலேயே இறந்து கிடந்தது எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கு இன்று கிளெப்பில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடாலி வுட் என்ற அந்த பெண்மணி 2004-ம் ஆண்டு மரணமடைந்ததாகவும், அவர் இறந்து போனது 2011-ம் ஆண்டு ஜுலை மாதத்தில் வெளியுலகிற்கு தெரிய வந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தனது படுக்கையில் விழுந்த அவர் எழுந்திருக்க முடியாமல் இறந்து போயிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அவருக்கு சொந்தமான மாடி வீட்டில் அவர் கண்டெடுக்கப்பட்ட போது, அவ்வீடு மிகவும் பாழடைந்து கிடந்ததாகவும், வீட்டில் ஒட்டடை படிந்து கிடந்ததாகவும், வீட்டின் ஜன்னலுக்கு மேலே மரம் ஒன்று வளர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது வீட்டில் டி.வி மற்றும் பிரிட்ஜ் போன்ற பொருட்கள் எதுவும் காணப்படவில்லை. அவர் அணிந்திருந்த நகைகள் ஏதும் திருடப்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தனது வீட்டை அவர் காலி செய்து விட்டதாக கருதியதாக அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர். 1924-ம் ஆண்டு பிறந்த அவர் தனது வாழ்நாள் முழுவதையும் தனிமையிலேயே கழித்துள்ளது குறிப்பிடத்தக்கது.