குளிர்கால ஒலிம்பிக் கழிவறையில் மீன்பிடிக்கத் தடை!
ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான விளையாட்டு வீரர்கள் தங்கும் அறைகளில் காணப்படும் விநோதமான அறிவுறுத்தல் சமிக்ஞைகள் நகைப்புக்கிடமாகியுள்ளன.
கழிவறை தொட்டியில் ஏறி அமரக்கூடாது, நின்றுகொண்டு சிறுநீர் கழிக்கக்கூடாது போன்ற அறிவுறுத்தல்கள் பொதுக்கழிவறைகளில் காணப்படுவது வழக்கம்.
ஆனால் சோச்சி ஒலிம்பிக் கிராமத்திலுள்ள கழிவறையில், தூண்டிலில் மீன்பிடிப்பது தடுக்கப்பட்டுள்ளதென்ற அறிவுத்தலும் காணப்படுகிறது.
கனேடிய வீரர் செபஸ்டியன் டௌடன்ட், இந்த அறிவுறுத்தலை படம்பிடித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். ஏன் இவ்வாறான அறிவுறுத்தல் சமிக்ஞைக்கான காரணம் தெரியவில்லை.
ஒலிம்பிக் அரங்கின் கழிவறையொன்றில் அருகருகே இரு கழிவறைத்தொட்டிகள் பொருத்தப்பட்டிருந்த புகைப்படம் அண்மையில் வெளியாகி, பலரையும் வியப்படையச் செய்தது.
சோச்சி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.