ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சார்ஜாவில், பாதணிக்கான மோதலில் மூவர் பலி
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சார்ஜாவில் ஒரு ஜோடி பாதணி தொடர்பாக, ஏற்பட்ட மோதலில் பங்களாதேஷை சேர்ந்த ஊழியர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
சார்ஜாவில் வெ வ்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 500 தொழிலாளர்கள் தங்கியுள்ள தொழிலாளர் முகாமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அங்குள்ள தொழிலாளர்களிடையே இரு குழுக்கள் இருந்தன. இவர்களில் பெரும்பாலானோர் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
அங்குள்ள ஒருவர் மற்றொருவருக்குச் சொந்தமான பாதணியொன்றை அணிந்ததாக வாக்குவாதம் ஏற்பட்டது. இது பின்னர் இரு குழுக்களிடையிலான பயங்கர மோதலாக மாறியது.
பொல்லுகளாலும் கம்பிகளாலும் தாக்குதல்கள் இடம்பெற்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்போது மூவர் கூரிய ஆயுதமொன்றால் குத்திக்கொல்லப்பட்டதுடன் மேலும் மூவர் காயமடைந்தனர்.
அதையடுத்து பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்து நிலைமையை கட்டுப்படுத்தினர்.
இச்சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டதுடன் தலைமறைவாகியுள்ள பிரதான சந்தேக நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.