விடுதலைப் புலிகளின் புகலிடமாகுமா அந்தமான்?
இலங்கை உள்நாட்டுப் போரில் தப்பிய விடுதலைப் புலிகள் இயக்கத்தினர், அந்தமான் நிக்கோபார் தீவுகளை தங்கள் புகலிடமாக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அந்தமான் அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உள்நாட்டு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் மியான்மர், வங்க தேசம், தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி ஊடுருவி வருவதாக பிரதேச அரசு புகார் கூறி வருகிறது.
இலங்கையிலிருந்து 1960 மற்றும் 70-களில் பல அகதிகள் அந்தத் தீவுகளில் குடியமர்த்தப்பட்டனர். அப்பகுதிகளில் தமிழர்கள் அதிகம் வசிப்பதால், அவர்களிடையே ஈழப்போருக்கான ஆதரவு அதிகம் காணப்படுகிறது.
அவர்களில் பலர் விடுதலைப்புலிகளின் அபிமானிகளாகவும் இருப்பதால் அவர்களின் உதவியுடன், போரில் தப்பிய விடுதலைப் புலிகள் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்குள் ஊடுருவலாம்.
அவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு அப்பகுதியிலுள்ள ஆளில்லா தீவுகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
அந்தமான் தீவுகளின் புவியியல் அமைவிடமும், அதிலுள்ள காடுகளும் பயங்கரவாதிகளுக்கு மிகவும் ஏற்புடையவையாக அமைந்துள்ளன. வன யுத்தத்துக்கான பயிற்சி பெறவும், ஆயுதங்களைப் பதுக்குவதற்கும் இந்தப் பகுதி மிகவும் ஏதுவானவை என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
8249 சதுர கி.மீ.க்கு பரவியுள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார் பகுதி 572 தீவுகளைக் கொண்டது. இவற்றில் 38 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிப்பதால் ஆளில்லா தீவுகள் பயங்கரவாதிகளுக்கு சிறந்த புகலிடமாக அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.