சதாம் உசேனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுமா கோர்ட்டு வழக்கில் அடுத்த மாதம் 10-ந் தேதி தீர்ப்பு

Read Time:4 Minute, 14 Second

Irak.Sadam.jpgஈராக் முன்னாள் சர்வாதிகாரி சதாம் உசேன் 148 ஷியா முஸ்லிம்களை சித்ரவதை செய்து கொன்றது தொடர்பாக நடந்து வரும் வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசுத்தரப்பு வக்கீல் வாதாடினார். அவருக்கு கோர்ட்டு மரண தண்டனை விதிக்குமா என்பது அடுத்த மாதம் (ஜுலை) 10-ந் தேதி தெரியும். ஈராக் நாட்டின் சர்வாதிகாரியாக இருந்த சதாம் உசேனை 1982-ம் ஆண்டு கொல்ல முயற்சி நடந்தது. இந்த கொலை முயற்சியில் அவர் தப்பித்து விட்டார். இதைத்தொடர்ந்து கொலை முயற்சியில் ஈடுபட்ட துஜாயில் கிராம மக்களை சித்ரவதை செய்யும் நடவடிக்கையில் சதாம் உசேன் ஈடுபட்டார். அந்த கிராமத்தைச் சேர்ந்த 148 ஷியா முஸ்லிம்களை அவர் சித்ரவதை செய்து கொன்றார் என்று அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்து உள்ளது.

அரசு வக்கீல் ஜாபர் அல் முசாவி தன் வாதத்தை தொகுத்து வழங்கிவிட்டு சதாம் உசேனுக்கும், அவரது சகோதரர் பர்சான் அல் திக்ரித்துக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கோர்ட்டை கேட்டுக்கொண்டார். இப்படி அவர் வாதாடியபோது கோர்ட்டில் ஆஜராகி இருந்த சதாம் உசேன் பிரமாதம் பேஷ் பேஷ் என்று அடிக்கடி கூறி அரசு வக்கீலை நையாண்டி செய்தார்.

அரசு வக்கீலின் வாதத்துக்கு பிறகு கோர்ட்டு அடுத்த மாதம் (ஜுலை) 10-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அன்றைய தினம் கோர்ட்டு மீண்டும் கூடும்போது நீதிபதி இந்த வழக்கில் தீர்ப்பு கூறுகிறார். அப்போது தான் சதாம் உசேனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுமா என்பது தெரியும்.

இதற்கிடையில் இந்த வழக்கு விசாரணை கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. சதாம் உசேனின் வக்கீல்கள் இந்த விசாரணை பாரபட்சமானது என்று கூறி உள்ளனர். அரசு தரப்பு வாதத்தை தயாரிப்பதற்கு 5 மாத கால அவகாசம் தரப்பட்டது. ஆனால் எங்கள் தரப்புக்கு சில வாரங்கள் மட்டுமே அவகாசம் தரப்பட்டது என்று சதாம் உசேனின் அமெரிக்க வக்கீல் கர்ட்டீஸ் டாப்ளர் கூறினார்.

கடந்த மாதம் சதாம் உசேன் தரப்பு சாட்சிகளான 3 பேர் துஜாயில் கிராமத்தில் கொல்லபட்டதாக கூறப்பட்ட சிலர் உயிரோடு இருப்பதாக சாட்சியம் அளித்தனர். ஆனால் அதை நீதிபதி கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் பொய்ச்சாட்சியம் அளித்தற்காக சாட்சிகளை கைது செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்கள் சதாம் உசேனின் விசுவாசிகளின் மிரட்டலுக்கு பயந்து பொய்த்தகவலை கூறிவிட்டதாக சாட்சியம் அளித்தனர் என்றும் சதாமின் வக்கீல்கள் கூறினர்.

இப்படி சாட்சியம் அளித்த சாட்சிகள் சிலர் அதன் பிறகு விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் இப்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார்கள். அவர்களை நிருபர்கள் சந்தித்தபோது கைது செய்யப்பட்ட பிறகு சிறையில் அதிகாரிகள் அடித்து உதைத்ததால் அவ்வாறு மாற்றி சாட்சியம் அளித்ததாக அவர்கள் கூறினார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இலங்கை நாடாளுமன்றத்தில் ஜேவிபி-ததேகூ மோதல்!
Next post அவுஸ்திரேலியாவின் கன்பரா நகரில் 1500க்கும் அதிகமான மக்கள் புலிகளைத் தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்