பாவாடைக்கு கீழ் இரகசியமாக படம்பிடிப்பது குற்றம்தான்..
பாவாடைக்கு கீழ் இரகசியமாக படம்பிடிப்பது குற்றம்தான்; அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலம் அவசர சட்டத்திருத்தம்;-
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் பொது இடங்களில் பெண்களின் பாவாடைக்கு கீழ் இரகசியமாக படம்பிடிப்பது குற்றம் என அம்மாநில சட்டமன்றம் அவசர சட்டத்திருத்தமொன்றை செய்துள்ளது.
மசாசூசெட்ஸ் மாநிலத்தின் பொஸ்டன் நகர ட்ரொலி (ரயில்) ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்த பெண்ணொருவரின் பாவாடைக்கு கீழ் கெமராவை வைத்து இரகசியமாக படம்பிடித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் தொடர்பான வழக்கில் அம்மாநில சட்டத்தின்படி அவ்வாறு படம்பிடிப்பது சட்டவிரோதமானதல்ல என மசாசூசெட்ஸ் உயர் நீதிமன்றம் கடந்த புதன்கிழமை தீர்ப்பளித்திருந்தது.
‘ரயிலில் பாவாடை அணிந்த நிலையில் பயணம் செய்யும் பெண்களை நிர்வாணமானவர்களாகவோ, அரை நிர்வாணமானவர்களாகவோ கருத முடியாது. எனவே நிர்வாணமாக அல்லது அரை நிர்வாணமாக காணப்படுபவர்களை இரகசியமாக படம்பிடிப்பது தொடர்பான சட்டவிதிகள் இவர்களுக்குப் பொருந்தாது. குளியலறை, கழிவறை, ஆடை மாற்றும் அறைகளில் நிர்வாணமாகவோ, அரை நிர்வாணமாகவோ காணப்படுபவர்களை படம்பிடிப்பதையே சட்டவிதிகள் தடுக்கின்றன’ என நீதிபதி கூறினார்.
இத்தீர்ப்பு பெண்கள் அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்புகளின் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது. இத்தீர்ப்பானது சட்டவிதிகளை அப்படியே பின்பற்றுவதன் பிரதிபலிப்பு எனவும் இச்சட்டவிதியை தான் மாற்ற விரும்புவதாகவும் மசாசூசெட்ஸ் மாநில சட்டமன்றத்தின் சபாநாயகர் ரொபர்ட் டி லியோ கூறியிருந்தார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மசாசூசெட்ஸ் மாநில சட்டமன்றம் இதற்கான சட்டதிருத்தங்களை செய்தது.
புதிய சட்டவிதிகளின்படி, அம்மாநிலத்தில் பெண்களின் ஆடைக்கு கீழ் இரகசியமாக படம் பிடிப்பது குற்றச்செயலாகும். இவ்வாறான குற்றச்செயல்களை புரிபவர்களுக்கு இரு வருடங்களுக்கு மேற்பட்ட சிறைத்தண்டனையும் 5000 டொலர் (சுமார் 6.25 இலட்சம் ரூபா) அபராதமும் விதிக்கப்படும்.
பாதிக்கப்பட்டவர் 18 வயதுக்கு குறைந்தவர் எனில், குற்றவாளிக்கு 5 வருட சிறைத்தண்டனை அல்லது 10,000 டொலர் (சுமார் 13 இலட்சம் ரூபா) அபராதம் விதிக்கப்படும்.
Average Rating