By 4 May 2014 0 Comments

வித்தியாசமான நடிகைகளின் ‘வினோதமான வாழ்க்கை’

003hபுகழின் உச்சிக்கு சென்று ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த நடிகைகள் ஏராளம்! அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையிலும் பல வினோதம்! அவர்கள் திரை உலகில் இருந்து விலகிப்போனாலும் ரசிகர்கள் மனதில் நிறைந்து நிற்க என்ன காரணம்? ஒரு அலசல்..!

க்ரோடா கார்வோ

புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகையான இவர் சுவீடன் நாட்டை சேர்ந்தவர். இவர் எப்போதும் தனிமையையே விரும்பியவர். யாருடனும் அதிகம் பேசமாட்டார். எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி கிடைத்தாலும் அதை தனது முகத்தில் காட்டிக் கொள்ளமாட்டார். இவர் தனது திரை உலக வாழ்க்கையில் நான்கு முறை மட்டுமே பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார். எந்த திரைப்படவிழாவிலும் பங்கேற்க மாட்டார். திரைப்படத் துறையின் உயர்ந்த விருதான ‘ஆஸ்கார்’ இவருக்கு கிடைத்தபோதுகூட, அதை பெற்றுக்கொள்ள விழாவிற்கு செல்லவில்லை. சினிமாவில் நடிப்பதோடு சரி. ”சினிமாவிற்கு நான் வலுகட்டாயமாக இழுக்கப்பட்டேன். மற்றபடி எனக்கு நடிக்க விருப்பமில்லை. எதற்கோ ஆசைப்பட்டு, எப்படியோ மாறிவிட்டேன். இது ஒரு போலியான வாழ்க்கை. என்னை தனிமையில் இருக்க விடுங்கள்” என்று நெருக்கமானவர்களிடம் கூறி, தனிமையை விரும்பி ஏற்றுக்கொண்டவர் இவர்.

தனிமையில் வாழ்ந்த அவரை பலவித நோய்கள் தொற்றிக்கொண்டன. சில வருடங்கள் நோயால் அவதிப்பட்டு இறந்தார். ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த இவர், ஒருமுறைகூட இந்த உலகில் எந்த ரசிகருக்கும் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்ததில்லை.

சாதனா

பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து சிறந்த குணசித்திர நடிகை என பெயர்பெற்றவர் சாதனா. பிரபலமான இந்தி நடிகை. ”ஏக் பூல் தோ மாலி’ ‘கீதா மேரா நாம்’ போன்ற ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்தவர். ‘தைராய்டு’ நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார். அதனால் அவரது கண் பார்வை மங்கலானது.

சில வருடங்கள் சிகிச்சை பெற்ற பிறகு மீண்டும் நடிக்க வந்தார். இவருக்கு சிறிய கதாபாத்திரங்களே கிடைத்தன. அதை ஏற்றுக்கொள்ள மறுத்த இவர், தான் ரசிகர்கள் மனதில் எப்போதும் கதாநாயகியாகவே வாழ விரும்புகிறேன் என்கிறார். கீழே இறங்கி வர மனம் இடம் கொடுக்கவில்லை.

‘கலைஞர்கள் எப்போதும் ஓய்வெடுக்கக் கூடாது. எவ்வளவு இயலாமை வந்தாலும் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் தங்களால் இயன்ற வேலைகளை செய்து கொண்டே இருக்கவேண்டும்’ என்று சக நடிகைகளுக்கு அறிவுறுத்திவிட்டு, திரை உலகில் இருந்து விலகிவிட்டார்.

சுஜித்ரா சென்

வங்காளம் மற்றும் இந்தி மொழிப்படங்களில் நடித்து புகழின் உச்சத்தில் இருந்தவர், இவர். தெற்கு கொல்கத்தாவில் பாலிகஞ்ச் பகுதியில் வசித்தார். அதனால், அந்தப் பகுதியில் வாழ்ந்தவர்கள் அத்தனை பேரும் தங்களை பெரும் பாக்கியசாலிகளாக கருதினார்கள். இன்றளவும் அந்த பகுதிக்கு செல்பவர்கள் சுஜித்ராவை நினைவு கூர்கிறார்கள். மக்கள் மனதில் அத்தனை ஆழமான நினைவுகளை விட்டுச் சென்றிருக்கிறார்.

சுஜித்ராவின் நடிப்பிற்கு வங்கதேச வாசிகள் தலைவணங்கி நின்றார்கள். வங்க மொழியில் மட்டுமல்லாமல் இந்தியிலும் பெயர் சொல்லும் அளவுக்கு ‘தேவதாஸ், முசாபிர், சம்பாகலி, மும்பை கா பாபு’ போன்ற ஏராளமான படங்களில் நடித்தார். புகழ்பெற்ற இயக்குநர் சத்யஜித் ரேவின் படங்களிலும் நடித்துள்ளார். ஒருகட்டத்தில் சுஜித்ரா கால்ஷீட்டுக்காக கால்கடுக்க காத்திருந்தார், சத்தியஜித்ரே. அதற்கு காரணம் ஆணவமோ கர்வமோ இல்லை. ‘நடித்து என்ன ஆகப் போகிறது!’ என்ற விரக்திக்கு சுஜித்ரா தள்ளப்பட்டதே காரணம்.

திடீரென்று என்ன நினைத்தாரோ, தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். யாரையும் சந்திக்க விரும்பவில்லை. எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. யாரிடமும் பேசவும் இல்லை.

சுஜித்ரா சென்னை கவுரவிக்கும் விதமாக 2005–ல் மத்திய அரசு ‘தாதா சாஹேப் பால்கே’ விருதை அவருக்கு வழங்குவதாக அறிவித்தது. அதைக்கேட்டு அவர் மகிழ்ச்சியடையவில்லை. சத்யஜித்ரே எவ்வளவோ வற்புறுத்தியும் விருதை வாங்க மறுத்துவிட்டார்.

புகழ்பெற்ற வங்காள கதாநாயகன் உத்தம்குமாருடன் 30 படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். இவர் பலமுறை சுஜித்ராவை தன் வீட்டிற்கு அழைத்து இருக்கிறார். ஆனால் சுஜித்ரா ஒருமுறைகூட உத்தம்குமாரின் வீட்டிற்கு போகவில்லை. உத்தம்குமார் மிகவும் வருத்தத்துடன் சுஜித்ராவிடம் ”ரமா (சுஜித்ராவின் இயற்பெயர்) நீ என் அழைப்பை ஏற்று என் வீட்டிற்கு வராமல் இருப்பது எனக்கு மனவருத்தமாக இருக்கிறது. அப்படி என்ன பிடிவாதம் உனக்கு? உன்னை மதிப்பவர்களை இப்படி நோகடிக்கலாமா?” என்று வருத்தத்துடன் கேட்டார். அதற்கு, ‘என்னை என் இஷ்டப்படி விட்டு விடுங்கள். கட்டாயப்படுத்தாதீர்கள்..’ என்று விரக்தியாக சுஜித்ரா பதிலளிக்க, உத்தம்குமார் அவரிடம் ‘ரமா நீ இப்போது வரவில்லை என்றாலும் பரவாயில்லை. நான் இந்த உலகத்தைவிட்டே செல்லும்போதாவது என் வீட்டிற்கு வந்து என்னை பார்க்க வேண்டும். அப்போதுதான் என் ஆத்மா சாந்தியடையும்’ என்றார். இதை சுஜித்ராவே ஒரு பேட்டியில் கூறினார்.

1980–ம் ஆண்டு அந்த மகா கலைஞன் மறைந்துவிட்டார். அனைவரும் சுஜித்ராவின் வருகைக்காக காத்திருந்தனர். வெகு நேரமாகியும் அவர் வரவேயில்லை. கடைசியில் ஊர்வலம் கிளம்பும் நேரத்தில் யாரும் எதிர்பாராத வண்ணம் வந்து, சில நிமிடம் கண்களை மூடி அவர் தலைமாட்டில் நின்றுவிட்டு, பிறகு யாரிடமும் பேசாமல் சென்றுவிட்டார்.

திருமண வாழ்க்கையிலும் சுஜித்ரா மகிழ்ச்சியாக இல்லை. அவருடைய சுபாவத்தை யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. திருமணம் செய்து வைத்தால் மாறிவிடுவார் என்று குடும்பத்தினர் நினைத்தனர். ஷிப்பிங் கார்பரேஷனில் உயர் அதிகாரியாக இருந்த தேவநாத்தை மணமகனாக தேர்ந்தெடுத்தனர். திருமணத்திற்கு மறுத்த சுஜித்ராவை வலுகட்டாயமாக மணமேடை ஏற்றினார்கள். அப்போது வயதான ஒரு மூதாட்டி சம்பிரதாய முறைப்படி மணமகளுக்கு முக்காடு அணிவித்தார். சட்டென்று அதை விலக்கிக் கொண்டு மணமகனை ஒரு பார்வை பார்த்தார் சுஜித்ரா. இதனை சற்றும் எதிர்பாராத தேவநாத் அதிர்ச்சியடைந்தார். ‘இந்த சம்பிரதாயங்கள் எனக்குத் தேவையில்லை. முக்காடு இல்லாமல் தான் திருமணம் செய்துகொள்வேன். இதில் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனையா?’ என்று கணவரிடம் கோபமாக கேட்டார்.

அப்போது ஆரம்பித்த மோதலால் 22 வருட தாம்பத்ய வாழ்க்கை சின்னாபின்னமானது. அமெரிக்காவிற்கு சென்றிருந்ததேவநாத் அங்கு ஒரு சாலை விபத்தில் மரணமடைந்தார்.

சுஜித்ரா படப்பிடிப்பின் போது ரசிகர்கள் கூடுவதை விரும்பமாட்டார். கூடுமானவரை தனிமையில் நடிக்கவே விரும்பினார். படப்பிடிப்பின்போது தன்னை சுற்றி யாரும் இருக்கக்கூடாது என்று டைரக்டர்களுக்கு கட்டளையே போட்டார். அவரை வைத்து படம் எடுப்பவர்கள் இரவு நேரத்தில்தான் படப்பிடிப்பை நடத்துவார்கள். அவரது அனுமதியை பெற்றால் மட்டுமே அவரை போட்டோ எடுக்கவும் முடியும்.

பிரபல போட்டோகிராபர் அருண் சட்டர்ஜி கூறுகிறார்.. ‘ஒருமுறை உத்தம்குமாருடன் சுஜித்ரா நடித்துக்கொண்டிருந்தார். அந்த படப்பிடிப்பு தளத்திற்கு திரேன் தேவ் என்ற போட்டோகிராபர் சென்றிருந்தார். அவர் உத்தம்குமாரின் அனுமதியுடன்தான் சென்றார். அங்கே நடித்துக் கொண்டிருந்த சுஜித்ரா அந்த போட்டோகிராபரை பார்த்தவுடன் ஆத்திரம் அடைந்தார். கண்களில் கோபம் கொப்பளிக்க அவரை வெளியேறச் சொன்னார். அவர் வெளியே போனால்தான் படப்பிடிப்பு தொடரும் என்று கட்டளையும் இட்டார். உத்தம்குமாருக்கு அது கவுரவப் பிரச்சினையாகிவிட்டது. ‘அவர் என் அனுமதியுடன் தான் உள்ளே வந்தார். அவர் வெளியே போகமாட்டார்’ என்று அதிரடியாக கூறிவிட்டார். பிறகு என்ன..! அவர்கள் சண்டையில் படப்பிடிப்பு ரத்தாகிவிட்டது!Post a Comment

Protected by WP Anti Spam