By 3 June 2014 0 Comments

வான்புலிகள் பிரிவு துணைத் தலைவர் குஷாந்தன் மாஸ்டர் கைது: பின்னணியில் நடந்தது என்ன?

ltte.kushanthan-2“மலேசியாவில் விடுதலைப் புலிகள் மூவர் கைது செய்யப்பட்டனர்” என்ற செய்தி மலேசிய மீடியாக்களில் வெளியானபோது, அதை கொஞ்சம் அடக்கி வாசிக்க விரும்பியது, இலங்கை உளவுத்துறை எஸ்.ஐ.எஸ்.

காரணம், அந்த மூவரில் பெரிய கேட்ச் ஒன்றும் உள்ளது என்பது அவர்களுக்கு தெரியும். அந்த நபரை அவர்கள் ஆசியா, ஐரோப்பா என்று ட்ராக் பண்ணிக்கொண்டு இருந்தார்கள்.

இதற்கு பிரிட்டிஷ் உளவுத்துறை எம்.ஐ.-5 மற்றும், இன்னொரு ஆசிய நாட்டின் உளவுத்துறை சில உதவிகளை செய்துகொண்டு இருந்தது.

குஷாந்தன் மாஸ்டர்: இயக்கத்தில் இருந்தபோதும், தற்போது கைது செய்யப்பட்ட நிலையிலும்.

குஷாந்தன் மாஸ்டர்: இயக்கத்தில் இருந்தபோதும், தற்போது கைது செய்யப்பட்ட நிலையிலும்.

அந்த நபரை இலங்கைக்கு கொண்டு செல்வதற்கு முன் வேறு இடையூறுகள் ஏதும் வரக்கூடாது என்பதில் இலங்கை அதிகாரிகள் கவனமாக இருந்தார்கள். கைது விஷயத்தில் அவர்கள் அடக்கி வாசித்த காரணம் அதுதான்.

இதற்கிடையே, மலேசிய டி.வி. சேனல்கள், கைது செய்யப்பட்ட மூவரும், புலிகளின் உளவுப்பிரிவை சேர்ந்த அன்பரசன், புலிகளின் குரல் கிருபா, பைலட் குஷாந்தன் என்ற தகவலை வெளியிட்டன.

இவர்களில் எஸ்.ஐ.எஸ்.-ன் பெரிய கேட்ச், பைலட் குஷாந்தன் என்று குறிப்பிடப்பட்ட நபர்தான்.

மற்ற இருவரும் பெரிய முக்கியத்துவம் ஏதும் அற்றவர்கள்.

இப்படியான நிலையில், எஸ்.ஐ.எஸ். ஒரு ட்ரிக் செய்தது. அன்பரசன்தான் முக்கிய நபர் என்பதுபோல காட்டிக் கொண்டார்கள். அன்பரசனை இலங்கைக்கு கொண்டு செல்வதே தமது டாப் பிரையோரிட்டி என்பது போல பாவனை செய்தார்கள்.

இந்த விவகாரங்களை சரியாக ஃபாலோ செய்தவர்களுக்கு குழப்பம். காரணம், இந்த அன்பரசன் என்பவரிடம் இருந்து இலங்கை உளவுத்துறை தெரிந்து கொள்ளக்கூடிய பெரிய ரகசியம் ஏதும் கிடையாது. அப்படியிருந்தும், அவர் மீது இவர்களுக்கு ஏன் அதீத ஆர்வம்? இதுதான், அந்தக் குழப்பம்.

அதே நேரத்தில் மீடியாக்கள் இதை வேறு விதமாக யோசித்தன. அன்பரசன், புலிகளின் உளவுப் பிரிவில் இருந்தவர். எனவே, இவர் முக்கியமாக நபராக இருக்கலாம் என்று மீடியாக்கள் நம்பின. லைம் லைட் முழுவதும் அவர்மீதே இருந்தது. செய்திகளின் முக்கியத்துவம் அவருக்கு கிடைத்தது.

குஷாந்தன் என்பவர் சிக்கியதை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

இப்படியான நிலையில், மூவரையும் தமது கஸ்டடியில் எடுத்து கொழும்பு கொண்டு சென்றுவிட்டனர், இலங்கை அதிகாரிகள்.

இதற்கிடையே, யார் கைது செய்யப்பட்டாலும், “அந்த ஆள் சும்மா யாரோ அப்பாவி. இல்லாத புலியை இருப்பது போல காட்ட போடப்படும் நாடகம்” என்று வழக்கமாக எழுதும் மீடியாக்களும், குஷாந்தன் இலங்கைக்கு கொண்டு செல்லப்படும்வரை, இந்தக் கைதுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்பது போல கூறிக்கொண்டு இருந்தன.

இலங்கை உளவுத்துறையினர், அந்த மீடியாக்களின் ஆசிரியர்களை அழைத்து, ஒரு காபியாவது வாங்கிக் கொடுத்து, நன்றி சொல்ல வேண்டும்.

எப்படியோ, மூவரும் கொழும்பு கொண்டு செல்லப்பட்ட பின்னரே, குஷாந்தன் யார் என்பதை சிலர் தெரிந்து கொண்டார்கள். பலருக்கு இன்னமும் புரியவில்லை. இந்தக் கட்டுரையை படித்தால், ஓரளவு தெளிவு கிடைக்கும்.

2009-ம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிந்தபின், விடுதலைப் புலிகளின் ஏராளமான ஆவணங்கள் இலங்கை உளவுப் பிரிவினரிடம் சிக்கின. தவிர, இயக்கத்தில் இருந்து விட்டு தடுப்பு முகாம்களில் இருந்த பலர் கொடுத்த தகவல்களும் ஏராளம்.

இந்த தகவல்களில் இருந்து, தம்மிடம் சிக்காமல் வெளியே உள்ள ஆட்கள் யார் யார் என்பதை உளவுத்துறை ஸ்கெட்ச் போட்டுக் கொண்டது. அவர்கள் எங்கெங்கே போயிருப்பார்கள் என தேட தொடங்கினார்கள்.

அப்படி தேடப்பட்டவர்களில் ஒருவர், இந்த குஷாந்தன் மாஸ்டர். இயக்கத்தில் இவருக்கு மற்றொரு பெயர், முல்லைச்செல்வன். நிஜ பெயர், சுந்தரலிங்கராஜா குஷாந்தன். ஜூன் 5, 1969-ல் பிறந்தவர். சொந்த ஊர், யாழ்ப்பாணம் அருகேயுள்ள மீசாலை.

குஷாந்தன் விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் பிரபாகரனால், விமானம் தொடர்பான பயிற்சி பெற முதலில் தாய்லாந்துக்கும், பின் கனடாவுக்கும் அனுப்ப பட்டவர். இதனால், யுத்தம் முடிந்தபின் இவரால் சுலபமாக ஏதோ ஒரு வெளிநாட்டுக்கு சென்றுவிட முடியும் என்று ஊகித்தார்கள்.

இவர் ஐரோப்பா வரை போனால், எங்கே போவார் என ஒரு ஊகம் இருந்தது. அதையடுத்து, பிரிட்டிஷ் உளவுத்துறை எம்.ஐ.-5 மூலம், பிரிட்டனில் இருந்த ஒரு வீடு மீது கண்வைத்திருந்தார்கள்.

அந்த வீட்டில் இருந்தவர், வான்புலிகள் பிரிவை தோற்றுவித்த கர்னல் சங்கரின் மனைவியின், சகோதரி. அதற்குமேல் அவருக்கு விடுதலைப் புலிகள் விவகாரத்தில் வேறு முக்கியத்துவம் கிடையாது. ஆனால் அவரது கணவர், வெளிநாட்டு புலிகள் பிரிவுகள் ஒன்றில் முக்கிய புள்ளி.

“அவரது பெயருக்கு முன் பட்டம் ஒன்று உள்ளது” என்று சொன்னால், பிரிட்டிஷ் தமிழர்கள் புரிந்து கொள்வார்கள்.

குஷாந்தன் மாஸ்டருக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு?

அது திருமண வழித் தொடர்புதான்.

லண்டனில் உள்ள பெண், கர்னல் சங்கரின் மனைவியின் சகோதரி என்று சொன்னோம் அல்லவா? கர்னல் சங்கரின் மனைவியின் மகள்தான், இந்த குஷாந்தன் மாஸ்டரின் மனைவி.

குழப்புகிறோமா? விளக்கமாக சொல்லிவிடலாம்.

கர்னல் சங்கர் பிரபாகரனுக்கு நெருக்கமானவர். கனடாவின் மொன்ட்ரியால் நகரில் ஏர்-கனடா நிறுவனத்தில் பணி புரிந்துவிட்டு, இலங்கை சென்று விடுதலைப் புலிகளுடன் இணைந்தவர். அவரது சகோதரர் கரன் என்பவரும், இயக்கத்தில் இருந்தார். இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த காலத்தில், உயிரிழந்தார்.

யுத்தத்தில் கணவனை இழந்த விதவைகளுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டும் என்ற புலிகளின் கோரிக்கையை ஏற்று, சகோதரரின் மனைவியாக இருந்தவரை மறுமணம் செய்தார் சங்கர்.

மனைவியை, ‘குகா அக்கா’ என்று புலிகள் இயக்கத்தில் அழைப்பார்கள். இவர் சங்கரை மறுமணம் செய்தபோது, அவருக்கு ஒரு மகள் இருந்தார். மகளையும் தனது மகளாக சுவீகாரம் செய்துகொண்டார் சங்கர்.

இந்த மகளின் கணவன்தான், தற்போது கைது செய்யப்பட்டுள்ள குஷாந்தன் மாஸ்டர்.

திருமணத்துக்கு முன்பே சங்கர் கண்ணிவெடி தாக்குதல் ஒன்றில் மரணமடைந்து விட்டார். சங்கர் குடும்பத்துடன் மிக நெருக்கமான பிரபாகரனும், மனைவி மதிவதனியும் அந்த திருமணத்தை நடத்தி வைத்தார்கள். இதுதான், குஷாந்தன் மாஸ்டரின் பின்னணி.

ஏற்கனவே விமானம் தொடர்பான பயிற்சிகளை தாய்லாந்திலும், கனடாவிலும் பெற்றிருந்த நிலையில், 2004-ம் ஆண்டு இவரை மீண்டும் மேற்படிப்புக்காக மலேசியா அனுப்பினார் பிரபாகரன். அங்கே எலக்ட்ரோனிக்ஸ் இஞ்சினியரிங் படித்துவிட்டு, 2007-ல் இலங்கை திரும்பினார் குஷாந்தன் மாஸ்டர்.

குஷாந்தன் மாஸ்டர் விமானி பயிற்சி மட்டும் பெற்றவர் அல்ல. இவர் ஒரு AME (Aircraft Maintenance & Engineering) ஆள்.

இதனால், வான்புலிகளில் இணைந்தவர்களுக்கு பயிற்சியும் கொடுத்தார். புலிகள் வைத்திருந்த இலகு ரக பயணிகள் விமானத்தை குண்டு வீசும் விமானமாக மாற்றி அமைத்ததிலும் இவரது பங்களிப்பு முக்கியமாக இருந்தது.

அந்த விமானங்களின் heat source-ல் மாற்றம் செய்தது, இவரது ஐடியாதான் என்கிறார்கள்.

தற்போதுள்ள தகவல்களின்படி, வான்புலிகள் தாக்குதல் நடத்திய எந்த விமானத்தையும் இவர் செலுத்தி செல்லவில்லை என்று தெரிகிறது. ஆனால், அந்த விமான தாக்குதல்களை திட்டமிட்டுக் கொடுத்தவர் இவர்தான்.

இறுதி யுத்தம் முடிவதற்கு முன்பே, வான்புலி விமானங்கள் 2009-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி சுட்டு வீழ்த்தப்பட்டு விட்டன. அதன்பின் வன்னியில் இருப்பது பயனற்றது என்பதால், மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறி, தமிழகம் சென்றார். அங்கிருந்து லண்டன் சென்று விட்டார்.

மனைவியின் தாய் குகா அக்கா, பிரபாகரனின் மனைவி மதிவதனியின் நெருங்கிய தோழி என்பதால், இறுதிவரை அவர்களுடனேயே இருந்து, மதிவதனி போலவே வன்னியில் மரணமடைந்தார்.

லண்டனில் இவர்கள் வந்து சேர்ந்ததை, நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி, பிரிட்டிஷ் உளவுத்துறையின் உதவியுடன், இலங்கை உளவுத்துறை தெரிந்து கொண்டது.

அவர் லண்டனிலேயே செட்டிலாகி, சொந்த வாழ்க்கையை பார்க்க தொடங்கியிருந்தால், சிக்கல் இருந்திருக்காது.

இதை எப்படி சொல்கிறோம் என்றால், இந்த குஷாந்தன் மாஸ்டர், வான்புலிகள் பிரிவின் துணை தலைவராக இருந்தவர். அந்த பிரிவின் தலைவராக இருந்தவரது பெயர், அச்சுதன் (நிஜ பெயர், சிவராசா பிருந்தாவன்).

இவர் விமானிகளுக்கான பயிற்சியை பிரான்ஸில் பெற்றவர். பிரான்ஸ் நாட்டு பிரஜை.

கர்னல் சங்கர், குஷாந்தன், அச்சுதன்

கர்னல் சங்கர், குஷாந்தன், அச்சுதன்

இறுதி யுத்தம் முடிந்தபின் இனி செய்வதற்கு ஏதுமில்லை என அனைத்திலும் இருந்து ஒதுங்கிக் கொண்டு, தற்போது மனைவி, மற்றும் இரு குழந்தைகளுடன் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வாழ்வதாக தெரிகிறது.

ஆனால் குஷாந்தன் மாஸ்டர் அப்படி செய்யவில்லை.

மனைவியை பிரிட்டனில் விட்டுவிட்டு, மலேசியா சென்றார். அங்கிருந்து புலிகளின் வெளிநாட்டு பிரிவுடன் தொடர்பில் இருந்து, சில வேலைகளை செய்யத் தொடங்கினார்.

அதையடுத்தே அவரை ‘தூக்குவது’ என இலங்கை உளவுத்துறை முடிவு செய்தது. இன்டர்போலுக்கும், மலேசிய பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கும் இவர் பற்றிய தகவல்களை கொடுத்தது.

இப்போது, கைது செய்து கொழும்புக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.

இவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் பல விஷயங்கள் தெரிய வந்துள்ளதாகவும், வெளிநாடுகளில் உள்ள யார் யாருக்கு என்ன தொடர்புகள் உள்ளன என்ற விபரங்களை இவர் கூறியுள்ளார் எனவும், தெரியவருகிறது.Post a Comment

Protected by WP Anti Spam