By 19 October 2014 0 Comments

தடை நீக்கம் விடுதலைப் புலிகள் புத்துயிர் பெற உதவலாம்! சங்கரி!!

2022556886Untitled-1தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் இரத்துச் செய்தமையானது, இலங்கையின் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக உள்ள வட மாகாணத்தில் பிரிவினைவாத மற்றும் பயங்கரவாதம் புதுப்பிக்கப்பட உதவலாம் என தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி எச்சரித்துள்ளார்.

பின்னிணைப்பு

இதேவேளை தமிழீழ கோரிக்கை கைவிடப்படுமானால் நிறைவேற்று அதிகார முறைமையை கைவிடத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தமையானது நாட்டிலுள்ள மக்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது என, வீ ஆனந்த சங்கரி ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

மேதகு ஜனாதிபதி அவர்களுக்கு,
எமக்கு வேண்டியது சமாதானம், ஒற்றுமையுடன் கூடிய இணக்கப்பாடு தமிழ் தேசிய கூட்டமைப்பும் புலம்பெயர்ந்த மக்களும் பிரிவினை கோருவதையும், தமிழீழம் அமைப்பதையும் கைவிடுவார்களேயானால் தாங்களும் நிறைவேற்று அதிகார முறைமையை கைவிட தயாராக இருப்பதாக தெரிவித்தமையானது நாட்டிலுள்ள பல்லின மக்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆனால் ஆதிக்கம் செலுத்துகின்ற புலம்பெயர்ந்தவர்களும் அவர்களில் தங்கியிருந்து செயற்படுகின்ற தமிழ் தேசியகூட்டமைப்பும், இதற்கு சம்மதிக்கத் தயங்குவார்கள். எது எப்பிடியிருப்பினும் தங்களின் கூற்று உறுதியாக இருக்குமானால் இந் நாட்டின் பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சாதகமானதொரு நிலைமையை உருவாக்க பலர் தயாராகவே உள்ளனர்.

1970ம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற சில சம்பவங்களை நினைவூட்ட வேண்டுமானால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கோ புலம் பெயர்ந்தவர்களில் ஒரு பகுதியினருக்கோ இப்பிரச்சினையில் தலையிடுவதற்கு அருகதையுண்டா இல்லையா என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியும்.

எவரும் தமது சொந்த தேவைக்காக நாட்டின் சரித்திரத்தை மாற்றியமைக்க கூடாது. எல்லாப் பிரச்சினைகளிலும் பார்க்க நாட்டின் முக்கிய பிரச்சினை முதலிடம் வகிக்கட்டும்.

தமிழரசு கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய இரு அமைப்புக்களும் நேர்மையான முறையில் புனரமைப்பு செய்யப்படவில்லை. நான் இந்நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்டவனாக இருக்கிறேன். எமது மக்கள் எதுவித இன வேறுபாடின்றி சகோதர சகோதரிகளாக வாழ வேண்டும் என்பதே எனது அவா.

முதல் முதல் த.தே.கூட்டமைப்பாக அமைக்கப்பட்ட கட்சிகள் த.வி.கூ, அ.இ.த.கா, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகியவையே அன்றி தமிழரசு கட்சியல்ல. த.தே.கூட்டமைப்பிலிருந்து த.வி.கூட்டணியை நீக்கிவிட்டு 26 ஆண்டுகளாக இயங்காமலிருந்த தமிழரசு கட்சியை சேர்த்துக் கொண்டார்கள்.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் இனப்பிரச்சினை சம்பந்தமாக பேசி ஓர் உடன்பாட்டுக்கு வருவது சம்பந்தமாக பல்வேறு கட்சிகளின் தலைவர்களை கூட்டி ஒன்றுகூடல் வைப்பதற்கு ஆரம்ப நடவடிக்கையாக சில தலைவர்களுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளேன்.

பெரிய கட்சிகளுடன் இணைந்து செயற்படும் சிறு கட்சிகள் இப்பணியில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்குமென எதிர்பார்க்கின்றோம். நாம் ஒற்றுமையாக ஏகோபித்த முடிவெடுத்த பின் நேரில் சென்று வன்முறையையும் பிரிவினையையும் கைவிடுமாறு பல்வேறு கட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பதோடு சமாதானமாகவும் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழக்கூடியவொரு நாட்டை உருவாக்கி அதில் சகலரும் சமவுரிமையோடு வாழ வழிவகுப்போம், என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Post a Comment

Protected by WP Anti Spam