கல்கண்டு (திரைவிமர்சனம்)!!

Read Time:7 Minute, 51 Second

Kalkanduநாயகன் கார்த்திக் (கஜேஷ்) மற்றும் அவரது அண்ணன் விக்னேஷ் (அகில்) இருவரையும் டாக்டருக்கு படிக்க வைத்து அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்பது இவர்களுடைய அப்பாவுக்கு ஆசை.

அதன்படி, மூத்தவனான விக்னேஷை டாக்டருக்கு படிக்க வைத்து வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்துவிடுகிறார். ஆனால், இளையவனான கார்த்திக்கோ பிளஸ்-2-வில் குறைந்த மதிப்பெண் பெறுகிறார். இதனால், அவரை மருத்துவ படிப்பு வைக்க முடியவில்லை.

இதனை தனது அண்ணனிடம் சொல்கிறார் கார்த்திக். அவரோ, பணம் கொடுத்து மெடிக்கல் சீட் வாங்கிடலாம் என ஆலோசனை கூறுகிறார். அதன்படி, முக்கிய அமைச்சரிடம் பேசி, பணம் கொடுத்து மெடிக்கல் சீட் வாங்க ஏற்பாடு செய்கிறார். அந்த பணத்தை கார்த்திக்கே அமைச்சரிடம் கொடுக்க செல்கிறார்.

பணத்தை வாங்கிக் கொண்ட அமைச்சர் அவரது ரிஜிஸ்டர் நம்பரையும், பேரையும் எழுதிக் கொடுக்க சொல்கிறார். அதை எழுதிக் கொடுக்கும் கார்த்திக் தன்னுடைய ரிஜிஸ்டர் நம்பரான 10015-ஐ 1015 என்று தவறுதலாக எழுதிக் கொடுத்துவிடுகிறார். பின்னர், மாணவர் சேர்க்கைக்கான பெயர் விவரம் வெளியிடப்பட்டதில் கார்த்திக் பெயர் வரவில்லை.

கோபமடைந்து அமைச்சரிடம் சென்று நியாயம் கேட்கிறான் கார்த்திக். அமைச்சரோ, அவன் எழுதிக்கொடுத்ததை நினைவு கூர்கிறார். அப்போது கார்த்திக் தான் செய்ததுதான் தவறு என்பதை உணர்ந்து அமைச்சரிடம் கெஞ்சிப் பார்க்கிறான். ஆனால், அவரோ ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லி கார்த்திக்கை அனுப்பி விடுகிறார்.

பின்னர், சோகத்துடன் திரும்பும் கார்த்திக், வீட்டில் இந்த உண்மையை மறைத்து, தனக்கு மெடிக்கல் சீட் கிடைத்துவிட்டதாகவும், அதற்காக சென்னைக்கு போவதாகவும் கூறிவிட்டு சென்னைக்கு வருகிறார். சென்னையில் வந்து ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்குகிறார்.

அதே லாட்ஜில் தங்கியிருக்கும் அழகப்பன் (கஞ்சா கருப்பு), ராமநாதன் (சாமிநாதன்), டவுட் செந்தில் ஆகியோர் இவருக்கு நண்பர்களாகிறார்கள். ஒருநாள் தன்னுடைய சோகத்தை அவர்களிடம் பகிர்ந்துகொள்ளும் கார்த்திக்கிடம் உன்னுடைய பணத்தில் மெடிக்கல் சீட் வாங்கி படிப்பவர் யார் என்பதை தேடிக் கண்டுபிடித்து அந்த பணத்தை வாங்குவோம் என்று ஆலோசனை கூறுகின்றனர்.

அதன்படி, மெடிக்கல் காலேஜ் பியூனின் உதவியோடு அந்த ரிஜிஸ்டர் நம்பருக்குண்டான நபரை தேடிக் கண்டுபிடிக்கிறார் கார்த்திக். அவர்தான் நாயகி கார்த்திகா (டிம்பிள் சோப்டே). அவரைப் பார்த்ததுமே காதல் வயப்பட்டு விடுகிறார் கார்த்திக். அவள் பின்னாலேயே சுற்றுகிறார். ஆனால், அவளோ இவனை கண்டுகொள்வதாக இல்லை.

ஒருநாள் அவளிடம் தன்னுடைய காசில்தான் அவளுக்கு மெடிக்கல் சீட் கிடைத்தது என்றும், பணத்தை திருப்பிக் கொடு, இல்லையென்றால் என்னை காதலித்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று மிரட்டுகிறார் கார்த்திக். வேறுவழி தெரியாத கார்த்திகாவும், தோழியின் ஆலோசனைப்படி கார்த்திக்கை காதலிப்பதாக ஒப்புக் கொள்கிறாள்.

படிப்பு முடிந்ததும் கார்த்திக்கிடம் சொல்லிக் கொள்ளாமல் அவளுடைய சொந்த ஊருக்கு சென்று விடுகிறாள் கார்த்திகா. அவள் எங்கு சென்றால் என்பது தெரியாமல் அவளை தேடி அலைகிறார் கார்த்திக்.

இறுதியில், கார்த்திகாவை தேடிக் கண்டுபிடித்து அவளுடன் ஒன்று சேர்ந்தாரா? கார்த்திக்கின் தில்லு முல்லுவை அவரது பெற்றோர்கள் அறிந்தார்களா? என்பதே மீதிக்கதை.

நாயகன் கஜேஷ், அவருடைய அப்பா ஆனந்த் பாபுவை அப்படியே திரையில் பார்ப்பது போன்ற உணர்வை கொடுத்திருக்கிறார். ஆட்டத்திலும், கொண்டாட்டத்திலும், நடிப்பிலும் தன்னுடைய தாத்தா நாகேஷ், அப்பா ஆனந்த் பாபு ஆகியோரின் பெயரை காப்பாற்றியிருக்கிறார். நாயகியிடம் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளில் பளிச்சிடுகிறார். இறுதிக் காட்சியில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகனின் அண்ணனாக வரும் அகிலுக்கு சிறப்புத் தோற்றம்தான் என்றாலும், அழுத்தமான நடிப்பு. அண்ணனுக்குண்டான பொறுப்புடன் அழகாக நடித்திருக்கிறார்.

நாயகி டிம்பிள் சோப்டே அழகாக இருக்கிறார். தாவணியில் மிகவும் அழகாக இருக்கிறார். நடிப்பிலும் மிளிர்கிறார். நாயகனின் நண்பர்களாக வரும் கஞ்சா கருப்பு, சாமிநாதன், டாடி ஒரு டவுட் செந்தில் ஆகியோர் வரும் காட்சிகள் கலகலப்பு. மெடிக்கல் ரெப்பாக வரும் மயில்சாமியும் கலகலக்க வைக்கிறார். மனோபாலாவை, மகாநதி சங்கரின் ஆட்கள் அடிக்கும் காட்சிகள் நகைச்சுவையின் உச்சக்கட்டம்.

பாசம், காதல், நகைச்சுவை கலந்த கலவையாக படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஏ.எம்.நந்தகுமார். திரைக்கதையில் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைந்தாலும், படத்தை இறுதிவரை போரடிக்காமல் கொண்டு சென்றிருக்கிறார். இரண்டாம் பாதியில் ஏகப்பட்ட சஸ்பென்ஸ், டுவிஸ்டுகளை வைத்து கொஞ்சம் குழப்பமடையவும் வைத்திருக்கிறார்.

கே.வி.கே.சுரேஷின் ஒளிப்பதிவு கலர்புல்லாக இருக்கிறது. பாடல் காட்சிகளை அழகாக படமாக்கியிருக்கிறார். கண்ணனின் இசையில் மீனே வாஸ்து மீனே பாடல் ஆட்டம் போட வைக்கிறது. மற்ற பாடல்களும் ரசிக்கும்படி இருக்கிறது.

மொத்தத்தில் ‘கல்கண்டு’ தித்திக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமியை கொலை செய்து கற்பழித்த தையல்காரர்: மும்பையில் கொடூரம்!!
Next post முத்தத் திருவிழாவில் தலையிட கேரள ஐகோர்ட் மறுப்பு!!