நோகடிக்கப்படும் நோபலின் நோக்கங்கள்… – கோவை நந்தன் (கட்டுரை)!!

Read Time:19 Minute, 21 Second

Nobel_medalகடும் துப்பாக்கிச் சண்டை, பீரங்கி மோதல், ஊடுருவல், சுட்டுக்கொலை இப்படி எல்லையில் பல ஆண்டுகளாகவே அடிக்கடி பதற்றம் தகிக்கும் இரு தேசங்களுக்கு மத்தியில் உலக அமைதிப்பரிசு எனும் வெள்ளைக் கொடி ஒன்று பறக்க விட்டிருக்கிறது நோர்வேயின் நோபல் பரிசுக் குழுவினால்…….

இந்தியரான கைலாஹ் சத்யார்த்திக்கும் பாகிஸ்தான் சிறுமி மலாலாவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, எல்லையில் எதிரிகளாய் ஆவேசம் கொண்டிருக்கும் இந்தியா,பாகிஸ்தான் இடையே அமைதியைத் தோற்றுவிக்குமா……? உலக அமைதி என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ள இந்த விருதுக்கு இவர்கள் தகுதி பெற்றவர்களா……? தவறு செய்து விட்டதா பரிசுக்குழு…? அல்து அது அப்படித்தானா……? இப்படியான பலகோணக் கேள்விகள் உலகம் ழுவதும் ஆங்காங்கே.

குழந்தைகள் நல உரிமைகளுக்காக போராடிய இந்திய சமூக ஆர்வலர் கைலாஹ் சத்யார்த்திக்கும், தலிபான்களின் கொடூரங்களில் எல்லாம் உயிர் தப்பி பெண்கல்விக்காக போராடி வருகிறார் என அறியப்படும் பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசப்புக்கும் 2014ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

அன்னை தெரேசாவுக்கு பிறகு அமைதிக்கான நோபல் பரிசு பெறும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை கைலாஹ் சத்யார்தியும் உலகிலேயே மிக இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமையை மலாலா யூசப்சாயும் பெற்றுள்ளார்.

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பிறந்து டெல்லியில் ஒரு மின்பொறியாளராக கடமையாற்றிய 60 வயதான கைலாஹ் சத்யார்தி என்பவரின் சமூக ஈடுபாட்டை 1983ஆம் ஆண்டு இவர் ஆரம்பித்த “பச்பன் பச்சோ அந்தோலன்” என்கின்ற குழந்தை தொழிலாளர் மீட்பு, தொண்டு நிறுவனம்தான் சமூகத்திற்கு அடையானம் காட்டியது.

அற வழியிலான இவரது போராட்ட முன்னெடுப்புகளால் இதுவரை 80 ஆயிரம் குழந்தைகள் ‘பச்பன் பச்சோ அந்தோலன்’ அமைப்பினால் பல்வேறு விதமான சுரண்டல்களிலிருந்து மீட்டக்கப்பட்டு மறுவாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் அனைவருக்கும் கல்வி திட்டம் உருவாவதற்கும் முக்கிய காரணமாக திகழ்ந்த கைலாஹ் சத்யார்தியின் அயராத பணிக்காக அமெரிக்கா,ஜெர்மனி, இத்தாலி,ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் பல்வேறு விருதுகளை வழங்கி இவரை கௌரவித்துள்ளன.

இன்று உலகம் அறிந்த 17 வயதாகும் சிறுமியான மலாலா யூசப்சாய் பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற பகுதியில் பிறந்தவர். மலாலா வசித்த பகுதியிலும், பெண்களின் கல்விக்கு தலிபான்களின் தடை இருந்தபோதும் அதையும் மீறி கல்வி பயின்ற மலாலா, தலிபான்கள் ஒடுக்குமுறை குறித்து உருது மொழி இணையத்தளம் ஒன்றின் மூலம் உண்மைகளை வெளிக் கொண்டு வந்தார்.

ஆரம்பத்தில் ஊடகத்தில் இவர் பெயர் மட்டுமே வெளியிடப்பட்டதால் இவரை தலிபான்களால் அடையாளம் காண முடியவில்லை, ஓரிரு வருடங்களாக. இந்நிலையில் 2012ல் வெளிப்படையாக தொலைக்காட்சி நிகழ்சி ஒன்றில் மலாலா தோன்றி பேட்டி அளிக்க, அடையாளம் கண்டுகொண்ட தலிபான்களின் கொலை வெறியிலிருந்து அதிர்ஸ்டவசமாக உயிர் தப்பினார்.

பெண்கள் கல்வி உரிமைக்காகக் குரல்கொடுத்த, தலிபான்களின் துப்பாக்கிக் குண்டுகளை சுமந்து கொண்டிருந்த, மலாலா என்கின்ற சிறுமிக்கு இங்கிலாந்து அடைக்கலம் கொடுத்து அழைத்து சென்றது. மரணத்தின் விளிம்பு வரை சென்று தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் தப்பிய மலாலாவை நோக்கி உலகத்தின் ஒட்டுமொத்த கண்களும் திரும்பின, அனைத்து ஊடகங்களிலும் இவர் முக்கிய இடம் பிடித்தார்.

பெண்கள் கல்வி பற்றியும் சிறுவர்கள் முன்னேற்றம் பற்றியும் தனது பிரசாரத்தை தொடர்ந்தும் மேற்கொண்டு வரும் மலாலாவின் பிறந்த நாளை ஐ.நா.சபை மலாலா தினம் என்று கடைபிடிக்க கேட்டுக் கொண்டது. பாகிஸ்தான் நாட்டின் உலக அமைதி அறக்கட்டளை அமைப்பின் தைரியத்துக்கான விருதையும் பெற்றவர் சிறுமி மலாலா.

பாகிஸ்தான்-இந்தியா நாடுகளுக்கிடையேயான பதற்றம் அதிகரித்துள்ள தற்போதைய சூழலில் இவர்கள் இருவரும் அமைதிக்காக பெருமைப்படுத்தப்பட்டிருப்பது இரு நாடுகளையும் கொஞ்சமாவது யோசிக்க வைக்குமா…? என்பதற்கான விடை மட்டுமல்ல, மலாலாவும் கைலாஹ் சத்யார்தியும் உலக அமைதிக்காக செய்த பணிகள் தான் என்ன…..? என்கின்ற கேள்விக்கான விடையும் கேள்வியாகவே தொக்கி நிறகிறது.

நோபல் பரிசு அமைப்பை ஏற்படுத்திய அல்பிரட் பேர்ணாட் நோபல் உலக அமைதிக்கான பரிசு யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதற்கான வரையறையை மிகவும் தெளிவாகவே வரையறுத்துள்ளார்.

“ஒரு தனிநபரோ,குழுவோ அல்லது அமைப்போ, பகைகொண்ட இரு நாடுகளை சமாதானமடையச் செய்வது, அங்கு நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தை வெளியேற்றுவது, ஆயுதங்களைக் குறைப்பது போன்ற அமைதியை நிலை நிறுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தால் அந்த நபருக்கோ, அமைப்பிற்க்கோ உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவேண்டும்” என அந்த வரையறை தெரிவிக்கிறது.

ஆனால் இவ்வாண்டு மட்டுமல்ல அண்மைய வருடங்களில் உலக அமைதி நோபல் பரிசு பெற்றவர்கள் செய்த காரியம் இந்த வரையறைக்குள் வருகிறதா…! தேர்வு எந்த அடிப்டையில் நடைபெறுகிறது…! நியாயமான சந்தேகங்ளே இவை.

நோர்வேயின் நோபல் பரிசுக்குழு அரசியல் அழுத்தம் உள்பட பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கும்,மேற்கத்திய உலகத்தின் சௌகரியங்களுக்குள்ளும் சிக்கி இருப்பதாக வைக்கப்படும் விமர்சனங்களில் உண்மை இல்லாமல் இல்லை. இதே அமைதிக்கான நோபல் பரிசு 2009இல் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கும் 2012இல் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் வழங்கப்பட்டது இந்தக்கருத்துக்கு வலுச்சேர்க்கும் அண்மைய உதாரணங்கள்.

12வயதாக இருக்கும்போதே தலிபான்களின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய மலாலாவை இங்கிலாந்து தேசம் மருத்துவம் பார்த்து பிழைக்க வைத்தது என்ற செய்தியை உலகின் மூலை முடுக்கெல்லாம் உணர்ச்சி கொட்டும் வகையில் லண்டன் பி.பி.சி, அமெரிக்காவின் சி.என்.என். உட்பட்ட மேற்குலக செய்தி நிறுவனங்கள் கொண்டுபோய் சேர்த்தன.

ஆப்கான் பகுதிகளில் தீவிரவாதத்துக்கு எதிரான போரினை மேற்குலகம் வரிந்து கட்டிக்கொண்டு நடத்திய போது, அங்கு ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதும், இதற்கு நடுநிலையாளர்கள் உலகம் பெரும் கண்டனம் தெரிவித்து வந்ததும், இந்த மலாலா பிழைக்க வைக்கப்பட்ட காலப்குதியிலேயே.

ஆப்கானிலும் பாகிஸ்தானின் ஆப்கான் எல்லைப்புறத்திலும் மேற்குலகின் போர் விமானங்கள் நடாத்திய தாக்குதலில் பல்லாயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதனை மூடி மறைக்க வேண்டுமாயின், தலிபான்களின் கொடுமைகள் மேலும் உலகுக்கு முன்னிறுத்தப்பட வேண்டும் என்கின்ற யுக்திக்கு பயன்படுத்தப்பட்ட கதாபாத்திரமே சிறுமி மலாலா என்கிறார்கள் மேற்கத்திய எதிர்ப்புச் சிந்தனையாளர்கள்.

மலாலா பெண் கல்வி-சிறுவர் பாதுகாப்பு புரட்சியாளர் என்பதனை மறு பேச்சின்றி ஏற்றுக் கொள்ளும் அதேவேளை உலக அமைதிக்காக இந்த சமூகத்திற்கு அவர் செய்த தியாகம் என்ன…? எப்படி இவர் அமைதிப் பரிசுக்கு தகுதியானவராக்கப்படார்…? என்கின்ற கேள்வி நியாயமானதாகவே பார்க்கப்படுகிறது.

இந்தியா முழுக்க குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்கு புனர்வாழ்வழித்ததற்காக கைலாஹ் சத்யார்த்தி போற்றப்பட வேண்டியவர் ,கொளரவிக்கப்பட வேண்டியவர் என்பதில் எந்த கருத்து முரண்பாடுகளும் இருக்க முடியாது. எந்தப் பெற்றோரும் தமது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி சமூகத்தில் பெரியவனாக்கத்தான் ஆசைப்படுவர்.

ஆனால் அனைவரினதும், குறிப்பாக இந்தியாவின் அடிமட்ட மக்கள் பலரின் பொருளாதாரச் சூழல் இதற்கு இடம் கொடுப்பதில்லை. இப்படியானவர்கள் வாழ்வதற்கு, அடுத்த வேளை உணவிற்கு கூட குடும்பத்தின் ஒருவரது பொருளீட்டல் மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. ஏழ்மைக் குடும்பங்களின் வறுமையைப் போக்குவதற்கான உலகளாவிய பொறிமுறைகள் ஏற்படுத்தப்பட்டால் மட்டுமே குழந்தை தொழிலாளர்களை முற்று முழுதாக ஒழிக்க முடியும் என்கின்ற பிரச்சினைகளுக்கான மூலகாரணத்தை வேரறுக்காமல் குழந்தை தொழிலாளர்களை மீட்டு அடைக்கலம் கொடுப்பது மட்டுமே இதற்கு நிரந்தரத் தீர்வாக அமையாது.

இருந்தும் இந்த பரபரப்பான உலகில், சுயவளர்ச்சியும், தமது இருப்பும் மட்டுமே குறிக்கோளாய்க் கொண்ட மனித சமூகத்தில் பிறர் நலனிலும் அக்கறை செலுத்தும் சிலரில் கைலாஹ் சத்யார்த்தி போற்றுதலுக்குரிய மனிதரேதான். ஆனால் இவரின் குழந்தைகள் மீட்பு பணிக்கும் உலகத்தில் அமைதி நிலை நிறுத்தப்படுவதற்கும் என்ன தொடர்பு….? என்பதே யதார்த்தவாதிகளின் கேள்வி.

ஆக இந்த வருடமும் உலக அமைதிக்காக தெரிவு செய்யப்பட்ட இருவருக்கும் உலக அமைதிக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. இந்தியா-பாகிஸ்தான்,இந்து-முஸ்லீம் என புவியியல், மத பின்புலத்தைக் கொண்ட இவர்கள் இருவருக்கும் பரிசுகள் அறிவிக்கப்பட்டதில் நோர்வே பரிசுக்குழுவின் சுயநலமும் அடங்கி உள்ளது எனலாம்.

நோர்வே அரசின் வெளியுறவுக் கொள்கையை பகட்டாக காட்டிக் கொள்வதற்காகவும் மேற்குலகம் இஸ்லாமுக்கு எதிரி அல்ல என்று போலி வேடம் புனையவும், இந்தியாவும் எங்களுக்கு கனிவான நாடு என்று பொய்மையாய் காட்டிக் கொள்வதற்காகவும் செய்யப்பட்ட திட்டமிடலே இப்பரிசு அறிவிப்பு என்றால் அது ஒன்றும் மிகையாகாது.

இப்பரிசுக்குழுவில் இடம்பெற்றிருக்கும் 5 பேரும் நோர்வே நாடாளுமன்றத்தின் முன்னைய உறுப்பினர்கள் மட்டுமல்ல இவர்கள் அனைவரும் முழுநேர அரசியல்வாதிகள். இவர்களின் நியமனம் பற்றி 2011 ஆம் ஆண்டிலேயே மிகப்பெரிய சர்ச்சைகள் வெடித்தன. பல்துறை நிபுணர்களும், உலகின் பல நாட்டு அறிஞர்களும் இதில் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கை அல்பிரட் நோபல் அறக்கட்டளையிடம் முன்வைக்கப்பட்டும் அது கவனத்தில் எடுத்துக் கொள்ளப் படவில்லை. நியாயமான இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டிருந்தால், சில வேளை இந்த முறையாவது உலக அமைதிக்கான பரிசு சரியான நபர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும்.

இந்த அமைதிக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்டதில் பல தடவை சர்ச்சைகள் வெடித்துள்ளன. றஸ்யாவின் மிக்கேல் கோர்பசேவ், இஸ்ரவேலின் இட்சாக் ரோபின் மற்றும் சிமோன் பெரஸ், பாலஸ்தீனத்தின் யாசர் அராபத்,அமெரிக்காவின் ஹென்றி கிஸிங்கர்,ஜிம்மி கார்ட்டர்,அல் கோர்,பராக் ஒபாமா, இப்படி பல தடவை பரிசுக்குழுவின் தேர்வுகள் கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது.

வியட்நாம் அதிபர் லி டக் தோ மற்றும் அமெரிக்க அதிபர் ஹென்றி கிஸ்ஸிங்கர் ஆகியோருக்கு அமைதிப் பரிசு அறிவிக்கப்பட்டபோது பரிசுக்குழுவில் இடம்பெற்றிருந்த 2 உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து அக்குழுவிலிருந்து ராஜினாமா செய்ய முன்வந்தார்கள் என்பதும் வியட்நாம் தேசத்தில் அமைதி இன்னமும் முழுமையாக எட்டப்படவில்லை அதனால் இந்தப்பரிசு எனக்கு தேவை இல்லை என்று லி டக் தோ பரிசை பெற்றுக் கொள்ள மறுத்திருந்ததும் வரலாற்றுச் செய்திகள்.

அமைதிக்காக தம்மை அர்ப்பணித்த உலகின் பல மாமனிதர்களை இப்பரிசுக்குழு நிராகரித்துள்ளது என்பதும் வெளிப்படை. இந்த வரிசையில் அண்ணல் மகாத்மா காந்தி, அமெரிக்காவின் எலினார் ரூஸ்வெல்ட், பர்மாவின் யு தாண்ட், நைஜீரிய எழுத்தளர் கென் சரோ, ஆகியோர் முக்கியமானவர்கள்.

உலகத்தின் உன்னதமானவர்களில் உயர்வான மனிதர் அண்ணல் மகாத்மா காந்தியின் பெயர் 1937,1938,1939,1947 ஆகிய ஆண்டுகளில் அமைதிப் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டும் வழங்கப்படவில்லை என்பதும் அதற்காக காந்தியின் மரணத்தின் போது இப்பரிசுக்குழு பகிரங்க வருத்தம் தெரிவித்ததும் வரலாற்றின் பக்கங்கள்.

“இப்பரிசுக்கு காந்தி வேண்டுமென்றே புறக்கணிக்கப் பட்டார். நோபல் பரிசு மகாத்மா காந்திக்கு பெருமை அல்ல. அப்பரிசு காந்திக்கு கொடுக்கப்பட்டிருந்தால் அது நோபல் பரிசுக்குத்தான் பெருமை’” என 2006-ல் இப்பரிசுக் குழுவின் செயலாளர் கெயிர் லூண்ட்ஸ்டெட் வருத்தத்துடன் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கைலாஹ் சத்யார்த்தியும் மலாலாவும் உலக அமைதிக்கு என்ன செய்து விட்டார்கள் என்பதை விட உத்தம பரிசில்கள் பலவற்றை உருவாக்கிய அல்பிரட் நோபலின் சிந்தனைகளும் இலட்சியமும் மழுங்கடிக்கப் படுகின்றனவே என்பதுதான் வேதனை.

சத்யார்த்திக்கு சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விருதும், மலாலாவுக்கு சர்வதேச கல்வி விருதும் வழங்கி இருந்தால், எந்த விமர்சனமும் எழுந்திருக்க எந்த முகாந்திரமும் இருந்திருக்காது. ஆக தொடர்ந்தும் மேற்கின் நலன்கள் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது இந்த வருடத்து உலக அமைதி விருதுத் தேர்வினூடாக மீண்டும் வெளிப்படுத்தப் பட்டுள்ளது.

பரிசுக்குரியவர்களின் இரு நாட்டு மக்களும் பவலருடங்களாக அமைதியை தொலைத்துவிட்டு அலைந்து கொண்டேயிருக்க, அறிவிக்கப்பட்டுள்ளது அமைதிக்கான நோபல் பரிசு இவர்கள் இருவருக்கும்…

எவ்வளவு முரணான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம்…..?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாயின் உணர்வுகளை குழந்தைக்கு அளிக்கும் திறன் தாய்ப்பாலுக்கு உண்டு: ஆய்வில் தகவல்…!!
Next post நாகர்கோவிலில் பஸ் நிலையத்தில் சிக்கிய கள்ளக்காதல் ஜோடி!!