சின்னமனூர் அருகே பாலியல் பலாத்காரம் செய்து பள்ளி மாணவி கொலை?
சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் நந்தினி (வயது11). அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5–ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலையும் அணிந்திருந்தார். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய நந்தினி அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறிச்சென்றார்.
ஆனால் நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஓடைப்பட்டி போலீசில் அவரது தாயார் காளீஸ்வரி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்த நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கிணற்றில் நந்தினி இறந்துகிடப்பதாக தகவல் கிடைத்தது.
உத்தமபாளையம் தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து வந்து பள்ளி சீருடையுடன் கிணற்றில் பிணமாக மிதந்த நந்தினியின் உடலை மீட்டனர். அவரது உடல் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்டது. அங்கு இன்று மாணவியின் உடல் பரிசோதனை செய்யப்படுவதையொட்டி ஏராளமான உறவினர்கள் கூடினர்.
மாணவி கொலை செய்து கிணற்றில் வீசப்பட்டாரா? பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கணேசனுக்கு வேண்டாத நபர்கள் யாரேனும் உள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.