இலங்கை பிரச்சினை குறித்து சென்னையில் மாநாடு!!
இலங்கை பிரச்சினை குறித்து, சென்னையில் நாளை மாநாடு நடைபெற உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
தமிழக பா.ஜ.க.தலைமை அலுவலகமான சென்னை கமலாலயத்தில் கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இலங்கை தமிழர் பிரச்சினை, இந்திய மீனவர்கள் பிரச்சினையை அரசியல் ஆக்காமல் அதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணும் முயற்சியாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாநாடு நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் காலையில் தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள கூட்டம் நடக்கிறது. இதில் இலங்கை தமிழர்களின் வாழ்வாதார பிரச்சினைகள் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்பட உள்ளது. இலங்கையை சேர்ந்த சில வல்லுனர்களும், இலங்கை தமிழர் நலனில் அக்கறை கொண்ட அமைப்பை சேர்ந்த தலைவர்களும் கலந்துகொள்கிறார்கள்.
அன்றைய தினம் மாலையில், ‘இலங்கை தமிழர் பிரச்சினையில் தீர்வை நோக்கி’, ‘இந்திய மீனவர்கள் பிரச்சினையில் தீர்வை நோக்கி’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது. இதில், இலங்கை பிரச்சினையில் தீர்வை நோக்கி என்ற கருத்தரங்கில் சமீபத்தில் இலங்கை சென்று வந்த பா.ஜ.க.தேசிய பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் பங்கேற்கிறார்.
‘இந்திய மீனவர்கள் பிரச்சினையில் தீர்வை நோக்கி என்ற தலைப்பில் நடைபெறும் கருந்தரங்கில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொள்கிறார். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டு, இலங்கை பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.