குடிபோதையில் வாகனம் ஓட்டிய லாரி டிரைவரை குத்திக் கொன்ற கிளீனர்!!
தூத்துக்குடியில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு மாட்டுத்தீவனம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. அந்த லாரியை கேரள மாநிலம் பழைய காடையைச் சேர்ந்த சந்திரன் என்பவர் ஓட்டிச் சென்றார்.
அந்த லாரியில் கிளீனராக நெய்யாற்றின்கரை அருகே உள்ள மரியபுரத்தைச் சேர்ந்த டென்னிஸ் பிரான்சிஸ் (வயது 39) என்பவர் சென்றார். அந்த லாரி கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை சோதனை சாவடியை நெருங்கிக் கொண்டிருந்தபோது லாரி டிரைவர் சந்திரன் லாரியை சாலையோரமாக நிறுத்தி விட்டு மது குடிக்க சென்றார்.
அதன் பிறகு அவர் வந்து லாரியை மீண்டும் எடுத்த போது, கிளீனர் டென்னிசுக்கும் அவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. குடித்து விட்டு லாரி ஓட்ட வேண்டாம் என்று கிளீனர் கூறியதால் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. கிளீனரை டிரைவர் சந்திரன் தாக்கி உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கிளீனர் டென்னிஸ் தன்னிடம் இருந்த கத்தியால் டிரைவர் சந்திரனை குத்தி விட்டு தப்பியோடி விட்டார். இதனால் ரத்த வெள்ளத்தில் லாரிக்குள் சரிந்த சந்திரன் அலறி உள்ளார். அவரது கூச்சல் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் நெய்யாற்றின்கரை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நெய்யாற்றின் கரையில் பதுங்கி இருந்த கிளீனர் டென்னிசை கைது செய்தனர்.