தமிழீழ விடுதலைப் போராட்டமும், இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைத் தமிழர்களும்.. -கலையரசன் (கட்டுரை)!!

Read Time:14 Minute, 12 Second

timthumb (1)இழப்பதற்கு எதுவுமற்ற ஏழை மக்கள் தான் போராட முன்வருவார்கள்.” என்ற மார்க்சியக் கோட்பாட்டின் அடிப்படையில் தான், தமிழீழத்திற்கான விடுதலைப் போராட்டமும் நடந்து முடிந்துள்ளது.

“மார்க்சியம் ஒரு வரட்டு சூத்திரம்” என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள், அந்த உண்மையை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. தமது நடுத்தர வர்க்க நிலைப்பாட்டில் இருந்தே உலகைப் பார்க்கும், வலதுசாரி தமிழ் தேசியவாதிகள், பல்வேறு கருதுகோள்களை வைத்து தவறென நிறுவ முயற்சிக்கின்றனர். அவர்கள் யாரும், தமிழ் பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்தவர்கள் அல்ல.

வலதுசாரி தமிழ் தேசியவாதிகள், வசதியான நடுத்தர வர்க்க பின்னணி கொண்டவர்கள் என்பது ஒரு தற்செயல் அல்ல. வெளிநாடுகளில் வசதியாக வாழ்வோர், தமக்குத் தெரிந்த குடும்ப உறுப்பினர்கள் பலர், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளிகளாக இருந்த உதாரணங்களை கொண்டு வந்து காட்டுகிறார்கள்.

மேற்கத்திய நாடுகளில் வாழுவோர் எல்லோரும், “நடுத்தர வர்க்கம்” என்று எப்படி உறுதியாகக் கூற முடிகின்றது? இதே நிலைமை தான், பணக்கார வளைகுடா நாடுகளிலும் உள்ளது.

ஒரு நாட்டில் அனைவரினதும் வாழ்க்கை வசதி உயர்ந்திருக்கிறது என்பதாலேயே அவர்கள் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களாக மாறி விடுவார்களா? “பணக்கார” நாடுகளில் நிலவும், பொருளாதாரப் பிரச்சினைகள் பற்றிய போதுமான அறிவு எம்மிடம் இருக்கிறதா? அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, சவூதி அரேபியாவில் எத்தனை இலட்சம் ஏழைகள் வாழ்கின்றனர் என்பதை அறிந்து வைத்திருக்கிறோமா?

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இருந்த, வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்ந்த மக்கள் எத்தனை பேர் என்ற விபரம், அங்கு பணியாற்றிய அரசு சாரா தொண்டு நிறுவனங்களிடம் (NGO) உள்ளது. ஐ.நா.வின் நிறுவனங்கள், செஞ்சிலுவை சங்கம் ஆகியனவும் அந்த விபரங்களை வைத்திருந்தன.

மேலும், நிவாரணப் பொருட்கள் யாவும் புலிகளின் மேற்பார்வையின் கீழ் தான் வழங்கப் பட்டன. மாவீரர் குடும்பங்கள், போராளிக் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதில் முன்னுரிமை கொடுக்கப் பட்டது.

புலிகளின் கட்டுபபாட்டுப் பகுதியில் வாழ்ந்த பெரும்பான்மை தமிழ் மக்கள் இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைகள் என்பது ஒரு “வரட்டு சூத்திரம்” அல்ல. அது யதார்த்தம்.

வெளிநாடுகளில் வசதியாக வாழும் பலரின் உறவினர்களும், போராளிகளாக இருந்திருக்கிறார்கள் என்பது உண்மை தான். ஆனால், ஈழத்தில் வாழும் மொத்த தமிழ் சனத் தொகையில் வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு.

அதிலும் மிகக் குறைந்தளவு சதவீதம் தான் போராளிக் குடும்பங்களாக இருந்துள்ளன. அனேகமாக, பெருமளவு வசதியான தமிழர்கள் வாழ்ந்த, யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து தான் அதிகமானோர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தார்கள்.

வன்னி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் வாழ்ந்த, தமிழ் மாவட்டங்களில் இருந்து, வெளிநாடுகளுக்கு சென்றோர் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. ஆனால், புலிகள் அமைப்பின் போராளிகளில் பெரும்பான்மையானோர், மேற்குறிப்பிட்ட பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

இந்த உண்மையை தெரிந்து கொள்வதற்கு, நாங்கள் அதிக சிரமப் படத் தேவையில்லை. புலிகளுக்காக வேலை செய்த சர்வதேசப் பொறுப்பாளர்களிடம், மாவீரரான போராளிகளின் பட்டியல் நிச்சயமாக இருக்கும். அதை எடுத்து ஆய்வு செய்தாலே தெரிந்து விடும்.

முன்பு ஆப்கானிஸ்தானிலும், இன்று சிரியாவிலும் நடக்கும் ஜிகாதிப் போராட்டங்களில், மேற்கத்திய நாடுகளில் வாழும் முஸ்லிம் இளைஞர்கள் பலர் ஈடுபடுகின்றனர்.

அதற்காக, அவர்கள் எல்லோரும் தமது வசதியான வாழ்க்கையை உதறித் தள்ளி விட்டு, உணர்வுபூர்வமாக போராளிகள் ஆனார்கள் என்று கருத முடியாது. அந்த இளைஞர்களின் இஸ்லாமிய மதப் பற்று மட்டுமே எங்கள் கண்களுக்கு தெரிகின்றது. ஆனால், அவர்களின் பொருளாதாரப் பின்னணி பற்றி நாங்கள் ஆராய்வதில்லை.

மேற்கத்திய நாடொன்றில், அல்லது வளைகுடா அரபு நாடொன்றில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பதாலேயே, அவர்கள் எல்லோரும் மத்திய தர வர்க்கத்தினர் என்று நினைத்துக் கொள்வது தவறு. அந்த நாடுகளில் உள்ள பொருளாதார பிரச்சினைகள் வெளியே பேசப் படுவதில்லை. பணக்கார நாடுகளில் வாழுவோர் எல்லோரும் நடுத்தர வர்க்கத்தினர் அல்ல.

அமெரிக்காவில் மட்டும் இருபது மில்லியன் ஏழைகள் வாழ்கிறார்கள். மேற்கு ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால், அங்கேயும் இருபது மில்லியனுக்கும் குறையாத ஏழைகள் இருப்பார்கள். மேலைத்தேய நாடுகளில் வாழும், அரபு – இஸ்லாமிய சமூகப் பின்னணி கொண்ட மக்கள் பலர், பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளனர்.

அதற்காக, போராடச் சென்றவர்கள் “எல்லோரும்” ஏழைக் குடும்பங்களை சேர்ந்தவர்கள், வசதி வாய்ப்பற்றவர்கள் என்று கூறவில்லை. உயர்கல்வி கற்றவர்கள், நல்ல சம்பாத்தியம் தரும் வேலையில் இருந்தவர்கள் கூட போராடச் சென்றார்கள். ஆனால், அவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படியானவர்கள், அதிக பட்சம் ஒரு சதவீதம் கூட இல்லை. பெரும்பாலும் 0,01% ஆக இருக்கலாம்.

உலகில் உள்ள அத்தனை இயக்கங்களுக்கும் தலைமை தாங்குவது நடுத்தர வர்க்கமாக உள்ளது. இது தற்செயல் அல்ல. பல நூறு வருடங்களாக ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினர் தான் வசதி வாய்ப்புகளை அனுபவித்து வந்துள்ளனர். ஆகையினால், எத்தகைய சமூக மாற்றமும் அவர்கள் மத்தியில் இருந்து தான் உருவாகும். மார்க்சிய இயக்கமாக இருந்தாலும் அது தான் நிலைமை.

கார்ல்மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ, ஹோசிமின், பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா போன்று, அனேகமாக எல்லா மார்க்சிய தலைவர்களும் நடுத்தர வர்க்கத்தினர் தான்.

இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைகள் மட்டுமே போராடுவார்கள் என்று அவர்களும் தான் நம்பினார்கள். அவர்கள் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான். அதற்காக, தமது வர்க்கத்தின் நலன்களை பற்றி மட்டும் சிந்திக்கவில்லை. அதனால் தான், ஏழை உழைக்கும் மக்களின் தலைவர்களாக போற்றப் பட்டார்கள்.

நடுத்தர வர்க்க இளைஞர்கள் மட்டுமே போராடிய நாடுகளில், அந்தப் போராட்டம் இலகுவில் தோற்கடிக்கப் பட்டது. உதாரணத்திற்கு, உருகுவேயில் நடந்த கெரில்லாப் போராட்டம். 90% போராளிகள் நடுத்தர வர்க்க மாணவர்கள். பொலிவியாவில் போராடிய சேகுவேராவின் இயக்கத்தை சேர்ந்தவர்கள், நடுத்தர வர்க்க பிரதிநிதிகள்.

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஆயுதப் போராட்டம் நடத்தியவர்கள், நடுத்தர வர்க்க மாணவர்கள். அவர்கள் எல்லோரும் மார்க்சியக் கொள்கைகளை பின்பற்றியவர்கள் தான். ஆனால், அவர்களது ஆயுதப் போராட்டங்கள் முளையிலேயே கிள்ளி எறியப் பட்டன. என்ன காரணம்? ஏனென்றால், அந்த இயக்கங்களினால், கடைசி வரையிலும் பெரும்பான்மை ஏழை உழைக்கும் மக்களை அணிதிரட்ட முடியவில்லை.

தேசியவாத, மதவாத இயக்கங்கள், வெகுஜன தளத்தில் பிரபலமான கருத்துக்களை பிரச்சாரம் செய்கின்றன. வளர்ந்து வரும் நாடுகளில், பெரும்பான்மையான ஏழை மக்கள் மத நம்பிக்கையாளர்களாக இருக்கின்றனர். அதற்குக் காரணம் அவர்களிடம் எதுவும் இல்லை. “பணம் இல்லை. படிப்பு இல்லை. வேலை இல்லை…” இவ்வாறு அவர்கள் வாழ்க்கை முழுவதும் குறை கூறுவதற்கு நிறைய “இல்லைகள்” உள்ளன. ஓர் இயக்கம் அவர்களிடம் சென்று, “நாங்கள் மதத்திற்காக போராடுகின்றோம்” என்றால் ஆதரிக்காமல் விடுவார்களா?

தேசியவாதமும் அப்படித் தான். “உங்களுடைய பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணம், எமது இனத்திற்கு தனியான நாடு இல்லாதது தான்” என்று சொல்வார்கள். தனி நாடு கிடைத்து விட்டால், எமது வாழ்வு வளம் பெறும் என்று தான் சாதாரண ஏழை மக்கள் நம்புவார்கள். அந்த எதிர்பார்ப்பில் எந்தத் தவறும் இல்லை.

உண்மையில், ஈழத் தமிழ் நடுத்தர வர்க்கத்தை மட்டுமே நம்பி போராடத் தொடங்கி இருந்தால், விடுதலைப் புலிகள் இயக்கம் ஆரம்பிக்கப் பட்ட ஒரு சில வருடங்களிலேயே காணாமல் போயிருக்கும். எழுபதுகளில் அடித்தட்டு ஏழை மக்களையும் கவர வேண்டும் என்பதற்காக, புலிகளும் மார்க்சியம் பேசினார்கள். சோஷலிசத் தமிழீழத்திற்காக போராடுகிறோம் என்று சொல்லிக் கொண்டார்கள்.

எழுபதுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஸ்தாபிக்கப் பட்ட காலத்தில், நாட்டில் கடுமையான வரட்சி நிலவியது. மழை வீழ்ச்சி குறைவாக இருந்தது. வட மாகாணத்தில், மழையை நம்பி நடக்கும் பெரும்போக நெற் செய்கை தான் அந்தப் பிராந்தியத்தின் பொருளாதார முதுகெலும்பு. பரம்பரை பரம்பரையாக விவசாயப் பொருளாதாரத்தை நம்பியிருந்த மக்கள், பல வருடங்களாக தொடர்ந்த வரட்சி காரணமாக கடுமையாக பாதிக்கப் பட்டனர்.

ஒரு நாட்டின் விவசாயப் பொருளாதாரம் நலிவடைந்தால், அது விவசாயிகளை மட்டும் பாதிப்பதில்லை. அதை நம்பியிருக்கும் கூலித் தொழிலாளர்கள், வணிகர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் என்று ஏராளமானோர் பாதிக்கப் படுகின்றனர். வசதியானவர்களுக்கு வெளிநாடு சென்று பிழைக்கும் வாய்ப்புக் கிட்டியது. அது கூட முடியாதவர்களுக்கு?

எண்பதுகளில் போர் தீவிரமடைந்த காலத்தில், அதிகமாகப் பாதிக்கப் பட்டவர்கள் அடித்தட்டு ஈழத் தமிழர்கள் தான். போர் நடக்கும் நாடுகளில் எல்லாம், ஏழைகள் தான் அதிக விலை கொடுக்கிறார்கள். பாதுகாப்பான இடத்திற்கு, இடம்பெயர்ந்து செல்லும் அளவிற்கு கூட வசதி இல்லாதவர்கள். அப்படியானவர்கள் போராடுவதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது?

மார்க்சியம் என்பது இயங்கியல் தத்துவ அடிப்படை கொண்டது. அது ஒரு வரட்டு சூத்திரம் அல்ல. ஏற்கனவே, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மெய்ப்பிக்கப் பட்ட சமூக விஞ்ஞானம்.

-கலையரசன்-

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆபாசமாக பேசியதால் மாணவி தற்கொலை முயற்சி: மாணவன் கைது!!
Next post திருமண உதவித்தொகை வழங்க லஞ்சம் வாங்கிய கிராம நல அலுவலர் கைது!!