தேசிய இளைஞர் கழக சம்மேளனத்தில் தமிழருக்காய் பெரும்பானமையினர் பக்கமிருந்து ஒலித்த குரல் ஓய்ந்துவிட்டது!!
தேசிய இளைஞர் கழக சம்மேளனத்தில் தமிழருக்காய் பெரும்பானமையினர் பக்கமிருந்து ஒலித்த குரல் ஓய்ந்துவிட்டது என சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் க.உஷாந்தன் தெரிவித்துள்ளார்.
தேசிய இளைஞர் கழக சம்மேளனத்தின் செயலாளர் சமன் ரணவீரவின் மறைவிற்கு விடுத்துள்ள அஞ்சலிக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய இளைஞர் கழக சம்மேளனத்தின் செயலாளர் சமன் ரணவீர மாரடைப்பால் (13) காலை கொழும்பில் அமரத்துவமடைந்தார் என்ற செய்தியை ஏற்க மனம் மறுக்கின்றது.
அன்னாரின் மறைவு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு ஏற்பட்ட இழப்பல்ல; சிறுபான்மையினருக்கும் வடமாகாணத்திற்கும் ஏற்பட்ட இழப்பே.
இனம், மதம், மொழி தாண்டி பெரும்பான்மையினம் என்பதை தாண்டி எமக்காக, தமிழருக்காக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் ஒலித்த குரல் ஓய்ந்து விட்டது.
நல்ல நண்பன், நமக்காய் நமது பிரச்சனைகளுக்காய் அவற்றின் தீர்வுக்காய் இனங்களைக் கடந்து உழைத்த நல்ல மனிதன்.
தமிழ் இளைஞர்கள் பலரால் நேசிக்கப்பட்டவன், மதிக்கப்பட்டவன்.
சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நம் வரலாறுகளை கேட்டு அவற்றின் உண்மைகளை ஏற்றுக்கொண்ட ஒருவன்.
இறுதியாய் நேரில் பேசிய போது கூட நல்ல பல விடயங்களைச் செய்யவேண்டும் என வாழ்த்திய ஒருவன் நிம்மதியாய் தூங்கிவிட்டான்.
நாளைக்கு பெரும்பான்மை இனத்திலேயிருந்து நமக்காய் யார் பேசப்போகின்றார்? என்னும் மிகப்பெரும் வெற்றிடத்தை தேசிய இளைஞர் கழக சம்மேளனத்தின் செயலாளர் சமன் ரணவீரவின் இழப்பு ஏற்படுத்தியுள்ளது.
சமன் ரணவீரவின் இளைஞர்களுக்கான பணிகளின் வெற்றிடத்தை யாராலும் நிரப்பவோ பதிலிடவோ முடியாது.
அண்மையில் ஹம்பகாவில் யாழ் மாவட்ட இளைஞர்களுக்கெதிராக இடம்பெற்ற வேண்டத்தகாத விளவுகெளுக்கெதிராக குரலெழுப்பியதோடு யாழ்ப்பாணத்திற்க்கு நேரடியாக வந்து பிரச்சனை சம்பந்தமாக ஆராய்ந்த ஒருவர்.
அன்னாரின் இழப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினருக்கும், இளைஞர்களுக்கும் பாரிய இழப்பாகும்.
அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். என்றுள்ளது.