பண்டார நாயக்க வம்சத்திற்கும், ராஜபக்ச வம்சத்திற்கும் இடையிலான போட்டி:– தமிழ் மக்கள் பார்வையாளர்களா? – நிலாந்தன் (சிறப்பு கட்டுரை)!!

Read Time:16 Minute, 1 Second

timthumbஜனாதிபதித் தேர்தலை நோக்கி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேலும் உடைவது என்பது மஹிந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு மட்டும் அச்சுறுத்தலானது அல்ல.

அதை அதன் தர்க்கபூர்வ விளைவுகளை கருதிக் கூறின் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஒரு விதத்தில் ஆபத்தானது தான். ரணிலைப் பொறுத்த வரை அவருக்கு வெற்றி வேண்டும்.

அதற்காக அவர் ஒப்பீட்டளவில் நீண்ட காலம் காத்திருந்து விட்டார். கிடைக்கப்போகும் வெற்றியைப் பொறுத்தே அவர் கட்சிக்குள் தன்னுடைய தலைமை ஸ்தானத்தையும் பாதுகாக்க வேண்டியிருக்கும்.

தனது தலைமைக்கு சவாலாக கட்சிக்குள் எழுச்சி பெற்று வரும் இரண்டாம் நிலை தலைவர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு அவருக்கு வெற்றி அவசியம்.

ஆனால் அந்த வெற்றியானது திருமதி. சந்திரிக்காவை அளவுக்கு மிஞ்சி பலப்படுத்தும் ஒன்றாக அமைவதை ரணில் விரும்ப மாட்டார்.

அதாவது, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாக்குவங்கியை எந்தளவிற்கு உடைக்கப்படுகிறதோ அந்த அளவிற்கு வெற்றிக்கான வாய்ப்புக்களும் அதிகரிக்கும்.

அவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாரம்பரிய வாக்கு வங்கியை உடைத்தெடுக்கும் சக்தி சந்திரிக்காவுக்கே உண்டு. எனவே தேர்தலில் கிடைக்கக் கூடிய வெற்றி எதுவும் அந்த வாக்குகளில் தான் அதிகம் தங்கியிருக்கும்.

இவ்வாறாக சந்திரிக்கா உடைத்துக் கொண்டு வரும் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அது அதன் தர்க்க பூர்வ விளைவாக சந்திரிக்காவின் கையை மேலோங்க செய்துவிடும்.

சந்திரிக்காவின் கை ஒரு அளவுக்குமேல் மேலோங்குமாக இருந்தால் அது குறித்து மஹிந்த ராஜபக்ச மட்டுமல்ல ரணிலும் அச்சமடைவார்.

ஏனெனில் பாரம்பரிய யூ.என்.பி வாக்குகளால் மட்டும் வெற்றி கிடைக்காது என்பதால் தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருந்தும் வாக்குகளை உடைக்க வேண்டியிருக்கிறது.

இவ்வாறு சந்திரிக்கா உடைத்துக் கொண்டு வரப்போகும் வாக்குகளே வெற்றிக்குக் காரணமாக அமையக்கூடும் என்பதால் தான் மைத்திரிபால பொதுவேட்பாளாரக நிறுத்தப்பட்டார்.

அதேசமயம் அவ்வாறு சந்திரிக்கா உடைத்துக் கொண்டு வரும் வாக்குகளின் அளவு காரணமாக அவர் அடுத்தடுத்த கட்டங்களில் ரணிலை மீறிச் சிந்திக்க முடியும.

இது அதன் இயல்பான வளர்ச்சிப் போக்கில் ஒரு கட்டத்தில் தானே தலைவியானால் என்ன என்று சந்திரிக்காவை சிந்திக்கத் தூண்டும். அதாவது இப்போது கிங்மேக்கராக இருக்கும் சந்திரிக்கா கிங்காக வரலாமா என்று யோசிக்கக்கூடும்.

எனவே ரணிலைப் பொறுத்த வரை வெற்றியும் வேண்டும். ஆனால் அந்த வெற்றி சந்திரிக்காவை அவருக்கு எதிராக திருப்பிவிடாத ஒரு வெற்றியாகவும் இருக்க வேண்டும். இப்படிப்பார்த்தால் அவரைப்பொறுத்த வரை இது ஒரு சூதாட்டம் தான். ஆனால் நிச்சயமாக வாழ்வா சாவா போராட்டம் அல்ல.

ஏனெனில் தேர்தலில் தோற்றால் பொது எதிரணிக்குள் உள்ள தலைவர்களில் ரணிலுக்கே ஒப்பீட்டளவில் குறைந்த பாதிப்பு ஏற்படும். தோல்வியுற்றால் கட்சிக்குள் அவருடைய தலைமைத்துவம் ஆட்டங் காணக் கூடும்.

ஆனால் அதைத் தவிர வேறு ஆபத்துக்கள் இருக்காது. ஏற்கனவே இவ்வாறு கட்சிக்குள் அவருக்கு நெருக்கடிகள் வந்த போது அவரை ராஜபக்ச காப்பாற்றியிருக்கிறார். இந்த உறவு இனிமேலும் ரணிலை பாதுகாக்கும்.

ஆனால் அரங்கில் நிற்கும் ஏனைய தலைவர்களின் நிலைமை அவ்வாறில்லை. தேர்தலில் தோற்றால் அது சந்திரிக்காவுக்கும் மைத்திரிபாலவுக்கும் வெறும் தேர்தல் தோல்வியாக மட்டும் அமையாது.

சில சமயம் சரத்பொன்சேகாவுக்கு நடந்ததே அவர்களுக்கும் நடக்கக்கூடும். அவர்களைப் பொறுத்த வரை இது ஏறக்குறைய வாழ்வா சாவா போராட்டம் தான். தோற்றால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டியும் ஏற்படலாம்.

அவர்களைப் போல ஒரு நிலைமை தான் அரசாங்க தரப்புக்கும். மஹிந்த ராஜபக்சவுக்கு சகோதரர்களைப் பொறுத்த வரை இது தோற்கப்பட முடியாத ஒரு போராட்டம். ஏனெனில் அது வெறும் தேர்தல் தோல்வியாக மட்டும் அமையாது.

அவர்களைப் பொறுத்த வரை அது ஒரு தண்டனையாகவும் அமைந்து விடக்கூடும். சிம்மாசனத்தைத் தவிர இந்த பூமியில் வேறு எந்த ஓரிடமும் அவர்களுக்கு பாதுகாப்பானது அல்ல.

அதிகாரத்தில் இருக்கும் வரையில் தான் அவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். ரணிலைக் குறித்து அவர்கள் அஞ்ச மாட்டார்கள்.

ஆனால் சந்திரிக்காவைக் குறித்து அவர்கள் அதிகம் அஞ்சுவார்கள். ஏனெனில் இப்போது நடந்து கொண்டிருப்பது பண்டார நாயக்க வம்சத்திற்கும் ராஜபக்ச வம்சத்திற்கும் இடையிலான ஒரு வம்ச சண்டையே.

முன்னைய மன்னர் ஆட்சிக்காலங்களில் நிகழ்ந்த வம்ச சண்டைகளைப் போன்றதே இதுவும். இதில் வெற்றி அல்லது தண்டனை என்ற இரண்டு தெரிவுகளே உண்டு.

தோல்வியுற்றால் பொது எதிரணியை சேர்ந்தவர்கள் மேற்கு நாடுகளில் தஞ்சம் கோர முடியும். ஏனெனில் அவர்களுக்குப் பின்னால் மேற்கு நிற்கிறது. ஆனால் ராஜபக்~ சகோதரர்களை பொறுத்த வரை அத்தெரிவிலும் நெருக்கடிகள் உண்டு.

அவர்களில் சிலர் மேற்கு நாடுகளில் பிரஜா உரிமை பெற்றிருக்கிறார்கள். ஆனால் அதே மேற்குநாடுகளின் பின்பலத்தோடு தான் தமிழ் புலம்பெயர்ந்த சமூகம் அவர்கள் மீது போர்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறது.

போர்க் குற்றம் தொடர்பிலான உலகப்பொது அனுபவத்தைப் பொறுத்த வரை பதவியிலிருந்து இறக்கப்பட்டவர்களே பெரும்பாலும் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே பதவியிலிருப்பது தான் இது விடயத்தில் அதிகம் பாதுகாப்பானது.

தோற்கடிக்கப்பட்டு மேற்கு நாடுகளில் புகலிடம் தேடுவது என்பது ஏறக்குறைய வழக்குத் தொடுநரிடம் தஞ்சம்கோருவதற்கு சமமானது.

சக்தி மிக்க தமிழ் புலம் பெயர்ந்த சமூகம் வசித்து வரும் மேற்கு நாடுகளை நோக்கி செல்வது என்பது தாமாக சென்று பொறிக்குள் சிக்கியது போலாகக்கூடும்.

இது தொடர்பில் வேறு விதமான அபிப்பிராயங்களும் உண்டு. சிங்கள பௌத்த மேலாண்மை வாதம்.

அதன் வெற்றி நாயகர்களை என்றைக்குமே பிறத்தியாரிடம் காட்டிக்கொடுக்காது என்பதே அது. அனால் இங்கு பிரச்சினை என்னவென்றால் இம்முறை தோற்றாலும் பிறகொரு காலம் மறுபடியும் எழுச்சி பெறத்தேவையான ஓர் அடிப்படை தகைமை ராஜபக்~ வம்சத்திற்கு உண்டு.

அது என்னவெனில் ஈழப்போரின் வெற்றி நாயகர்கள் அவர்களே என்பது தான். சிங்கள பௌத்த மேலாண்மை வாதத்தை பொறுத்த வரை அது எப்பொழுதும் செல்லுபடியாகும் ஒரு தகைமை தான்.

எனவே மீண்டும் ஒரு முறை அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அதன் விளைவுகள் எப்படி அமையும் என்பது சந்திரிக்காவுக்குத் தெரியும். எனவே அவர் வெற்றிபெற்றால் ஆகக்கூடிய பட்சம் முன்னெச்சரிக்கையோடு தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்.

இப்படிப்பார்த்தால் தோற்பது என்பது ராஜபக்ச சகோதரர்களை பொறுத்த வரை ஏதோ ஓர் எதிரியின் இரக்கத்தை நம்பிச் சீவிப்பது தான். எனவே அவர்களைப் பொறுத்த வரை இது தோற்கக்கூடாத ஒரு யுத்தம். அதாவது வாழ்வா சாவா போராட்டம். தோல்வியை தவிர்ப்பதற்காக அவர்கள் வழமைகளை மீறி சிந்திக்கக்கூடும்.

இந்த அரசாங்கம் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஓர் அரசாங்கம் தான். ஆனால் இந்த அரசாங்கத்தை தேர்தல் மூலம் அகற்ற முடியுமா? என்ற கேள்விக்குரிய விடை அவர்களிடம் மட்டும் தான் உண்டு.

தேர்தலில் பொது எதிரணி தோற்றால் ரணிலின் தலைமைத்துவம் ஆட்டம் காணும். ஆனால் சந்திரிக்காவுக்கும் மைத்திரிக்கும் பாதுகாப்பற்ற ஓர் எதிர்காலம் உருவாகும். ஆனால் அரசாங்கம் தோற்றால் இலங்கைத் தீவின் அரசியலே நிச்சயமற்ற ஒரு காலகட்டத்தை கடக்க வேண்டியிருக்கும்.

அப்படியொரு நிச்சயமற்ற நிலைமை தோன்றுமா இல்லையா என்பதைக் குறித்து கொழும்பிலுள்ள மேற்கத்தைய நாடுகளின் தூதுவர்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டதாக தகவல்கள் கிடைக்கின்றன.

சக்தி மிக்க மேற்கத்தைய நாடுகளின் தூதுவர்கள் சிலர் தமிழ் கட்சிகளின் பிரமுகர்கள் சிலருடன் இது தொடர்பாக உரையாடியதாகவும் சில தகவல்கள் உண்டு.

அப்படிப்பட்ட ஒரு நிலைமை குறித்து இப்பொழுது உரையாடுவது சற்று காலத்தால் முந்தியதாகக் கூட இருக்கலாம். ஏனெனில் அரசாங்கத்தைத் தோற்கடிக்க தேவையான பெரும் எதிர்ப்பலை ஒன்றை பொது எதிரணி இனிமேற் தான் உருவாக்க வேண்டியிருக்கிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருந்து மேலும் எத்தனை பேர் உடைத்தெடுக்கப்படுவார்கள் என்பதிலும் அது தங்கியிருக்கிறது. அப்படியொரு பேரலை உருவாகுமிடத்து இலங்கைத் தீவின் அரசியலானது முன்னெப்பொழுதும் ஏற்பட்டிராத ஒரு நிச்சயமற்ற காலகட்டத்தை நோக்கி செல்லக்கூடும்.

இச்சிறு தீவின் தேர்தல் வரலாற்றைப் பொறுத்த வரை இரு தரப்பு வேட்பாளர்களும் வாழ்வா சாவா என்ற ஓர் நிலையில் மோதிக்கொள்வது என்பது முன்னெப்போதும் ஏற்பட்டிராத ஒரு தோற்றப்பாடே.

ஏறக்குறைய ஐந்தரை ஆண்டுகளுக்கு முன் நந்திக் கடற்கரையிலும் இப்படியொரு மோதல் நிகழ்ந்தது. ஆனால் அது ஒரு ஆயுத மோதல்.அது ஒரே இனத்திற்குள் நிகழவில்லை.

இரு வேறு இனங்களுக்கிடையில் அது நிகழ்ந்தது. இப்போது நிகழ்வது ஒரே இனத்திற்குள் நிகழும் இரண்டு வம்சங்களுக்கிடையிலான மோதல். இதில் தமிழர்கள் ஏறக்குறைய பார்வையாளர்களைப் போல காணப்படுகிறார்கள்.

அண்மையில் கொழும்பில் இருந்து வந்த மூத்த தொழிற்சங்கவாதி ஒருவர் சொன்னார். ஜனாதிபதித் தேர்தலை பொறுத்த வரை, தென்னிலங்கை நிலவரங்களோடு ஒப்பிடுகையில் வடபகுதியில் நிலைமை முற்றிலும் தலைகீழாக காணப்படுறது என்று.

தென்னிலங்கையில் காணப்படும் கொதிநிலை விறுவிறுப்பு என்பவற்றோடு ஒப்பிடுகையில் வடபகுதி முற்றிலும் மாறாக அமைதியாக காணப்படுவதாகவும் அவர் சொன்னார்.

தமது தலைவிதியை தீர்மானிக்கக்கூடிய ஒரு தேர்தலைக் குறித்து தமிழ் மக்கள் பார்வையாளர்கள் போல காணப்படுகிறார்கள். நாடு இத்தகைய அர்த்தத்திலும் இரண்டாக பிரிந்தே காணப்படுகிறது.

ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து ஐந்தரை ஆண்டுகள் ஆனபின்னரும் தமது தலைவிதியை தீர்மானிக்கும் ஒரு தேர்தலில் தமிழ் மக்களை பார்வையாளாக தள்ளி விடும் ஒரு நிலைமை தான் தென்னிலங்கை அரசியலில் காணப்படுகிறது.

தமிழ் மக்கள் தேர்தலை பகிஷ்கரிப்பார்களாக இருந்தால் அது பார்வையாளர் நிலை அல்ல. மாறாக அது பங்களிப்புத்தான். ஏனெனில் பகிஷ்கரிப்பும் ஒரு பங்களிப்புத்தான்.

தமிழ் மக்கள் தேர்தலை பகிஸ்கரிப்பார்களோ இல்லையோ, தேர்தல் முடிவுகள் எதுவாயிருப்பினும் அது சிங்கள மக்களின் தலைவிதியை மட்டுமல்ல தமிழ் மக்களின் தலைவிதியையும் தீர்மானிக்கும்.

முஸ்லிம் மக்களின் தலைவிதியையும் தீர்மானிக்கும். அது மட்டுமல்ல அதற்கும் அப்பால் இப்பிராந்தியத்தின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளையும் அது ஏதோ ஒரு விதத்தில் தீர்மானிக்கும்.

– நிலாந்தன்-

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 6-ம் வகுப்பு மாணவி கொலை: கடைகள் அடைப்பு- பள்ளிக்கு விடுமுறை!!
Next post உங்கள் முகத்தின் வடிவம்; உங்கள் குணங்களை பற்றி, என்ன கூறுகிறது?