ஐ.நா. வின் விசாரணைப் பொறி.. -கே.சஞ்சயன் (கட்டுரை)!!

Read Time:22 Minute, 26 Second

timthumbஇலங்கையில் போரின் இறுதி 07 ஆண்டுகளிலும்; இரு தரப்பினராலும் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டமீறல்கள் குறித்து விசாரிப்பதற்கான விசாரணைக்குழுவை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நியமித்துள்ளது.

அடுத்த மாத இறுதியுடன் பதவியிலிருந்து விலகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இந்த விசாரணைக்குழு அமைக்கப்படுவது தொடர்பான அறிவிப்பை கடந்த செவ்வாய்க்கிழமை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிகழ்த்திய உரையில் வெளியிட்டிருந்தார்.

நீண்டகால எதிர்பார்ப்புக்குரியதும் சர்ச்சைக்குரியதுமான விவகாரமாக இருந்துவந்த ஐ.நா. விசாரணைகளுக்கான செயல்முறைகள் இப்போது ஆரம்பமாகியுள்ளன.

2009ஆம் ஆண்டு மே மாதம் போர் முடிவுக்கு வந்த பின்னர், கடந்த 05 வருடங்களாக இத்தகைய விசாரணைக்கான வலியுறுத்தல்கள் பல்வேறு மட்டங்களிலிருந்தும் மேற்கொள்ளப்பட்டுவந்தபோதும், இப்போது தான் அது சாத்தியமாகியுள்ளது.

நியூஸிலாந்தின் பெண் நீதிபதியான டேம் சில்வியா கார்ட்ரைட் தலைமையில் இந்த விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் இன்னொரு நிபுணராக இடம்பெறவுள்ளவர் யார் என்பது இன்னமும் அறிவிக்கப்படவில்லை. ஆயினும், அவர் சூடான் நாட்டவராக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது

தன்னார்வ அடிப்படையில் அடுத்த பத்து மாதங்களுக்கு இந்த இரண்டு நிபுணர்களும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் 13 பேர் கொண்ட விசாரணைக்குழுவை வழிநடத்தவுள்ளனர். எனினும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் அதிகாரிகளே விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

ஐ.நா. வின் மூத்த மனித உரிமைகள் அதிகாரியான சன்ட்ரா பெய்டாஸ் அம்மையார் இந்த விசாரணைக்குத் தலைமை தாங்கவுள்ளார்.
இவரே இந்தக் குழுவின் இணைப்பாளராகவும் செயற்படுவார்.

ஒட்டுமொத்த விசாரணைக்குழுவுக்கும் தலைமையேற்கும் டேம் சில்வியா கார்ட்ரைட் அம்மையாரும் சரி, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியக அதிகாரிகளுக்கு தலைமை தாங்கும் சன்ட்ரா பெய்டாஸ் அம்மையாரும் சரி சர்வதேச அளவில் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளில் அனுபவம் மிக்கவர்கள்.

டேம் சில்வியா கார்ட்ரைட் அம்மையார் நியூஸிலாந்தில் பிரபலமான நீதிபதியாக இருந்தவர் என்பதுடன், கம்போடியாவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட தீர்ப்பாயத்தின் தலைவராக பணியாற்றிய அனுபவத்தையும் கொண்டவர்.

இவரது இறுக்கமான போக்கினால் கம்போடியாவில் போர்க்குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இவரை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.

அதுபோலவே சன்ட்ரா பெய்டாஸ் அம்மையார் ஹெய்ட்டி, சோமாலியா, நேபாளம், தென்சூடான் என்று மோதல் சூழல் நிலவிய நாடுகளில் மனித உரிமை விசாரணைகளை மேற்கொண்டவர்.

கடந்த 2012ஆம் ஆண்டு தென்சூடான் படையினரின் அத்துமீறல்கள் குறித்து ஐ.நா. வெளியிட்ட அறிக்கையின் விளைவாக அங்கு பணியாற்றிய சன்ட்ரா பெய்டாஸ் அம்மையாரை, அந்த நாட்டு அரசாங்கம் நாட்டை விட்டே வெளியேறும்படி உத்தரவிட்டு அதற்கு 48 மணிநேர அவகாசம் கொடுத்தது.

மனித உரிமை விவகாரங்களில் இவர்களின் கடும் போக்கை வெளிப்படுத்த இந்த இரண்டு சம்பவங்களுமே போதுமானவை. இந்த விசாரணைக்குழுவுக்கான உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும்போது, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மிகவும் கவனமாக செயற்பட்டுள்ளார் என்பதை கவனிக்க முடிகிறது.

முன்னதாக இந்த விசாரணைக்குழுவுக்கு ஐ.நா.வின் முன்னாள் பொதுச்செயலர் கொபி அனானை நியமிப்பதற்கு நவநீதம்பிள்ளை ஆர்வம் காட்டியிருந்தார்.

ஆனால், ஐ.நா. பொதுச்செயலராக இருந்த ஒருவர், ஐ.நா.வின் உறுப்பு அமைப்பு ஒன்றுக்கு அறிக்கை வழங்குபவராக பணியாற்றுவது குறித்த கௌரவப் பிரச்சினை 10 மாதங்களை முழுமையாக இந்தப் பணிக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற சிக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் அவரது நியமனம் சாத்தியமற்றதாகிப் போனது.

எனினும், கொபி அனான் இந்த விசாரணைக்குழுவுக்குத் தலைமையேற்கப் போவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதுமே, 2004ஆம் ஆண்டு போர்நிறுத்த காலத்தில் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அரசியல் பொறுப்பாளர் கௌசல்யன் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கொபி அனான் தெரிவித்த கண்டனத்தை சிங்கள ஊடகங்கள் தூக்கிப் பிடிக்கத் தொடங்கியிருந்தன.

அமைதிச் சூழலில் நடந்த ஒரு படுகொலைக்குத் தெரிவிக்கப்பட்ட கண்டனத்தை வைத்து கொபி அனானை புலிகளின் ஆதரவாளராக காட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

விசாரணைக்குழு அமைக்கப்பட முன்னரே அது புலிகளுக்குச் சார்பானது என்ற தோற்றத்தை தென்னிலங்கையில் உருவாக்குவதற்கான முயற்சியே அது.

இந்த விசாரணைகளை பொய்யானதென்றும் புலிகளுக்கு சார்பானதென்றும் உருவகப்படுத்தி இறுதி அறிக்கையை நிராகரிப்பதற்கான உந்துதலை ஏற்படுத்துவதே இத்தகைய செய்திகளின் அடிப்படையாக இருந்தது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க முற்பட்ட அல்லது அதற்கு எதிராக கருத்து வெளியிட்ட அத்தகைய விசாரணைகளை வலியுறுத்திய அனைவருமே இலங்கை அரசாங்கத்தினாலும் சிங்களத் தேசியவாத சக்திகள் மற்றும் அதற்குத் துணையான ஊடகங்களாலும் புலி முத்திரை குத்தப்பட்டதே வரலாறு.

ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மற்றும் பல்வேறு ஐ.நா. அதிகாரிகள் இவ்வாறே புலி என்றோ, புலிகளின் அனுதாபி என்றோ அல்லது புலிகளிடம் இலஞ்சம் பெற்றவர் என்றோ இலங்கையில் முத்திரை குத்தப்பட்டனர்.

இந்த விசாரணைக்குழுவுக்கும் அதுபோன்றதொரு முத்திரை குத்தப்படக்கூடாது என்பதில் நவநீதம்பிள்ளை மிகவும் கவனமாகச் செயற்பட்டுள்ளார் என்று உணரமுடிகிறது.

ஏனென்றால், இந்த விசாரணைக்குழு பற்றிய அறிவிப்பு வெளியாகி பல நாட்களாகியும் அதிலுள்ளவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஏதேனும் தொடர்புகள் உள்ளனவா என்று இந்த சிங்களத் தேசியவாத சக்திகளாலோ, அரசாங்கத்தினாலோ கண்டறிய முடியவில்லை.

அவ்வாறு கண்டறியப்பட்டிருந்தால், இதுவரைக்கும் அவர்கள் தமது புலம்பலைத் தொடங்கியிருப்பார்கள். இதனையே தான் நவநீதம்பிள்ளையும் எதிர்பார்த்திருந்தார். அதாவது, இந்த விசாரணையை மேற்கொள்பவர்களை வைத்து அதனை நிராகரிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்து விடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்துள்ளார்.

ஏனென்றால், ஐந்தாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட கடும் முயற்சிகளினால் சாத்தியமானதொரு சர்வதேச விசாரணையை சரிவரப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் கருதியுள்ளார். அதனால் தான், எந்த வகையிலும் புலிகளுடன் தொடர்பில்லாத, அவர்களுக்கு சார்பாகவோ – ஏன் இலங்கை விவகாரம் குறித்துக் கூட கருத்து வெளியிடாதவர்களாகப் பார்த்து விசாரணைக்குத் தெரிவுசெய்துள்ளார்.

அதற்காக, இந்த விசாரணைக்குழுவை இலங்கை அரசாங்கம் ஏற்கப்போகிறது என்றோ, நாட்டுக்குள் அனுமதிக்கப் போகிறதோ என்று அர்த்தமில்லை. அது அரசாங்கத்தின் கொள்கை சார்ந்த முடிவைப் பொறுத்த விடயம்.

விசாரணைக்குழுவின் உறுப்பினர்களின் தகைமையை அல்லது அவர்களின் நடுநிலைமையை வைத்து இதனை நிராகரித்து விடக் கூடாது என்பதே நவநீதம்பிள்ளையின் கருத்தாக இருந்துள்ளது.

எவ்வாறாயினும் இந்த விசாரணைக்குழு அடுத்த மாதம் செயற்படத் தொடங்கவுள்ள நிலையில், ஜெனீவாவில் கடந்த செவ்வாய்க்கிழமை உரையாற்றிய இலங்கைப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க, இந்த விசாரணையை தாம் ஏற்கப்போவதில்லை என்று தெரிவித்துவிட்டார்.

அதாவது கடந்த மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையே நிராகரித்துவிட்ட நிலையில், அதற்கமைய உருவாக்கப்பட்ட இந்த விசாரணைக்குழுவை ஏற்றுக்கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அவர் கூறிவிட்டார்.

எந்த வகையிலும் இந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால், அதேநாளில் இலங்கை அரசாங்கம் இன்னொரு முடிவையும் வெளியிட்டது.

அது ஜெனீவாவில் அரசாங்கம் வெளியிட்ட நிலைப்பாட்டுக்கு முரணானது. ஐ.நா. விசாரணைக்குழுவை இலங்கைக்குள் அனுமதிப்பதா, இல்லையா என்பது குறித்து நாடாளுமன்றமே முடிவெடுக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மெதிரிகிரியவில் நடந்த கூட்டம் ஒன்றில் வைத்துக் கூறியிருந்தார்.

முன்னதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் கூட்டத்திலேயே இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தின் பொறுப்பில் ஒப்படைத்து விடுவதே சிறந்தது என்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தக் கூட்டத்தில் கூறிய ஆலோசனை ஏற்கப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படும்போது, ஆளும் கட்சியின் உறுப்பினர்களை சுதந்திரமாக செயற்பட அனுமதிப்பதென்றும் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் இதுவரை இந்த விவகாரத்தில் தானாக எல்லா முடிவுகளையும் எடுத்துவிட்டு விசாரணைக்குழுவை நாட்டுக்குள் அனுமதிக்கும் விவகாரத்தில் மட்டும் ஏன் இந்த முடிவை எடுத்தது?

ஐ.நா. வின் முக்கிய அங்கம் ஒன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கமைய உருவாக்கப்பட்ட விசாரணைக் குழுவொன்றை நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுப்பது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அரசாங்கம் நன்கறியும்.

இந்த விசாரணைக்குழுவின் உள்நுழைவுக்கான எல்லாச் சாத்தியங்களையுமே இல்லாமல் செய்வதற்கான வாய்ப்புகளை அரசாங்கம் கொண்டிருந்தும் அவற்றை பயன்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டது அரசாங்கம்.

அதாவது நம்பகமான உள்ளக விசாரணை ஒன்றின் மூலம் இத்தகைய சர்வதேச விசாரணையைத் தடுப்பதற்கான வாய்ப்புகள் மிகத் தாராளமாகவே இருந்தன. அதற்குப் போதிய அவகாசமும் கொடுக்கப்பட்டது. ஆனால், அதற்கு அரசாங்கம் விட்டுக் கொடுக்கவில்லை. விடாப்பிடியாக மறுத்து விட்டது.

அப்போது கூட, அரசாங்கம் உள்ளக விசாரணை ஒன்றை நடத்தலாமா இல்லையா என்று நாடாளுமன்றத்திடம் கருத்துக் கேட்கவில்லை.
அரசாங்கம் தன்னிச்சையாகவே அந்தக் கொள்கை முடிவை எடுத்தது.

இப்போது நிலைமைகள் எல்லை மீறிச் சென்று விட்டன. அரசாங்கம் இப்போது உள்ளக விசாரணைக்கு இணங்கினாலும் கூட, இந்த சர்வதேச விசாரணையைத் தடுக்க முடியாது என்ற கட்டம் உருவாகி விட்டது.

இந்த நிலையில் தான், அரசாங்கம் நிறையவே யோசிக்க ஆரம்பித்துள்ளது போலும். அதனால் தான், நாடாளுமன்றத்தின் தலையில் பழியைப் போட்டுவிட முனைகிறது. நாடாளுமன்றம் என்பது மக்களாட்சியின் உயர்ந்த பெறுமானம் கொண்ட அமைப்பு. ஜனநாயக ரீதியாக மக்களின் கருத்தைப் பிரதிபலிக்கும் இடமாக அது கருதப்படுகிறது.

அங்கு எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் மக்களால் எடுக்கப்படும் முடிவாகவே பார்க்கப்படும். அதனைத்தான் அரசாங்கம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முயன்றுள்ளது. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடுவதன் மூலம் அரசாங்கம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தனக்கு பல அனுகூலங்கள் கிடைக்கும் என்று நம்புகிறது.

ஐ.நா. விசாரணைக்குழுவை அமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பித்துமே அதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதே புத்திசாலித்தனமானது என்று பல்வேறு அரசியல் விற்பன்னர்களும் கருத்துக் கூறியிருந்தனர்.

இதனை நிராகரிப்பது சர்வதேச அரங்கில் இலங்கைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று இராஜதந்திரிகள் பலரும் எச்சரித்திருந்தனர்.

இந்த விசாரணைக்கு ஒத்துழைக்காமல் மறுப்பதால், சர்வதேச தடைகளை எதிர்கொள்ளும் நிலை உருவாகும் என்றும் அவர்களில் பலரும் கூறியிருந்தனர்.

அதேவேளை, இந்த விசாரணைக்குழுவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்ற குரல் ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) போன்ற கட்சிகளிடம் இருந்தும் கூட வரத் தொடங்கியது. இது அரசாங்கம் எதையோ மறைப்பதால்தான், இந்த விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறது என்ற கருத்தை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டது.

எனவே தான் அரசாங்கம், விசாரணைக்குழுவை உள்ளே நுழைவதற்கும் தடைவிதிக்க வேண்டும். அதேவேளை, உள்நாட்டு, வெளிநாட்டு குரல்களையும் அடக்க வேண்டும் என்றும் யோசித்தது. அதற்காகவே இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திடம் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டால், அரச தரப்பிலுள்ள எல்லா உறுப்பினர்களும் விசாரணைக்குழுவை நாட்டுக்குள் அனுமதிக்கக்கூடாது என்றே வாக்களிப்பர் என்பதில் சந்தேகமில்லை.

அதேவேளை, ஐ.தே.க., ஜே.வி.பி. போன்ற கட்சிகள் விசாரணைக்குழுவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கோரினாலும், வாக்கெடுப்பு என்று வரும்போது நடுநிலை வகிக்கும் சாத்தியங்களே அதிகம்.

இல்லாவிட்டால், அரசாங்கம் தம்மைத் துரோகிகளாக பட்டம் கட்டிவிடும் என்ற பயம் இந்தக் கட்சிகளுக்கு நிச்சயம் வரும். அதைவிடச் சிங்கள மக்கள் தம்மை நிராகரித்து விடுவார்களோ என்ற கலக்கமும் இந்தக் கட்சிகளிடம் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றுதான் நிச்சயமாக இந்த விசாரணைக்குழுவுக்கு ஆதரவாக வாக்களிக்கப் போகிறது. இப்படியான நிலையில், ஒட்டுமொத்த நாடே இந்த விசாரணைக்குழுவை எதிர்ப்பதாக கருத்தை அரசாங்கம் நாடாளுமன்றத்தின் ஊடாக வெளிப்படுத்தும்.

ஐ.தே.க., ஜே.வி.பி. போன்ற கட்சிகள் விசாரணைக்குழு வருகைக்கு ஆதரவாக வாக்களித்தாலும் கூட, தமது பெரும்பான்மையை வைத்து அரசாங்கம் தனது இலக்கை எட்டிவிடும்.

நாடாளுமன்ற வாக்கெடுப்பு, விசாரணைக்குழுவை அனுமதிப்பதற்கு இடமளிக்காது என்பதால் அதை மக்களின் தீர்ப்பாகக் காட்டி வெளிநாடுகளின் வாயை அரசாங்கம் அடைத்து விடும். ஆனால், இதனை மேற்குலக நாடுகள் ஏற்றுக்கொள்ளுமா என்பது சந்தேகம் தான்.

அரசாங்கத்தின் கருத்தையே நாடாளுமன்றமும் பிரதிபலிக்கப் போகிறது என்பது சர்வதேச சமூகத்துக்குத் தெரியாத விடயமல்ல. ஆனால், விசாரணைக்குழுவை அனுமதிக்க மறுத்ததற்காக இலங்கை அரசு மீது சர்வதேச சமூகம் நேரடியான அழுத்தங்களை கொடுக்க முடியாது.
ஏனென்றால், அது அரசாங்கத்தின் முடிவல்ல. நாடாளுமன்றத்தின் முடிவு.

இவையெல்லாம் விசாரணைக்குழுவை நாட்டுக்குள் அனுமதிக்காமல் தடுப்பதற்கும் அதனால், ஏற்படும் விளைவுகளின் பாதிப்பை குறைப்பதற்கும் மட்டுமே உதவக் கூடும்.

ஐ.நா. விசாரணைக்குழு வெளியே இருந்து நடத்தும் விசாரணைகளாலும் அதன் இறுதி அறிக்கையினாலும் ஏற்படக்கூடிய விளைவுகளிலிருந்து அரசாங்கத்துக்கு பாதுகாப்பளிக்க இந்த உத்தி ஒருபோதும் பயன்படாது.

நாடாளுமன்றத்தின் மீது பழியை போட்டுத் தப்பிக்கும் இந்த உத்தி தற்காலிக வெற்றியை வேண்டுமானால் அரசாங்கத்துக்கு கைகொடுக்கலாமே தவிர, நிரந்தரமான அழுத்தங்களிலிருந்து தப்பிக்க உதவமாட்டாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடுத்தவர் மனைவியை அபகரித்ததால் கொன்றோம்: கைதானவர்கள் வாக்குமூலம்!!
Next post குதிகால் வெடிப்பைப் போக்கும்; சில இயற்கை வைத்தியங்கள்…!!