ஈராக் மார்க்கெட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் குண்டு வெடித்து 60 பேர் பலி

Read Time:4 Minute, 15 Second

Irak.Map.jpgஈராக் மார்க்கெட்டில் காரில் இருந்த குண்டு வெடித்ததில் 60 பேர் பலியானார்கள். 80 பேர் படுகாயம் அடைந்தனர்.ஈராக் நாட்டில் அமெரிக்கா படையெடுத்து அதன் அதிபர் சதாம் உசேனை பிடித்த பிறகு ஷியா பிரிவைச் சேர்ந்த நூரி-அல்-மாலிகி தலைமையில் தற்காலிக அரசு நடைபெற்று வருகிறது. ஆனாலும் முன்பு ஆட்சி நடத்திய சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள் (சதாம் உசேன் ஆதரவாளர்கள்) இப்போதைய அரசாங்கத்தை எதிர்த்து போராடி வருகிறார்கள்.
அவர்களை தீவிரவாதிகள் என்று அறிவித்துள்ள அரசாங்கமும், அமெரிக்கப் படைகளும் தீவிரவாதிகளை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. இருப்பினும் தீவிரவாதிகளும் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறார்கள்.

பாக்தாத் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் சத்ர் என்ற நகரத்தில் மக்கள் நெருக்கம் மிகுந்த இடத்தில் அல்-உலா என்ற மார்க்கெட் உள்ளது. அந்த இடத்தை போலீஸ் ரோந்து வாகனம் ஒன்று கடந்து சென்ற போது காய்கறி லாரி ஒன்று போலீஸ் வாகனத்தை நோக்கி பாய்ந்தது. ஆனால் போலீஸ் வாகனம் கடந்து விட்டது. லாரி மார்க்கெட்டுக்குள் புகுந்து வெடித்தது. லாரியில் இருந்த காய்கறிக்குள் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டு, தற்கொலைப்படை தீவிரவாதி, லாரி டிரைவராக நடித்து மார்க்கெட்டுக்குள் புகுந்து வெடிக்க செய்தான்.

லாரி குண்டு வெடித்ததில் மார்க்கெட்டுக்கு பொருட்கள் வாங்க வந்த பொது மக்கள் மீது குண்டு சிதறல்கள் தெறித்தன. பொது மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். மார்க்கெட் பகுதி முழுவதும் ஒரே புகை மயமாக காட்சி அளித்தது. இந்த குண்டு வெடிப்பில் 60 பேர் பலியானார்கள். மேலும் 80 பேர் படுகாயம் அடைந்தனர். பலியானவர்களில் 3 பேர் போலீஸ்காரர்கள். மற்றவர்கள் அப்பாவி பொது மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பல கடைகள், 20 வாகனங்களும் சேதம் அடைந்தன.

போலீசாரை குறி வைத்து இந்த தாக்குதல் நடந்து இருக்க வேண்டும் என்றும், போலீஸ் ரோந்து வாகனம் சென்ற பிறகு கார் குண்டு வெடித்ததால் போலீசாரின் இறப்பு குறைவாக இருந்ததாகவும், ஆனால் அப்பாவி பொது மக்கள் தீவிரவாதிகளின் இலக்குக்கு பலியாகி விட்டனர் என்றும் ஒரு அதிகாரி கூறினார்.

பாக்தாத் நகரில் தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிக்க பிரதமர் நூரி-அல்-மாலிகி கடந்த 3 வாரங்களாக பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கிறார். அதையும் மீறி இந்த தாக்குதல் நடைபெற்று இருப்பது அரசாங்கத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர்களில் முக்கியமான தளபதியான அபு முஷாப்-அல்-ஜர்க்காவி கொல்லப்பட்ட பிறகு பாதுகாப்பும், ரோந்துப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் தீவிரவாதிகளின் தாக்குதலும் அதிகரித்து உள்ளது என்று அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உலக சாம்பியன் பிரேசில் அதிர்ச்சி தோல்வி: 1 கோல் போட்டு பிரான்ஸ் வீழ்த்தியது
Next post விடுதலைப்புலிகளின் படகு தீப்பிடித்து மூழ்கியது இலங்கை கடற்படை தாக்குதல்