புலிகள் இருந்தபோது எப்போதாவது தமிழ் மக்களால் தேர்தல்களில் சுதந்திரமாக வாக்களிக்க இயலுமாக இருந்ததா? – கோட்டபாயாவுடனான ஒரு பிரத்தியேக நேர்காணல்!!

Read Time:26 Minute, 13 Second

timthumb (1)புலிகள் இருந்தபோது எப்போதாவது தமிழ் மக்களால் தேர்தல்களில் சுதந்திரமாக வாக்களிக்க இயலுமாக இருந்ததா?

“தமிழ் பிரிவினைவாதிகளுக்கு எதிராக இந்தியா தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்”

– கோட்டபாயாவுடனான ஒரு பிரத்தியேக நேர்காணல்

“இந்தியாவின் நட்புறவும் மற்றும் ஆதரவும் ஸ்ரீலங்காவுக்கு மிகவும் முக்கியம். இந்தியா இதனை வேறுவிதமாகச் சிந்திப்பதுபோலத் தெரிவது வருத்தப்பட வேண்டிய விடயம்”

“சீனாவுடனான ஸ்ரீலங்காவின் உறவு எப்போதும் ஒரு பொருளாதாரத் தன்மையான உறவாகவே உள்ளது”

“கொழும்புத் துறைமுகத்தில் சீன நீர்மூழ்கிக் கப்பல்களை நிறுத்தியது மீள் – விநியோகங்களுக்காக மட்டுமே அன்றி வேறு எந்த இராணுவ நோக்கங்களுக்காகவும் இல்லை”

எல்.ரீ.ரீ.ஈ க்கு எதிரான போரை முன்னின்று நடத்திய கோட்டபாய ராஜபக்ஸ ரெடிஃப் டொட் கொம் என்கிற இணையத்தளத்தில் நித்தின் ஏ கோகலே யுடன் நடத்திய ஒரு பிரத்தியேக நேர்காணலில் நீண்ட நேரம் பேசுகிறார்.

ஸ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டபாய ராஜபக்ஸ, முன்னாள் இராணுவ அதிகாரியும் மற்றும் முன்னாள் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் சகோதரரும் ஆவார். இவர்தான், தமிழ் புலிகளை நிர்மூலமாக்கி கால் நூற்றாண்டுகளாக தீவில் இடம்பெற்று வந்த தீவிர உள்நாட்டுப் போரை முடிவுகட்டுவதற்காக 2009ல் ஸ்ரீலங்காவில் நடந்த ஈழப்போர் – 4 க்கு பின்னாலிருந்த இயங்கு சக்தியாக பெரிதளவில் இருந்தவர்.

ஸ்ரீலங்காவில் சமீபத்தில் தோற்கடிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்த கடும் போக்காளராகக் கருதப்படும் கோட்டபாய ராஜபக்ஸமீது, ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சுக்கு அவர் தலைமை தாங்கிய சுமார் ஒன்பது வருடங்களில், பல்வேறு யுத்தக் குற்றங்கள்,; ஸ்ரீலங்கா சமூகத்தை இராணுவ மயமாக்கலுக்கு உட்படுத்தியது, கொழும்பை சீனாவின் கரங்களுக்குள் தள்ளியது, போன்ற இன்னும் பல குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படுகிறது.

முன்னர் அமெரிக்காவில் வசித்துவந்த கோட்டபாய ராஜபக்ஸ, எல்.ரீ.ரீ.ஈக்கு எதிராக நடக்கும் போரில் தனது சகோதரருக்கு உதவுவதற்காக 2005ல் ஸ்ரீலங்காவுக்கு திரும்பினார், தற்போதுள்ள புதிய அரசாங்கத்தால் நடத்தப்பட்டு வரும் முன்னைய ஆட்சியினரால் நடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்படும் பல்வேறு குற்றங்கள் மற்றும் தவறுகள் சம்பந்தமாக நடத்தப்படும் விசாரணைகள் காரணமாக தீவிர அழுத்தத்துக்கு உட்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்காவில் ராஜபக்ஸக்கள் அதிகாரத்தை இழந்து சரியாக ஒரு மாதத்துக்குப் பிறகு முதல் தடவையாக கோட்டபாய ராஜபக்ஸ ரெடிஃப் டொட் கொம் என்கிற இணையத்தளத்தில் நித்தின் ஏ கோகலேயுடன் ஒரு விரிவான நேர்காணலை மின்னஞ்சல் வழியாக நீண்ட நேரம் பேசுவதற்கு இணக்கம் தெரிவித்தார்.

ஒரு குறுகிய நேர்காணல் இந்த மனிதரையும் மற்றும் அவரது செயற்பாடுகளையும் புரிந்து கொள்ள போதுமானதாக இல்லாவிடினும் – “இந்த நாட்களில் நான் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும்” என்று அவர் சொல்கிறார் – அவரது நடவடிக்கைகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான சிந்தனையின் ஒரு சிறிய கண்ணோட்டம் கீழே தரப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக நாட்டின் பாதுகாப்பு உபகரணத்தை நீங்கள் கையாண்டு வந்துள்ளீர்கள். உங்கள் அரசாங்கம் நாட்டை மிக அதிகமான இராணுவ மயமாக்கலுக்குள் விட்டுள்ளது என்கிற குற்றச்சாட்டுக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அதாவது ஸ்ரீலங்காவின் அளவுக்கு பொருத்தமில்லாத வகையில் ஒரு இராணுவ பலத்தை உருவாக்கியுள்ளீர்கள்?
நீங்கள் சொல்வது போல நாட்டை இராணுவமயமாக்கலுக்குள் விட்டுவிடவில்லை. அதற்கு முற்றிலும் முரண்பாடாக சொல்லப்போனால் அது உண்மையாக இருக்க வேண்டும். யுத்தத்தின் போதுதான் பயங்கரவாதத்துககு எதிரான போரை வெற்றிகொள்ள தேவையான அளவுக்கு ஸ்ரீலங்காவின் இராணுவ அமைப்பு விரிவு படுத்தப்பட்டது.

நாங்கள் போராட வேண்டியிருந்த ஸ்ரீலங்காவுக்கு எதிரான பயங்கரவாதிகளை உலகின் மிகக் கொடிய பயங்கரவாத அமைப்பாக அமெரிக்காவின் எப்.பி.ஐ கூட வகைப்படுத்தியிருந்ததை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அப்படியான ஒரு அமைப்பை தோற்கடிப்பது எளிதான பணி இல்லை. எல்.ரீ.ரீ.ஈ யினை தோற்கடிப்பதற்கு தரை, கடல் மற்றும் ஆகாய மார்க்கமான ஒருங்கிணைந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

அதற்கு அவசியமான முக்கிய தேவைகளில் ஒன்றாக பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தை அதன் தரைப்படையிடமிருந்து பறித்தெடுப்பதற்கு போதுமானளவு மனித வலுவை வைத்திருக்க வேண்டியது அவசியமாக இருந்தது. அந்த நோக்கத்திற்காகவே நாங்கள் இராணுவத்தை விரிவு படுத்தினோம். ஆனால் யுத்தத்தின் பின் அதை மேலும் விரிவாக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. அதற்கு மேலதிகமாக யுத்தத்தின் பின்னர் நாங்கள் எல்.ரீ.ரீ.ஈக்கு எதிரான எந்த ஒரு ஆயுதக் குழுவும் வடக்கு மற்றும் கிழக்கில் ஆயுதங்களை காவித்திரிய அனுமதிக்கவில்லை.

நாங்கள் விரும்பியிருந்தால், வடக்கு மற்றும் கிழக்கில் 11,000 க்கும் அதிகமான புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் இருக்கிறார்கள், ஆகையால் எல்.ரீ.ரீ.ஈக்கு எதிரான குழுக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஆயுதம் அவசியம் என்கிற காரணத்தைச் சொல்லி அந்தச் சாக்கில் எல்.ரீ.ரீ.ஈக்கு எதிரான மற்றும் ரி.என்.ஏக்கு எதிரான குழுக்கள் தொடர்ந்தும் ஆயுதங்களை காவித்திரிய அனுமதித்திருக்கலாம்.

இந்தக் குழுக்கள் தொடர்ந்தும் ஆயுதங்களை வைத்திருக்குமானால் வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள முழு வாக்களிப்பு பாணியுமே வித்தியாசமானதாய் மாறியிருந்திருக்கும். வடக்கு மற்றும் கிழக்கு அதேபோல முழு நாட்டுக்குமே ஆயுத மோதல் மற்றும் பயங்கரவாதத்திலிருந்து விடுதலை பெற்றுக் கொடுத்தது நாங்கள்தான்.

இன்று மக்கள் தாங்கள் விரும்பிய யாருக்கும் சுதந்திரமாக வாக்களிக்க முடியும் ஏனெனில் அதற்கு காரணம் எங்கள் அரசாங்கத்தின் சாதனைகள்.

நீங்கள் நாட்டை முனைவாக்கம் எனும் இரண்டு முரண்பட்ட குழுக்களாக பிளவு அடையும்படி விட்டுள்ளீர்களா?
நான் அப்படி எண்ணவில்லை. நாங்கள் அரசாங்கத்தில் இருந்தோம். எனவே மக்கள் எங்களை எதிர்த்தார்கள் மற்றும் அரசியல் நோக்கம் கொண்டவர்கள் வழக்கமாக தங்கள் அரசியல் எதிரிகளைப்பற்றி நல்ல விடயங்களைச் சொல்ல மாட்டார்கள். நாங்கள் நாட்டை முனைவாக்கம் அடையும்படி செய்துவிட்டதாகச் சிலர் சொல்கிறார்கள்.

நாங்கள் உண்மையில் எல்.ரீ.ரீ.ஈ யினரை எதிர்க்க வேண்டியிருந்தது அந்த விடயத்தில் கேள்விக்கு இடமில்லை. ஆனால் அது தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு யுத்தம் அல்ல. நாங்கள்தான் தமிழ் மக்களை எல்.ரீ.ரீ.ஈயிடமிருந்து விடுவித்தோம். புலிகள் அங்கு இருந்தபோது எப்போதாவது தமிழ் மக்களால் தேர்தல்களில் சுதந்திரமாக வாக்களிக்க இயலுமாக இருந்ததா?

2010ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கிலிருந்த தமிழ்மக்கள், போரின்போது எங்கள் அரசாங்கத்தின் இராணுவ தளபதியாக கடமையாற்றியவருக்கு பெருமளவு வாக்களித்தார்கள். 2015ல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கிலிருந்த தமிழ் மக்கள், யுத்தம் நடைபெற்றபோது ஜனாதிபதி வெளிநாடு சென்றிருந்ததால் அவருக்கு பதிலாக பாதுகாப்பு அமைச்சராக பதில் கடமையாற்றியிருந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்கு மீண்டும் ஒருமுறை வாக்களித்துள்ளார்கள்.

நாங்கள் நாட்டை முனைவாக்கம் அடையும்படி விட்டுவிடவில்லை என்பதற்கு இதுவே போதுமான ஆதாரம்.

நீங்களும் ஜனாதிபதி மகிந்தாவும் நள்ளிரவு அதிரடி சோதனைகள், கண்காணிப்புகள், எதிர்தரப்புகளை அச்சுறுத்தல் போன்ற பொதுவான நிகழ்ச்சிகளை அரங்கேற்றி ஸ்ரீலங்காவை சர்வாதிகார பாணியில் நடத்தினீர்கள் என்று உங்கள் விமர்சகர்கள் உங்கள்மீது குற்றம் சாட்டுகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எப்படி பதில் சொல்ல விரும்புகிறீர்கள்.
ஸ்ரீலங்கா ஒருபோதும் சர்வாதிகாரத்தின் கீழ் இருந்ததில்லை. நாங்கள் ஒரு ஜனநாயக அரசாங்கம் மற்றும் அத்தகைய ஒரு அரசாங்கத்தின்கீழ்தான் நான் சேவையாற்றி உள்ளேன், இந்த நாட்டில் ஒருபோதும் நடைபெற்றிராத நியாயமானதும் சுதந்திரமானதுமான தோதல்களை நாங்கள் நடத்தியுள்ளோம்.

2005க்குப் பிறகு எங்கள் அரசாங்கம் முதன்முறையாக அதிகாரத்துக்கு தெரிவு செய்யப்பட்ட பின்னர் அநேகமாக ஒவ்வொரு வருடமும் தேர்தல்கள் நடைபெற்று வந்தன. இந்த தேர்தல்கள் அனைத்துமே சுதந்திரமானதும் நியாயமானதும் ஆகும். 2015ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் தோற்றுப்போனோம், ஏனென்றால் தேர்தல் நியாயமாகவும் மற்றும் சுதந்திரமாகவும் நடைபெற்றன.

இந்த நள்ளிரவு சோதனைகளைப் பொறுத்தவரை, யுத்தத்தின்போது நள்ளிரவு திடீர் சோதனைகள் நடைபெற்றிருக்கலாம் ஆனால் அதன் பின்னர் ஒருபோதும் அப்படி நடக்கவில்லை. இந்தக் கண்காணிப்பு மற்றும் தொலைபேசி ஒட்டுக்கேட்டல் போன்ற கதைகள் யாவும் சிலரது கற்பனையில் தோன்றிய கட்டுக்கதைகள்.

எமது அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் எந்த ஒரு எதிர்க்கட்சியும் எந்தக் காரணத்துக்காகவும் துன்புறுத்தலுக்கு ஆளாகவோ அல்லது தொந்தரவு செய்யப்படவோ இல்லை. இதற்கு முரண்பாடாக அனைத்து எதிர்க்கட்சியை சேர்ந்த சகல அரசியல்வாதிகளுடனும் ஜனாதிபதி சுமுகமான உறவையே பேணிவந்தார். தொடர்பாடலுக்கான பாதை எப்போதும் திறந்ததாகவே இருந்தது அதனால்தான் அநேகமான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு சமயங்களில் எங்களுடன் இணைந்து கொண்டார்கள்.

எங்கள் அரசாங்கத்தைப்பற்றி கூச்சல்போட்டு விமர்சிப்பவராக இருந்த மங்கள சமரவீரவைப் போன்றவாகள் எங்கள் அரசாங்கத்தில் இணையும் எண்ணத்தின் விளிம்பில் நின்றார்கள். அது சாத்தியமாக இருந்தது ஏனென்றால் எங்கள் அரசாங்கத்துக்கும் மற்றும் எதிர்க்கட்சி அங்கத்தவர்களுக்கும் இடையே ஒருபோதும் பகை உணர்வு இருந்ததில்லை.

ஈழப்போர் – 4 நடைபெற்று ஆறு ஆண்டுகளுக்குப் பின்பு, திரும்பிப் பார்க்கும்போது வித்தியாசமாக எதையும் செய்திருக்கலாம் என்று தோன்றியதுண்டா?
இல்லை.

ஒரு பாதுகாப்புச் செயலாளர் என்கிற வகையில் கடந்த தசாப்தம் முழுவதும் உங்கள் இராணுவ வன்பொருட்களில் பெரும்பாலானவற்றை சீனாவிடமிருந்து பெறுவது என்கிற ஒரு முடிவை நீங்கள் எடுத்திருந்தீர்கள். அது உங்கள் உள்ளுணர்வு தொடர்பான முடிவா அல்லது உங்களுக்கு உதவி செய்வதில் இந்தியா தயக்கம் காட்டியதுதான் உங்கள் கரங்களை கட்டிப்போட்டதா?

1980ல் யுத்தம் ஆரம்பித்த காலந்தொட்டு அனைத்து ஸ்ரீலங்கா அரசாங்கங்களும் தங்களுக்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் என்பனவற்றில் பெரும்பாலானவற்றை சீனாவிடமிருந்தே பெற்றுவந்தன. அது எங்கள் அரசாங்கத்தாலும் அதேபோலத் தொடரப்பட்டு வந்தது. 2006 ல் எங்கள் அரசாங்கத்தினால் இறுதிக்கட்ட போர் ஆரம்பமாகியபோது, தமிழ் நாட்டின் அழுத்தம் காரணமாக இந்தியாவால் எங்களுக்கு ஆயுதங்களை விற்க இயலாதிருந்தது.

இந்தியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கும் சாத்தியம் இருந்திருக்குமானால், நிச்சயமாக நாங்கள் அங்குதான் வாங்கியிருப்போம். அந்த நேரம் புது தில்லியில், எனது சம பதவி நிலையில் இருந்த விஜய் சிங்கிடம் நான் நிலமையை விளக்கியிருந்தேன். அவரும் அதை ஏற்றுக்கொண்டு நிலமையை ஸ்ரீலங்கா தானே தீர்த்துக் கொள்ளும்படி விட்டுவிட்டார். தங்களுக்கு ஆயுதங்களை விநியோகிப்பதற்கு விருப்பமுள்ள எவரிடமிருந்தாவது ஆயுதங்களை வாங்குவதைத் தவிர ஸ்ரீலங்காவுக்கு வேறு தெரிவு இருக்கவில்லை.

2006 மற்றும் 2008க்கு இடைப்பட்ட காலத்தில் இந்திய அமைப்புகளுடன் உங்களுக்கு ஒரு சிறந்த ஒத்துணர்வு இருந்தது, ஆனால் கிட்டத்தட்ட போர் நிறைவடையும் சமயத்தில் அந்த உறவு சீர்குலைந்துவிட்டதைப்போல தெரிகிறது? உண்மையில் என்ன தவறு ஏற்பட்டது? அதைப்பற்றி உங்களால் சிறிது விளக்க முடியுமா?
போர் நிறைவடையும் வரைக்கும் மற்றும் அதற்கு அப்பாலும் கூட இந்தியாவுடனான உறவு மிக நன்றாகாக் காலூன்றி இருந்தது என்றுதான் நான் சொல்லுவேன். எனினும் கடந்த சில வருடங்களாக ஸ்ரீலங்காவுக்கு சீனாவுடன் இருந்த உறவை இந்தியா தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம்.

நாங்கள் சீனாவுடன் எப்போதும் சிறந்த உறவுகளையே பேணி வந்துள்ளோம். கடந்த சில வருடங்களாக சில எண்ணிக்கையிலான திட்டங்கள் சீனாவின் சலுகைக் கடனுதவியுடன் இங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள், இதை ஸ்ரீலங்கா, சீனாவின் ஒழுக்கில் தன்னைப் புகுத்தியுள்ளதற்கான சமிக்ஞை என்று தவறாக வாசித்துள்ளார்கள் என்று நான் நினைக்கிறேன்.

எல்.ரீ.ரீ.ஈக்கு எதிரான போரில், இந்தியாவின் உதவி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது?
போரின்போது ஸ்ரீலங்கா எதிர்கொண்ட பிரச்சினைகளை இந்தியா புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாக இருந்தது. பரஸ்பர ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு நாடுகளிலிருந்தும் முக்கிய அதிகாரிகளைக் கொண்ட மூவர் குழு ஒன்றை நாங்கள் உருவாக்கினோம், இந்திய தரப்பிலிருந்து வெளியுறுவுச் செயலர், பாதுகாப்புச் செயலர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகிய மூவரும், எங்கள் தரப்பிலிருந்து பாதுகாப்புச் செயலாளராக நானும், ஜனாதிபதியின் செயலாளராகிய லலித் வீரதுங்க மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகரான எனது சகோதரர் பசில் ராஜபக்ஸ ஆகிய மூவரும் அதில் அங்கத்தவர்களாக இருந்தோம்.

இந்த மூவர் குழ அங்கத்தவர்களில் ஒருவர் மற்றவருக்கு இரவோ அல்லது பகலோ எந்த நேரத்திலும் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியும், மற்றும் ஸ்ரீலங்காவில் போர்க்களத்தில் நடைபெறும் சகலதையும் இந்தியத் தரப்பினருக்கு பசில் அறிவித்துக் கொண்டேயிருந்தார். எல்.ரீ.ரீ.ஈயினால் இந்தியாவுக்கு எழுந்துள்ள அச்சுறுத்தல் பற்றி இந்தியாவும் நன்கு அறிந்திருந்தது. எனவே இந்த புரிந்துணர்வு வெகு உதவியாக இருந்தது.

ஐநா மனித உரிமைகள் சபையில் (யு.என்.எச்.ஆர்.சி) இந்தியாவின் நிலைப்பாடு உங்களை ஏமாற்றமடையச் செய்ததா?
இந்தியா யு.என்.எச்.ஆர்.சி யில் ஸ்ரீலங்காவின் பக்கம் நின்றிருக்க வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன் ஏனென்றால் இந்தியாவுக்கு என்று ஒரு கொள்கை உள்ளது. நாட்டின் தனித்துவமான கொள்கைகயை காரணம் காட்டி ஐநா மனித உரிமைகள் சபையில் ஆதரவளிக்காமல் இருப்பது அல்ல. ஆனால் தமிழ்நாட்டின் அழுத்தம் அந்த நேரம் இருந்த மத்திய அரசாங்கத்தை பாதித்திருக்கலாம். இந்தியாவுக்கு வேறு தெரிவு இருக்கவில்லை என்பது எனக்குப் புரிகிறது.

இந்தியாவின் ஆதரவு மற்றும் நட்பு என்பன ஸ்ரீலங்காவுக்கு எவ்வளவு முக்கியமானது?
இந்தியாவின் ஆதரவு மற்றும் நட்பு என்பன ஸ்ரீலங்காவுக்கு மிகவும் முக்கியமானது, இந்தியா இதை வேறு விதமாக நினைப்பது மிகவும் வருத்தத்துக்கு உரியது. பல தசாப்தங்களாக இந்தியாவுக்கும் மற்றும் சீனாவுக்கும் இடையில் முறுகல் இருந்து வருகிறது. ஆனால் ஸ்ரீலங்கா மரபு ரீதியாக இரு நாடுகளுடனும் நெருங்கிய உறவை பேணி வருகிறது. சீனாவுடனான ஸ்ரீலங்காவின் உறவு எப்போதும் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது. கொழும்புத் துறைமுகத்தில் சீன நீர்மூழ்கிக் கப்பல்களை நிறுத்தியது மீள் – விநியோகங்களுக்காக மட்டுமே அன்றி வேறு எந்த இராணுவ நோக்கங்களுக்காகவும் இல்லை.

இப்போது நீங்கள் அதிகாரத்தில் இல்லை, ஸ்ரீலங்காவிலுள்ள புதிய ஆட்சியினால் அல்லது மேற்கத்தைய நாடுகளின் சூனிய வேட்டையினால் நீங்கள் தண்டனைக்கு உள்ளாவீhகள் என அஞ்சுகிறீர்களா?
எந்தப் பகுதியினர்; அல்லது மேற்கத்தைய பழி வாங்கல்களில் இருந்து வரும் எந்த தண்டனைக்கும் நான் அஞ்சவில்லை. எல்.ரீ.ரீ.ஈமீது ஆர்வமுள்ள நாடுகளின் எதிர்ப்பையும் மீறி எல்.ரீ.ரீ.ஈயினை கையில் எடுத்தபோதே அதிலுள்ள ஆபத்தை நாங்கள் அறிந்திருந்தோம். பயங்கரவாதத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவரவே நாங்கள் போராடினோம், ஏனென்றால் அது எங்கள் நாட்டுக்கு நாங்கள் செய்யவேண்டிய கடமை. நாங்கள் எதிர்கொண்ட ஆபத்தையும் மற்றும் நாங்கள் எடுத்த தியாகத்தையும் ஸ்ரீலங்கா மக்கள் இன்னமும் பாராட்டுகிறார்கள்.

பதவிக்காக வாக்களித்து தெரிவு செய்யப்படுவதும் மற்றும் அந்தப் பதவியில் இருந்து வெளியேற்றுவதற்காக வாக்களிப்பதும் வித்தியாசமான விடயங்கள். இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற பிறகும் உடனடியாக பதவியில் இருந்து சர்ச்சிலை வெளியேற்றுவதற்காக வாக்களிக்கப்பட்டது. அனால் அதற்காக போரின்போது அவர் ஏற்ற தலைமையை பிரித்தானிய மக்கள் பாராட்டவில்லை என்று அர்த்தம் கிடையாது.

எல்.ரீ.ரீ.ஈ யின் எச்சங்கள் அல்லது தமிழீழ அனுதாபிகள் ஸ்ரீலங்காவில் ஒரு மீள்வரவை மேற்கொள்வதற்கான சாத்தியங்கள் உள்ளனவா?
நாங்கள் அதிகாரத்தில் உள்ளபோது நாங்கள் எப்போதும் அத்தகைய ஒரு சாத்தியம் நிகழலாம் என்கிற விழிப்புணர்வுடன் இருந்தோம். அந்த விழிப்புணர்வு தொடரப்பட வேண்டும். தமிழ் பிரிவினைவாத சக்திகள் தமிழ்நாட்டில் ஒரு தளத்தை அமைப்பதற்கு முயற்சிக்கலாம் என்பதற்கு எதிராக இந்தியாவும் தனது பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழ் நாட்டினூடாகவே தமிழ் பிரிவினைவாத சித்தாந்தம் ஸ்ரீலங்காவுக்கு வந்தது மற்றும் ஸ்ரீலங்காவில் உள்ளதைக்காட்டிலும் தமிழ் பிரிவினைவாதத்துக்கு இந்தியாவில் மிக நீண்ட வரலாறு உள்ளது.

1980ல் தமிழ் பிரிவினைவாதக் குழுக்களை ஊக்கப் படுத்தியதன் காரணமாக இந்தியா மிக மோசமான ஒரு தவறைச் செய்துள்ளது. மீண்டும் ஒருமுறை தவறான சமிக்ஞைகளை தவறான நபர்களுக்கு அறிவிப்பதையிட்டு இந்தியா அவதானமாக இருக்கவேண்டும்.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்கள் வாக்கை பயனுறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.. -சிவநேசன் (பவன்)!!
Next post பாலியல் பலாத்கார புகாரில் சிக்கிய புரோட்டா மாஸ்டர் விஷம் குடித்து தற்கொலை!!