வாலிபரை கொன்று கால்வாயில் உடல் வீச்சு: பிரபல ரவுடி உள்பட 2 பேர் கைது!!
மைசூரு நகரில் படுவாரஹள்ளி 5-வது தெருவில் வசித்து வந்தவர் ராகவேந்திரா (வயது 23). இவர், கடந்த 21-ந் தேதி மைசூரு மகாராணி கல்லூரி பின்புறம் உள்ள கால்வாயில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து, ஜெயலட்சுமி புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கொலையாளிகளை போலீசார் தேடிவந்தனர். விசாரணையில், ராகவேந்திராவை படுவாரஹள்ளியை சேர்ந்த பிரபல ரவுடியான சீனா என்ற சீனிவாசா, பாலு ஆகியோர் இன்னொருவருடன் சேர்ந்து முன்விரோதம் காரணமாக கொலை செய்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, சீனிவாசா, பாலு ஆகிய இருவரையும் ஜெயலட்சுமி புரம் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இன்னொருவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.