குன்னூர் கருவூலத்தில் மோசடி செய்த 5 அதிகாரிகளுக்கு 1½ ஆண்டு தண்டனை!!
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள கருவூலத்தில் கடந்த 1987–ம் ஆண்டு முதல் 1992–ம் ஆண்டு வரை அங்கு பணிபுரிந்த அதிகாரிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டனர். இறந்தவர்களின் பெயரில் வந்த பென்சன் பணத்தை முறைகேடாக எடுத்ததாகவும், மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு மாதத்தில் 2 முறை சம்பளம் வழங்கியதாகவும் அவர்கள் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 11 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் வரை அவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கருவூல அதிகாரி காமேஸ்வரன், உதவி அதிகாரிகள் துரைவேலு, மாறன், பரிமளா, ராஜூ, சிவமணி, தங்கவேல், சிவன், கோவிந்தன், பெல்லி ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்த வழக்கு குன்னூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 22 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போது முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட தங்கவேல், சிவன், சிவமணி ஆகியோர் இறந்துவிட்டனர்.
வழக்கை விரைந்து முடிக்க உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி விசாரணை நடத்தப்பட்டது. 1993–ம் ஆண்டு முதல் நேற்று மாலை வரை 22 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று மாலை தீர்ப்பு கூறப்பட்டது.
கருவூல அதிகாரிகள் மாறன், பரிமளா, காமேஸ்வரன், துரைவேலு, ராஜூ ஆகியோர் குற்றவாளிகள் என்றும் அவர்களுக்கு தலா 1½ ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1500 அபராதமும் விதித்து நீதிபதி அனுராதா தீர்ப்பு கூறினார்.
அதிகாரிகள் கோவிந்தன் மற்றும் பெல்லி ஆகிய 2 பேரும் நிரபராதிகள் என்று கூறி விடுதலை செய்யப்பட்டனர்.
தண்டனை விதிக்கப்பட்ட அதிகாரிகள் 5 பேரும் நேற்று மாலையே அபராதத் தொகையை செலுத்தினர். பின்னர் 5 பேருக்கும் பெயில் வழங்கப்பட்டது.