குற்ற செயல்களில் ஈடுபடும் வாலிபர்களின் பெற்றோர் உறவினர்கள் மீது நடவடிக்கை: போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை!!
புதுவை கோரிமேடு போலீஸ் நிலையத்தில் போலீஸ் அதிகாரிகள்– பொதுமக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு பைரவசாமி தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்– இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், பாலமுருகன் மற்றும் பொதுமக்கள் 50–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பைரவசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
புதுவையில் இளைஞர்கள் அதிக அளவில் குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் பணம் மற்றும் மதுவுக்கு ஆசைப்பட்டு குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களை பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்டிக்க வேண்டும். அதை அவர்கள் கேட்காவிட்டால் அவர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
குற்ற செயல்களில் இளைஞர்கள் ஈடுபட்டால் இளைஞர்கள் மீது மட்டும் அல்ல அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.