மங்களம் அருகே இந்து சமய அறநிலையத்துறை ஊழியர் அடித்துக்கொலை!!
திருப்பூர் மாவட்டம் மங்களம் அருகேயுள்ள பள்ளபாளையம் சர்ச் வீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 56). வாழைத்தோட்டத்து அய்யன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை ஊழியராக இருந்தார். இவரது மகன் கதிரேசன். ஆட்டோ டிரைவர்.
நேற்று இரவு பள்ளபாளையம் ஆட்டோ நிறுத்தத்தில் இருந்த கதிரேசனிடம் பள்ளபாளையம் அண்ணா நகரில் உள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வரும் தூத்துக்குடியை சேர்ந்த சுந்தர் சிங் என்பவர் பள்ளபாளையத்தில் அண்ணாநகர் செல்ல வாடகைக்கு ஆட்டோ கேட்டார்.
கதிரேசன் இரவு நேரம் என்பதால் அதிக தொகை வாடகை கேட்டதாக தெரிகிறது. இதனால் கதிரேசனுக்கும், சுந்தர்சிங்குக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வேலை முடிந்து அய்யன் கோவிலில் இருந்து கணேசன் பள்ளபாளையம் வந்தார்.
ஆட்டோ நிறுத்தத்தில் மகன் கதிரேசனுடன் வாலிபர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அங்கு சென்று விசாரித்தார். அப்போது சுந்தர்சிங் தரக்குறைவாக கணேசனை திட்டினார். இதனால் ஆத்திரமடைந்த கதிரேசனும், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் சுந்தர்சிங்கை எச்சரித்தனர்.
பொதுமக்கள் தாக்கி விடுவார்களோ என்று அஞ்சிய சுந்தர்சிங் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அவரை கணேசன் துரத்தி சென்று பிடித்தார். அப்போது கணேசனை கீழே தள்ளிய சுந்தர்சிங் அங்கு கிடந்த மரக்கட்டையை எடுத்து கணேசனின் மண்டையில் அடித்தார். இதில் மண்டை உடைந்து நடுரோட்டில் கணேசன் சாய்ந்தார்.
கணேசனுக்கு பின்னால் ஓடிவந்த அவரது மகன் கதிரேசனும், பொதுமக்களும் ரோட்டில் கணேசன் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சுந்தர்சிங்கை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். மயக்க நிலையில் இருந்த கணேசனை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே கணேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து பிடிபட்ட சுந்தர்சிங்கை பொதுமக்கள் மங்களம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சுந்தர்சிங்கிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் மங்களம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.