விருதுநகர் மாவட்டத்தில் 4 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்!!
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கும், கட்டணாங்குளத்தைச் சேர்ந்த கார்த்திக்செல்வன் (வயது 25) என்ற வாலிபருக்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
தளவாய்புரம் அருகே உள்ள செட்டியார்பட்டியைச் சேர்ந்த பாண்டியராஜன்(25) என்ற வாலிபருக்கும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் நேற்று தளவாய்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
திருச்சுழி அருகே உள்ள மணவராயனேந்தல் கிராமத்தில் 17 வயது சிறுமிக்கும் சென்னை இந்திரா நகரைச் சேர்ந்த மணிகண்டன்(25) என்ற வாலிபருக்கும் நேற்று மணவராயனேந்தலில் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வத்திராயிருப்பு அருகே ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமிக்கும், மகாராஜபுரத்தைச் சேர்ந்த அப்துல்கனி(25) என்ற வாலிபருக்கும் வருகிற 8–ந்தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதுபற்றி தகவலறிந்த ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் திருமணம் நடைபெற இருந்த கிராமங்களுக்கு சென்று திருமணங்களை தடுத்து நிறுத்தி 4 சிறுமிகளையும் மீட்டு விருதுநகர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.