அண்ணாசாலையில் போலீஸ் நிலையத்தில் குடிபோதையில் போலீஸ்காரர் ரகளை!!
சென்னை அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவர் மது பழக்கத்துக்கு அடிமையானவர்.
இவர் பணியின் போது அடிக்கடி மது குடித்து விட்டு வந்து போலீஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபடுவார்.
போலீஸ் நிலையத்தில் ரகளை செய்தது தொடர்பாக இவர் ஏற்கனவே 2 முறை சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அந்த போலீஸ்காரர் நேற்று மாலை பணியின் போது குடிபோதையில் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கு ரகளையில் ஈடுபட்டார்.
பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் சுரேந்திரனிடம் கடுமையாக வாக்குவாதம் செய்து கொலை மிரட்டல் விடுத்தார்.
பின்னர் போலீஸ் நிலையத்தில் இருந்த பெண் போலீசையும் தாக்க முயன்றார். இதையடுத்து போலீஸ் நிலையத்தில் இருந்த அனைவரும் சேர்ந்து அவரை பிடித்தனர். பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆஸ்பத்திரியிலும் அவர் ரகளையில் ஈடுபட்டார்.
இதையடுத்து அண்ணாசாலை போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.