அன்னூர் அருகே இரும்பு வியாபாரி கொலையில் நண்பருடன் 4 பேர் சிக்கினர்!!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 45). பழைய கார், லாரி மற்றும் இரும்பு வியாபாரி. இவர் சென்னை திருவல்லிக்கேணியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் 5–ந்தேதி நாமக்கல்லில் உள்ள உறவினர் இல்ல திருமண விழாவுக்கு வந்தார். திருமணம் முடிந்ததும் மனைவியிடம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தங்கை வீட்டு சென்று தங்கி அங்கு ஒரு வியாபாரத்தை முடித்துவிட்டு வருகிறேன் என்று கூறினார்.
இதனால் சுப்பிரமணியத்தின் மனைவி தனியே சென்னைக்கு சென்றார். சுப்பிரமணியம் நாமக்கல்லில் இருந்து ரெயில் மூலம் கோவைக்கு புறப்பட்டு வந்தார். அதன் பின்னர் சுப்பிரமணியத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் குன்னத்தூர் அருகே அன்னூர்–சத்தி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குப்பை கிடங்கு அருகே சுப்பிரமணியம் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவரது உடலை அன்னூர் போலீசார் கைப்பற்றி சுப்பிரமணியத்தை கொலை செய்தது யார்? எதற்காக இந்த கொலை நடந்தது? என்று விசாரணை நடத்தி வந்தனர்.
சுப்பிரமணியத்தின் செல்போனில் கடைசியாக பேசிய நபர்களை பற்றிய தகவல்களை சேகரித்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். அப்போது நாமக்கல்லை சேர்ந்த வெற்றிவேல் என்பவரிடம் சுப்பிரமணியம் அடிக்கடி பேசி இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து வெற்றி வேலை போலீசார் தங்களது விசாரணை வலையத்துக்குள் கொண்டு வந்தனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் பணத்துக்கு ஆசைப்பட்டு சுப்பிரமணியத்தை கடத்தி துன்புறுத்தி கொலை செய்ததை வெற்றிவேல் ஒத்துக்கொண்டதாக தெரிகிறது.
தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது கொலைக்கான காரணமும் தெரியவந்தது. கொலையுண்ட சுப்பிரமணியமும் வெற்றிவேலும் தொழில்ரீதியாக தொடர்பு ஏற்பட்டு நண்பரானார்கள். நாமக்கல் திருமண விழாவுக்கு சுப்பிரமணியம் வந்த போது வெற்றிவேல் அவரை சந்தித்தார்.
அப்போது மேட்டுப்பாளையத்தில் மலிவான விலையில் பழைய இரும்புகள் விற்பனைக்கு உள்ளதாக சுப்பிரமணியத்திடம் வெற்றிவேல் தெரிவித்தார். அதை வாங்கி விற்பனை செய்தால் லட்சக்கணக்கில் லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகளும் கூறினார்.
இதையடுத்து மனைவியை சென்னைக்கு அனுப்பி வைத்துவிட்டு சுப்பிரமணியம் ரெயிலில் கோவைக்கு வந்தார். ரெயில் நிலையத்தில் இருந்து வெற்றிவேலுடன் தொடர்புடைய 7 பேர் சுப்பிரமணியத்தை காரில் அழைத்து சென்றனர். அந்த கார் மேட்டுப்பாளையம் சாலையில் செல்லாமல் வேறு பாதையில் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த சுப்பிரமணியம் உடன் வந்தவர்களிடம் கேட்டார்.
அவர்களிடம் இருந்து சரியான பதில் வராததால் விபரீதம் நடக்க போவதை சுப்பிரமணியம் உணர்ந்தார். எனவே செல்போனை எடுத்து பேச முயன்றார். அப்போது செல்போனை காரில் இருந்தவர்கள் பறித்து சுவிட்ச் ஆப் செய்தனர்.
பின்னர் சுப்பிரமணியத்தை கடத்தி சென்று அடைத்து வைத்தனர். அங்கு வந்த வெற்றிவேல் தனது ஆட்களுடன் சேர்ந்து சுப்பிரமணியத்திடம் பணம் கேட்டு மிரட்டினார். சுப்பிரமணியம் உடன்படாததால் அவரை அடித்து துன்புறுத்தினர். இதில் சுப்பிரமணியம் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து சுப்பிரமணியத்தின் உடலை குன்னத்தூர் அருகே அன்னூர்–சத்தி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு குப்பை கிடங்கு அருகே வீசி விட்டு தப்பிச்சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த கொலை தொடர்பாக வெற்றிவேல் மற்றும் அவருடன் தொடர்புடைய 3 பேர் போலீசில் சிக்கியுள்ளனர். மற்ற 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். கைதானவர் களை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.