இடத்தகராறில் பெண் சப்–இன்ஸ்பெக்டரை தாக்கி கொல்ல முயற்சி: தந்தை– மகன் கைது!!
காரைக்குடி வைரவ புரத்தைச் சேர்ந்தவர் ஜெயபாரதி. இந்த பெண்ணுக்கும் சோமு என்பவருக்கும் இடம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இதுகுறித்து அழகப்பபுரம் போலீசில் ஜெயபாரதி புகார் செய்தார்.
இந்த புகார் குறித்து விசாரிக்க போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் தேவகி, போலீஸ்காரர் சுரேஷ்குமார் ஆகியோர் பிரச்சினைக்குரிய இடத்துக்குச் சென்று பார்த்தனர். பின்னர் இரு தரப்பினரிடமும் நிலம் குறித்த ஆவணங்களை தருமாறு கேட்டு விசாரித்தனர்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் திடீரென்று சப்–இன்ஸ்பெக்டர் தேவகியை சோமு மகன் கருப்பையா (27) கழுத்தை பிடித்து நெரித்து சுவரில் மோதச் செய்து தாக்கி உள்ளார். இதைப்பார்த்ததும் அவருடன் சென்று இருந்த போலீஸ்காரர் சுரேஷ்குமார் தடுக்க முயன்றார். அவரையும் கருப்பையா தாக்கியதாக தெரிகிறது.
அப்போது கத்தியை எடுத்து வந்து மகனிடம் சோமு கொடுத்து குத்துமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் ஓடிவந்து அவர்களை விலக்கி விட்டு சமரசம் செய்து வைத்தனர்.
இதுகுறித்து போலீசில் சப்–இன்ஸ்பெக்டர் தேவகி புகார் செய்தார். இதன்பேரில் அழப்பபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர்சாமி மற்றும் போலீசார் கொலை முயற்சி மற்றும் பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்து சோமு, அவரது மகன் கருப்பையா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.