கேரள மாநிலத்தில் விவாகரத்துக்காக காத்திருக்கும் 18 ஆயிரத்து 500 தம்பதிகள்!!
இல்லற வாழ்க்கை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைத்த அரிய வாய்ப்பு. திருமணம் முடித்த ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து கொண்டும், விட்டுக்கொடுத்தும் வாழ்ந்தால் இல்லற வாழ்க்கையில் எளிதாக வெற்றிக்கனியை பறித்துவிடலாம்.
ஆனால் அதுவே எதிர்மாறாக நடந்து கொண்டால் இல்லறம் நல்லறமாக இருக்காது. சண்டை, சச்சரவுகள் நிறைந்ததாக அமைந்துவிடும். இந்த சூழ்நிலை சமீப காலமாக தம்பதிகளிடையே அதிகரித்து வருகிறது. இதற்கு சந்ததிகள் மாற்றம், சமுதாய வளர்ச்சி, சந்தர்ப்ப சூழ்நிலைகள் என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அவைகளையும் மிஞ்சி இல்வாழ்க்கையில் வெற்றிபெறும் தம்பதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இன்றைய இளைய தலைமுறையினரிடையே விவாகரத்து என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்றாக மாறிவருவது உண்மையிலேயே வருத்தப்படக்கூடிய ஒன்று.
அந்த வகையில் கேரள மாநிலத்தில் விவாகரத்து செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம் அங்கே 18 ஆயிரத்து 500 தம்பதிகள் விவாகரத்துக்காக காத்திருக்கிறார்கள் என்பதுதான். முன்பெல்லாம் விவாகரத்து என்பது அரிதாக இருந்தது. தற்போது விவாகரத்து என்பது சர்வ சாதாரணமாகி விட்டது என்றே சொல்லலாம்.
கேரளாவில் விவாகரத்து சற்று அதிகமாகி கொண்டு வருகிறது. இங்குள்ள சினிமா நடிகைகளில் பெரும்பாலானவர்கள் விவாகரத்து பெற்றுள்ளனர். கேரளாவை பொறுத்தவரை கணவன்-மனைவி இடையேயான குடும்ப பிரச்சினை மற்றும் விவாகரத்து பிரச்சினைகளை தீர்க்க 28 குடும்ப நல கோர்ட்டுகள் இயங்கி வருகின்றன. இந்த கோர்ட்டுகளில் 18 ஆயிரத்து 500 தம்பதிகள் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்து காத்து இருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு ஐகோர்ட்டில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த தகவலை கேட்டு ஒருவர் மனு செய்து இருந்தார். அதற்கு பதில் அளித்து ஐகோர்ட்டு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. எர்ணாகுளம் நகரில் மட்டும் ஆயிரத்து 739 பேர் விவாகரத்து கேட்டு கோர்ட்டுகளில் விண்ணப்பித்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.