மணலி புதுநகர் கோவிலில் பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை: போலி சாமியார் கைது!!
மணலி புதுநகரில் ஸ்ரீபிடாரி கனகதுர்க்கை சித்தர் பீடம் கோவில் உள்ளது. பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (38) இருந்தார்.
அவர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லி வந்ததாகவும் தெரிகிறது. இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. செவ்வாய், வெள்ளிக்கிழமையில் சிறப்பு பூஜைகளும் நடந்து வந்தன.
இந்த நிலையில் சென்னை, புளியந்தோப்பை சேர்ந்த கலா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) மனக்குறைவுடன் அடிக்கடி கோவிலுக்கு வந்தார்.
அவரிடம் சாமியார் ராஜேஷ் தவறாக சைகை காட்டுவதும், இரட்டை அர்த்தத்தில் பேசியும் செக்ஸ் தொல்லை கொடுத்தார். மேலும் சிறப்பு பூஜைக்கு தனியாக வரும்படியும் வற்புறுத்தினார். இதனால் மனவேதனை அடைந்த கலா, பூசாரி குறித்து உறவினர்களிடம் தெரிவித்தார். ஆத்திரம் அடைந்த அவர்கள் 50 வக்கீல்களுடன் மணலி புதுநகர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் மனு அளித்தனர்.
இது குறித்து சப்–இன்ஸ்பெக்டர் ரகு வழக்குப்பதிவு செய்து போலி சாமியார் ராஜேசை கைது செய்தார். அவரை பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.