By 14 March 2015 0 Comments

கோவை காவலாளி கொலை: மகளை சித்ரவதை செய்ததால் மருமகனை கொலை செய்தேன்-மாமனார் வாக்குமூலம்!!

10bb9011-2f95-45cd-af18-c96d12098ce9_S_secvpfபல்லடம் பனிக்கம்பட்டி ஊராட்சி பாலசமுத்திரம்–சின்னிய கவுண்டம்பாளையம் செல்லும் ரோட்டில் கடந்த 10–ந்தேதி 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணம் மூட்டை முட்புதரில் வீசப்பட்டிருந்தது.

சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் போலீசார் பிணத்தை சோதனை செய்தனர். பிணமாக கிடந்தவரின் உடல் பிளக்ஸ் பேனரால் சுற்றி மறைக்கப்பட்டு சிமெண்ட் சாக்கில் திணிக்கப்பட்டிருந்தது. பிணத்தை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

குற்றவாளிகளை விரைவில் பிடிக்க திருப்பூர் எஸ்.பி. அமித்குமார் சிங் உத்தரவிட்டார். பல்லடம் டி.எஸ்.பி. மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் பிணத்தின் மீது சுற்றி வைக்கப்பட்ட பேனரை துருப்பு சீட்டாக வைத்து தேடுதலை தொடங்கினர்.

அது கோவையை அடுத்து கலங்கல் என்ற ஊரில் நடந்த கோவில் திருவிழா பேனராகும். இது குறித்து கலங்கலில் போலீசார் விசாரணை நடத்தினர். போலீஸ் நெருங்கியதையடுத்து பல்லடம் ரங்கசமுத்திரத்தில் வசிக்கும் பாலசுப்பிரமணியம் (வயது55) என்பவர் பனிக்கம்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் ஈஸ்வரன் முன்னிலையில் சரணடைந்தார்.

அவர் கொலையுண்டது திண்டுக்கல் மாவட்டம் தருமத்துபட்டியை சேர்ந்த வெங்கிடுசாமி (38) என்பவர் என்றும் தானும் எனது மகனும் சேர்ந்து அவரை கொலை செய்து வீசினோம் என்றும் கூறினார். இதைத்தொடர்ந்து பல்லடம் போலீசில் பாலசுப்பிரமணியத்தை ஈஸ்வரன் ஒப்படைத்தார்.

இதனையடுத்து பெயிண்டர் பாலசுப்பிரமணியையும், கூலித்தொழிலாளியான அவரது மகன் வீரமணியையும் போலீசார் கைது செய்தனர்.

போலீசில் பாலசுப்பிரமணியம் அளித்த வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது:–

வெங்கிடுசாமிக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் எனது மகள் பொம்மி என்ற சிவகாமியை திருமணம் செய்து வைத்தேன். அவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். மருமகன் குடும்பத்துடன் கோவை அருகே உள்ள சூலூர் மற்றும் கலங்கலில் தங்கியிருந்து அரசூரில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

வெங்கிடுசாமிக்கு குடிப்பழக்கம் அதிகம் இருந்தது. இதனால் சம்பாதிக்கும் பணத்தை வீட்டுக்கு தராமல் குடித்தே செலவு செய்து வந்தார். குடும்பம் நடத்த பணம் கேட்டால் எனது மகளை வெங்கிடுசாமி அடித்து உதைத்து சித்ரவதை செய்தார். இதுகுறித்து எனது மகள் என்னிடம் கூறி அழுது வந்தார்.

நானும் எல்லாம் சரியாகி விடும் என்று சமாதானம் செய்து வைத்தேன். இது குறித்து மருமகனிடமும் கூறி குடும்பத்தை சரியாக நடத்துங்கள் என்று அறிவுரை கூறினேன். ஆனால் அவர் கேட்கவே இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன் எனது மகளை வெங்கிடுசாமி குடித்து விட்டு வந்து அடித்து உதைத்தார். இதனால் எனது மகள் கோபித்துக்கொண்டு ரங்கசமுத்திரம் வந்தார்.

கணவர் சித்ரவதை செய்வதாகவும் இனி அவருடன் வாழ முடியாது என்று அழுதார். கடந்த 9–ந்தேதி வெங்கிடுசாமி உறவினருடன் எனது வீட்டுக்கு வந்தார். அப்போதும் குடிபோதையில் பொம்மியிடம் தகராறில் ஈடுபட்டு அடித்து உதைத்தார். மருமகனை சமாதானப்படுத்தி படுக்க வைத்தேன்.

மகள் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என்று நீண்டநேரம் தூங்க முடியாமல் தவித்தேன். இப்படியே இருந்தால் மகள் மற்றும் பேரக்குழந்தைகள் நிம்மதியாக வாழமுடியாது என்று நினைத்த நான் மருமகனை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி அருகில் கிடந்த ஹாலோ பிளாக் கல்லை எடுத்து மருமகனின் தலையில் போட்டேன்.

பின்னர் அரிவாளை எடுத்து மருமகனின் வெட்டியும், கொத்தியும் கொலை செய்தேன். இது குறித்து எனது மகன் வீரமணி என்ற வீரமணிகண்டனிடம் கூறினேன். அவன் பிணத்தை அப்புறப்படுத்த உதவினான். வெங்கிடுசாமி பலநாட்களுக்கு முன் கொண்டு வந்த பிளக்ஸ் பேனரில் சுற்றி மூட்டை கட்டினோம். பின்னர் மொபட்டை எனது மகன் ஓட்ட நான் பிணத்தை பிடித்துக்கொண்டு சென்றேன். நீண்ட தூரம் செல்ல முடியாததால் சின்னியகவுண்டம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள முட்புதரில் பிணத்தை வீசி விட்டு வந்தோம் என்றார்.

கைதான பாலசுப்பிரமணியும், வீரமணியும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.Post a Comment

Protected by WP Anti Spam