கல்விக்கு வயது ஒரு தடையில்லை: 62 வயதில் பிளஸ்-1 தேர்வு எழுதும் பெண்!!

Read Time:5 Minute, 51 Second

db4c2be1-6a59-43a2-ac64-bbd5ae03e7ef_S_secvpfமலப்புரம் மாவட்டம் நிலம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் மும்தாஜ்(வயது 62). இவரது கணவர் மாட்டாயி ஆலி(70). வயதாகி விட்டதால் வேலைக்கு எதுவும் செல்வதில்லை. மும்தாஜ் முக்கம் மன்னாசேரி கே.எம்.சி.எச். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பெண் டாக்டர்களுக்கான விடுதியில் வார்டனாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு நிஷாத், நியாஸ் என்ற 2 மகன்கள். 2 பேருக்கும் திருமணம் ஆகி விட்டது. இருவருக்கும் தலா 2 குழந்தைகள் உள்ளனர். நிஷாத் அந்த பகுதியிலேயே கூலிவேலை செய்து வருகிறார். நியாஸ் வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்கள்.

மேற்கொண்டு மும்தாஜ் நன்கு படித்து ஏதாவது நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பதே அப்போதைக்கு அவருடைய லட்சியமாகவும் கனவாகவும் இருந்தது. ஆனால் அவரது கனவுகளுக்கும் லட்சியங்களுக்கும் திருமணம் மூலம் பெரிய தடை விழுந்தது. 10-ம் வகுப்பு படித்துக் கொண்டு இருக்கும்போதே அவரை மத்தாய் ஆலிக்கு திருமணம் செய்து வைத்தனர் அவரது பெற்றோர். இதனால் அவர் தனது கனவுகளை சிறிது காலம் தள்ளிப்போட்டு கணவர் மற்றும் குழந்தைகளை கவனிக்க ஆரம்பித்து விட்டார். ஆனால் மேற்கொண்டு படிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் அணையாத நெருப்பு போல அவருக்குள் எரிந்து கொண்டு இருந்தது.

காலங்கள் கடந்து குழந்தைகள் பெரியவர்களாகி விட்டனர். கணவன் உடல் நலனை கருத்தில் கொண்டு மருத்துவமனை விடுதியில் வார்டனாக வேலைக்கு சேர்ந்தார் மும்தாஜ்.

இந்த நிலையில் அவரது கனவுகளுக்கு விதை போடுவது போல் நிலம்பூர் நகராட்சி சார்பில் ‘அனைவருக்கும் 10-வகுப்பு கல்வி‘ என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 10-வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு என தனி பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதை கேள்விப்பட்டதும் மும்தாஜின் மனதில் புதைந்து கிடந்த ஆசை சிறகு முளைத்து பறக்க தொடங்கியது. உடனடியாக அந்த பயிற்சி மையத்தில் 10-வகுப்பு சேர்ந்தார். வேலைக்கு சென்றபடியே விடுமுறை தினங்களில் பயிற்சி வகுப்புகளுக்கு சென்றார்.

தொடர்ந்து நடந்த 10-வகுப்பு தேர்வில் 4 பாடங்களில் முதல் தர மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றார். அது அவருக்கு புது நம்பிக்கையை தந்தது. இதனால் மீண்டும் பிளஸ்-1 வகுப்பிலும் சேர்ந்தார். அதே நேரத்தில் வேலைக்கு சென்று வந்தார். அவர் வகுப்புக்கு வராவிட்டாலும் மற்ற மாணவிகள் அவருக்கு தேவையான உதவிகளை செய்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது தனது 62-வது வயதில், கல்விக்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக பிளஸ்-1 தேர்வு எழுதி வருகிறார். நகராட்சியின் இந்த திட்டத்தின் மூலம் மும்தாஜுடன் ஜமீலா என்ற 50 வயது பெண், நகராட்சி கவுன்சிலர் ரஜினி ராஜன் மற்றும் சி.டி.எஸ். இயக்க நிர்வாகி எம்.கே.உஷாகுமாரி ஆகியோரும் பிளஸ்-1 தேர்வு எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்தாஜுக்கு முக்கம் அருகே உள்ள சுங்கத்தறை எம்.பி.எம். பள்ளியில் தேர்வறை ஒதுக்கப்பட்டு உள்ளது. முக்கத்தில் இருந்து சுங்கத்தறை சென்று தேர்வு எழுதி விட்டு மீண்டும் வேலைக்கு திரும்பி வருகிறார். நேற்று முன்தினம் அவருக்கு சமூக அறிவியல் தேர்வு நடந்தது. அதில் 4 மதிப்பெண்ணுக்கான ஒரு கேள்விக்கு பதில் அளிக்க முடியவில்லை என்று வருத்தப்பட்டார்.

அடுத்த திட்டம் என்ன? என்று அவரிடம் கேட்டதற்கு, பெரிய திட்டம் எதுவும் இல்லை. அடுத்தகட்டமாக பிளஸ்-2 தேர்விலும் வெற்றி பெற வேண்டும். அவ்வளவு தான் என்றார். எளிய மனிதர்களின் ஆசைகள் எப்போதும் எளியவை தான் இல்லையா?.

ஆனால் இதன் மூலம், காத்திருத்தலும், கனவுகளின் மீதான காதலும், தீராத வேட்கையும் இருந்தால் காலங்கள் கடந்தாலும் நமக்கான லட்சியங்களை அடையலாம் என்ற நம்பிக்கையின் அணையாத ஒளியை நமக்கு அவர் அளித்திருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சொன்னா போச்சு (திரைவிமர்சனம்)!!
Next post மேற்குவங்காளத்தில் கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் 10 பேர் கைது!!