தகாத முறையில் நடந்து கொண்ட வாலிபரை தரதரவென இழுத்து போலீசிடம் ஒப்படைத்த பெண்!!
மும்பை நகரின் வைல் பார்லேயில் உள்ள சதாயே கல்லூரியில் ‘மாஸ் மீடியா’ 3-ம் ஆண்டு படித்து வருபவர் பிரத்னியா மந்தாரே. இவர் நேற்று மதியம் கல்லூரி முடிந்ததும், போரிவிலியில் உள்ள தனது வீட்டிற்கு ரெயிலில் வந்து கொண்டிருந்தார். ரெயில் கண்டிவ்லியை அடைந்த போது, வேறு ரெயில் மாறுவதற்காக அங்கு இறங்கினார்.
அப்போது, நடைமேடையில் குடிபோதையில் இருந்த ஒரு வாலிபன் மாந்த்ரேவிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றான். அதிர்ச்சியடைந்த அவர் அந்த வாலிபனை விட்டு விலகிச் சென்றார். இருந்தும் அந்த வாலிபன் ஆபாசமாக பேசியபடி நெருங்கிவந்து மாந்த்ரேவை தொட முயற்சி செய்தான். இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது கைப்பையால அவனைத் தாக்கினார். இந்த சம்பவத்தை பரபரப்பான ரெயில் நிலையத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் நன்றாக வேடிக்கை பார்த்தனர்.
திடீர் தாக்குதலால் நிலைகுலைந்து போன அந்த வாலிபனின் தலைமுடியைப் பிடித்து தரதரவென இழுத்துக் கொண்டு போய் ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்து, இனி அவன் எந்த பெண்ணிடமும் தவறாக நடந்து கொள்ளாத வகையில் அவனுக்கு தக்க பாடம் புகட்டுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டு பேட்டி எடுக்க வந்த பத்திரிக்கையாளர்களிடம் மந்தாரே கூறுகையில் “மகளிர் தினத்தன்று என்னிடம் ஒருவன் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தான். அவனை போலீசில் ஒப்படைத்த போதும் சில தினங்களில் அவன் வெளியே வந்து விட்டான். பெண்களின் பெற்றோர் போலீசிடம் போனால் தங்கள் பெண்ணின் பெயர் கெட்டு விடும் என்றே நினைக்கின்றனர். யாரும் தொட்டு விளையாடுவதற்கு பெண்கள் ஒன்றும் விளையாட்டுப் பொருட்கள் அல்ல. பெண்கள் தன்னிடம் தவறாக நடந்து கொள்பவர்களுக்கு எதிராக போராடி அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்” என்றார்.