90 நாட்களில் உலகை சுற்றி 12 நாடுகளில் 38 முறை திருமணம் செய்து மகிழும் அபூர்வ காதலர்கள்!!
அமெரிக்காவை சேர்ந்த காதல் ஜோடிகளான சீட்டா ப்லாட்(30) மற்றும் ரியான் உட்வார்ட்(32) ஆகியோர் திருமணம் என்னும் சடங்கை உலக சாதனையாக்க முயற்சித்து வருகின்றனர்.
உலகின் 6 கண்டங்களில் உள்ள 12 நாடுகளில் உள்ள 38 பெருநகரங்களில் 38 முறை திருமணம் செய்யும் நோக்கத்தில் இதற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இருந்து கடந்த (பிப்ரவரி) மாதம் 8-ம் தேதி விமானத்தில் புறப்பட்ட இவர்கள் கொலம்பியா நகரில் தங்களது ‘ஃபர்ஸ்ட் இன்னிங்க்ஸ்’ஐ பதிவு செய்தனர்.
இந்தியாவின் மும்பை நகரம், ஸ்பெயின், அயர்லாந்து, மொராக்கோ, கென்யா, எகிப்து ஆகிய நாடுகளில் உள்ள முக்கிய பெருநகரங்களில் அடுத்தடுத்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ளது. சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, பிஜி ஆகிய நாடுகளிலும் தங்களது திருமண சடங்கை நடத்த தீர்மானித்துள்ள இந்த தம்பதியர், இறுதியாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சட்டப்பூர்வமான முறையில் பதிவு திருமணம் செய்து கொள்ள தீர்மானித்துள்ளனர்.
அமெரிக்காவில் சராசரியாக ஒரு திருமணத்துக்கு 30 ஆயிரம் டாலர்கள் வரை செலவு செய்யவேண்டிய நிலையில், ஏற்கனவே யோசித்து, நன்றாக திட்டமிட்டு 11 நாடுகளுக்கு செல்லும் விமானங்களில் வெறும் 6 ஆயிரம் அமெரிக்க டாலர்களை மட்டுமே செலவு செய்து ‘ஆஃபர்’ முறையில் முன்பதிவு செய்து இந்த சாதனையை இவர்கள் செய்து வருகின்றனர்.
எல்லா திருமணத்தின்போதும் ஒரே உடையை அணிந்து உலகின் முக்கிய பெருநகரங்களில் இந்த தம்பதியர் புகைப்படங்களுக்கு உற்சாக போஸ் கொடுக்கும் காட்சி காண்போரின் கண்களுக்கு இளமை விருந்தாக அமைந்துள்ளது. இந்த புகைப்படங்களை எல்லாம் தங்களது ‘பேஸ்புக்’ மற்றும் ‘டுவிட்டர்’ போன்றவற்றில் பதிவேற்றம் செய்துவரும் இந்த ஜோடிக்கு ஏராளமான அபிமானிகள் நல்வாழ்த்துகளையும், சில நல்ல உள்ளம் கொண்டவர்கள் நிதி உதவியையும் வழங்கி வருகின்றனர்.
Average Rating