மிஸ் திருநங்கையாக சங்கவி தேர்வு!!
சேலம் நேரு கலையரங்கில் சேலம் திருநங்கைகள் நல சங்கம் சார்பில் மிஸ் சேலம் அழகி–2015 போட்டி நடந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூசணம் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசும் போது, சேலம் மாவட்டத்தில் 70 திருநங்கைகளுக்கு தனியாக வீடு வழங்கப்பட்டு இருக்கிறது. மற்ற கலைஞர்களை காட்டிலும் திருநங்கைகள் சிறப்பாக விளங்க வேண்டும். திருநங்கைகளை நம்முடைய சகோதரியை எப்படி பார்ப்போமோ அப்படி பார்க்க வேண்டும். அப்படி பார்த்தால் எந்த பிரச்சனையும் வராது. இந்த மனபக்குவத்தை அனைவரும் வளர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் மிஸ் சேலம் அழகி போட்டி நடந்தது. இதில் 50–க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர்.
இவர்கள் வண்ண வண்ண சேலை மற்றும் கவர்ச்சி உடைகளில் வந்து அனைவரையும் வியக்க வைத்தனர். இவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. நடை, உடை, பாவனை மற்றும் கேள்விகளுக்கு சரியாக பதில் கூறிய திருநங்கைகளில் 3 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
இவர்களில் மிஸ் சேலமாக சங்கவி தேர்ந்து எடுக்கப்பட்டார். 2–ம் பரிசை ஏஞ்சலும், 3–ம் பரிசை கமலியும் பிடித்தனர். இவர்களுக்கு நடிகர் ரஞ்சித் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். மிஸ் சேலமாக தேர்வு பெற்ற சங்கவிக்கு ரொக்கப்பணம் ரூ.10ஆயிரமும், 2–ம் பரிசு பெற்ற ஏஞ்சலுக்கு ரூ.6ஆயிரமும், 3–ம் இடம் பிடித்த கமலிக்கு ரொக்கம் ரூ.4 ஆயிரமும் வழங்கப்பட்டது. இந்த தொகைகளை இவர்கள் வைத்து கொள்ளாமல் திருநங்கைகள் நல சங்கத்திற்கு நன்கொடையாக வழங்குவதாக கூறி பணத்தை வழங்கினர்.
பின்னர் நடிகர் ரஞ்சித் சிறப்புரையாற்றி பேசியதாவது: சினிமா கலைநிகழ்ச்சி போல் பெரிய விழாவை திருநங்கைகள் நடத்தி இருக்கிறார்கள். இந்த விழாவில் விழிப்புணர்வு தகவல்களையும் கூறி உள்ளது பாராட்டுக்குரியது. மிஸ் சேலம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருநங்கைகள் அனைவரும் போட்டி போட்டு அழகாக வந்து வியக்க வைத்து உள்ளனர்.
இவர்களில் பலர் அறிவுத்திறமை மிக்கவர்களாக உள்ளனர். இவர்களை எனது படங்களில் கட்டாயம் பயன்படுத்தி கொள்வேன். திருநங்கைள் வாழ்வு சிறக்க, அவர்கள் எந்த கவலையும் இல்லாமல் வாழ நாம் அனைவரும் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். நம் வீட்டு விசேஷங்களுக்கு உறவினர்கள், நண்பர்களை அழைப்பது போல் திருநங்கைளையும் அழைத்து அவர்களுக்கு அங்கீகாரம் தரவேண்டும். இதுபோன்ற நல்ல செயல்கள் செய்ய அனைவரும் முன் வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் மிஸ் சேலம் சங்கவி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மிஸ் சேலமாக நான் தேர்ந்து எடுக்கப்படுவேன் என சிறிதும் நம்பவில்லை. என்னை தேர்ந்து எடுத்த குழுவினருக்கு நன்றி. எனது வாழ்வை திருநங்கைகள் வாழ்வு சிறக்க உதவி செய்வேன். ஏழை குழந்தைகள், அனாதை குழந்தைகளை படிக்க வைக்க என்னால் முடிந்த உதவிகளையும் செய்வேன். இதுபோல் முதியோர்களுக்கும் உதவி செய்வேன். எய்ட்ஸ் நோய் குறித்தும் விழிப்புணர்வு செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.