அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் குழாய் தீப்பிடித்து எரிந்து காயமடைந்த நோயாளி பரிதாப பலி!!
மத்தியப் பிரதேசம் மாநில தலைநகர் இந்தூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் நுரையீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட ராமேஷ்வர்(37) என்பவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சுவாசக் கோளாறு ஏற்பட்டு அவரது நிலைமை மிகவும் மோசமடைந்ததால் ஆக்சிஜன் உதவியுடன் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவரது முகத்தில் பொருத்தப்பட்டிருந்த ஆக்சிஜன் முகமூடி நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதனால் அவரது வாய், மூக்கு போன்றவை கருகிப் போனது. எரிச்சல் மற்றும் வேதனையால் நேற்றிரவு முழுவதும் அவதிப்பட்ட ராமேஷ்வர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு நேற்று ஏற்பட்ட தீ விபத்து காரணம் அல்ல, நுரையீரல் அழற்சி நோயால் தான் அவர் இறந்தார் என ஆஸ்பத்திரி வட்டாரம் கூறுகின்றது.
நேற்று ஏற்பட்ட தீ விபத்துக்கு ராமேஷ்வருடன் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்த உடனாளர்களில் யாரேனும் பீடி அல்லது சிகரெட் பிடித்திருக்கலாம். அந்த தீப்பொறி படுக்கையில் விழுந்து ஆக்சிஜன் முகமூடியை பதம் பார்த்திருக்கலாம் என காரணம் கருதப்படுகின்றது.